Monday, 11 October 2010

DEFIANCE


"நம்முடைய பழிவாங்கல் என்பது நாம் பிழைத்திருப்பதுதான்"

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மனி 'பெலுருஷ்யா'(Belorussia)-ஐ 1941-ல் பிடித்தது. வழக்கம்போல நாஜிப்படை இட்லரின் யூத அழிப்பு வெறியை நடைமுறைப் படுத்தினார்கள். மிகவேகமாக யூதர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு குடும்பத்தின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு நான்கு சகோதர்கள் மட்டும் காட்டுக்குள் ஓடிப் பதுங்கினார்கள். மூத்தவர்கள் இருவரும் 30 வயதைக் கடந்தவர்கள். அடுத்தவன் இருபது வயதுக்குள் இருப்பவன். இளையவன் பத்து பன்னீரண்டு வயதுக்காரன். நாஜிப்படையிடமிருந்து தப்பிப்பதர்காக அருகிலிருந்த காட்டுக்குள் பதுங்குகிறார்கள். காடு இவர்களுக்கு அத்துப்படி, வெளிநாட்டுக்காரனான ஜெர்மனியர்களுக்கு காட்டுக்குள் வழித்தெரியாது என்பதினால், காடு பாதுகாப்பான இடமாக கருதுகிறார்கள். எத்தனைநாள் இந்த காடுவாசம் என்பதுத் தெரியாது. பழங்களை உணவாக கொள்கிறார்கள்.


உணவைத்தேடிப் போனபோது இவர்களைப்போலவே இன்னும் சில யூதர்கள் தப்பிப்பதற்காக காட்டுக்குள் வருகிறார்கள். அவர்களும் இவர்களோடு சேர்ந்து காட்டில் தங்குகிறார்கள். இப்போது அவர்களுக்கும் சேர்த்து உணவு தேடவேண்டியதாகிறது. பக்கத்து நகரத்திலிருந்து தமக்கான உணவுப்பொருள்களை கவர்ந்து வருகிறார்கள். இப்படி சில நாட்கள் போகிறது. இன்னும் பலர் தப்பிவந்து இவர்களோடு அடைக்கலம் ஆகிறார்கள். அவர்களையும் சேர்த்து பாதுகாக்கவேண்டியதும், அவர்களுக்கு உணவு அளிப்பதும் இந்த சகோதர்களின் கடமையாகிறது. இந்நிலையில் தூரத்துகிராமத்தில் இருந்த இரண்டாவது சகோதரனின் மனைவியும் மகனும் கொல்லப்பட்டனர் என அங்கிருந்து தப்பித்துவந்தவர்கள் மூலம் தெரியவருகிறது. அதேப்போல் நகரத்தில் யூதர்களைக் காட்டிக்கொடுக்கும் காவல்துறை அதிகாரியை பழிவாங்க நினைக்கிறார்கள். மூத்தவனான 'தூவியா'(Tuvia) தன் பெற்றோர்கள் கொல்லப்பட்டதிற்கு காரணமான அந்த அதிகாரியை கொல்கிறான். கையில் ஆயிதமோ, உணவோ இல்லாமல் போகவே, அருகில் இருக்கும் நகரத்திற்குச் சென்று நாஜிக்களை தாக்கி உணவும், ஆயுதங்களையும் கவர்ந்து வருகிறார்கள். இதில் மூன்றாவது சகோதரன் நாஜிகளிடம் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை வருகிறது, அவன் காட்டுக்குள் தப்பி ஓடுகிறான், அவனை நாஜிக்கள் துரத்திச்செல்லுகிறார்கள். தம்பியை காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் மற்றவர்கள் திரும்பிவருகிறார்கள். தப்பி வந்த சகோதர்களிடையே சண்டை வருகிறது, இதற்கெல்லாம காரணம் இரண்டாதவன் 'ஜூஸ்'(Zus)தான் என்று சண்டை வந்து, இரண்டு சகோதர்களும் பிரிகிறார்கள். 'ஜூஸ்' முகாமைவிட்டு விலகி ருஷ்ய படைகளோடு சேர்ந்து சண்டைப்போட சென்றுவிடுகிறான். மூத்தவன் 'தூவியா' அங்கேயே தங்கி முகாமை பாதுகாப்பதில் தலைமை ஏற்கிறான். காலம் ஓடுகிறது, இன்னும் பல யூதர்கள் தப்பிவந்து இவர்களோடு காட்டில் அடைக்கலம் புகுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கும், உணவிற்கும் 'தூவியா'பொருப்பேற்கிறான். மூன்றான் சகோதரனாகிய 'அசேயல்'(Asael)-உம் தப்பிவந்து இவர்களோடு இணைந்துக்கொள்கிறான். பருவகாலம் மாறி பணிக்காலம் வருகிறது. பணியில் உணவின்றி வாடுகிறார்கள். இன்னிலையில் இவர்களைத்தேடி நாஜிப்படை வருகிறது. அவர்களோடு சண்டைப்போட்டு ஜெயிக்கிறார்கள். தொடர்ந்து இனி இங்கே தங்கமுடியாது என்பதினால் வேறு இடம் தேடிச்செல்லுகிறார்கள். அங்கே தங்களுக்கு தேவையான முகம்களை அமைத்துக்கொள்கிறார்கள். உணவு பற்றாக்குறை, தொற்றுவியாதி, பணிப்பொழிவு என பல இன்னல்களுக்கிடையே உயிரைத் தக்க வைத்துக்கொள்கிறார்கள். இந்த மோசமான சூழ்நிலையில் அவர்களிடையே விவாதம் வருகிறது, இங்கே கிடந்து சாவதைவிட காட்டைவிட்டு வெளியேறி விடலாம் என்று, அப்போது 'தூவியா' சொல்லும் வாசகம் தான் மேலே குறிப்பிட்ட


"நம்முடைய பழிவாங்கல் என்பது நாம் பிழைத்திருப்பதுதான்".



காலம் கடந்தோடுகிறது, வருடம் முடிகிறது. இந்நிலையில் நாஜிப்படை வீரன் ஒருவனை பிடித்துவருகிறார்கள். அவனை அனைவரும் அடிக்க வருகிறார்கள். கொல்ல வேண்டும் என்கிறார்கள். அவனோ அழுகிறான், தனக்கு மகன் இருப்பதாக கதறுகிறான். தன்னை உயிரோடு விட்டுவிடும் படி மன்றாடுகிறான். மற்றவர்களின் எதிர்ப்பை மீறி 'தூவியா' அவனை விடுவிக்கிறான். விடுவிக்கப்பட்ட அவன் விரைவில் நாஜிப்படையோடு வருகிறான். இங்கே இருந்து தப்பிப்போகும் சூழ்நிலையில், இளையவன் 'அசேயல்' பிந்தங்கி அவர்களுக்கு பாதுகாப்புத் தருகிறான். தப்பி ஓடியவர்கள் அடுத்த முனையில் ஒரு மிகநீண்ட சதுப்பு நிலத்தை கடக்க வேண்டிய சூழ்நிலைவருகிறது. அது கடக்க முடியாததாக தோன்றுகிறது. அதை கடந்தால் மட்டுமே பிழைக்கமுடியும் என்ற சூழ்நிலை, இல்லையேல் நாஜிக்களிடம் மாட்டிக்கொண்டு உயிர்விட வேண்டும். இங்கே அந்த மொத்த கூட்டமும் ஒரு முடிவெடுக்கிறது..அந்த சதுப்பு நிலத்தை கடப்பதென, ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு, குழந்தைகளையும், பெரியவர்களையும் தூக்கிக்கொண்டு ஒரு சங்கிலி தொடராக அவர்கள் அந்த சதுப்பு நிலத்தை பல மணிநேரம் கடந்து கடக்கிறார்கள். இந்த சம்பவம் சரித்திரத்தில் முக்கியமான சம்பவங்களில் ஒன்று. அதீத தன்நம்பிக்கை அல்லது உயிர்வாழ்ந்தே தீரவேண்டிய கட்டாயத்தின் விளிம்பில் எடுத்த அந்த முடிவு எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று. போராடி கரையேரிய அந்த குழுவை நாஜிப்படை தாக்குகிறது. எதிர்த்து போராடுகிறார்கள். பீரங்கி கொண்டுதாக்கப்படுகிறார்கள். தாக்குபிடிக்க முடியாத நிலை வரும்போது, மறுபுறும் எங்கிருந்தோ வரும் இரண்டாம் சகோதரன் 'ஜூஸ்'(ZUS) நாஜிப்படையை தாக்கி அழிக்கிறான். தப்பித்த அனைவரும் காடுநோக்கி போகிறார்கள்.


அந்த மொத்த குழுவும் அதன் பிறகு இரண்டாண்டுகள் காட்டில் முகாம் அமைத்து தங்கினார்கள். அங்கே மருத்துவமனை, பள்ளிக்கூடம் என எல்லாம் அடிப்படை தேவைகளையும் அமைத்து வாழ்ந்தார்கள். ஒருவழியாக போர் முடிந்துவெளியே வந்த போது அவர்கள் 1200 பேர்களாக இருந்தார்கள். அந்த நான்கு சகோதர்களும் காப்பாற்றியது 1200 பேர்கள், அவர்களுடைய தலைமுறைகள் என இப்போது பல ஆயிரங்கள் கடந்துவிட்டனர். அந்த சகோதர்களில் மூன்றாவதனான 'அசேயல்' ருஷ்ய படையில் சேர்ந்து போரிட்டு இறந்துபோனான். அவன் காட்டில் இருந்தபோது மணந்துக்கொண்ட மனைவியின் மூலம் பிறந்த குழந்தையை பார்க்கவே இல்லை.'தூவியாவும்' 'ஜூஸ்'-ம் பின்னர் அமெரிக்காவில் முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள்.
அந்த 'பெலிஸ்கி சகோதர்கள்'(Bielski) 'தூவியா' 'ஜூஸ்' 'அசேயல்' மற்றும் 'அரோன்' செய்த சேவை பின்னர் கண்டுக்கொள்ளப்படவேயில்லை. அவர்களுக்கான எந்த அங்கிகாரமும் தரப்படவில்லை.


இந்த வாழ்க்கையை பதிவுசெய்யும் 'Defiance' என்கிற இந்தப்படம் மிகச்சிறந்து நடிப்பையும், உரையாடலையும் கொண்டது. ஜேம்ஸ்பாண்ட் நடிகர் 'டேனியல் கிரேக்கின்' மிக அற்புதமான நடிப்பை காணலாம். இரண்டாம் உலப்போரும், நாஜிக்களின் கொலைவெறியும் பலப்படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப்படம் வேறொறுத்தளத்தில் இயங்குகிறது. உயிர்வாழ்தலில் தேவையை, அவசியத்தை இந்தப்படம் விவரிக்கிறது.


ஒரு இனம் அழிக்கப்படும் போது அந்த இனம் தன்னை தற்காத்துக்கொள்வதே, உயிர்த்திருப்பதே பகைவனை பழிவாங்வதாகும் என்ற செய்தியை வரலாற்று உண்மை சம்பவத்தைக்கொண்டு இந்த படம் நமக்குச்சொல்லும் பாடம்.


பல வசனங்கள் குறிப்பிடப்படவேண்டியவை


"நாம் மிருகங்கள் போல் வேட்டையாடப்படலாம், அதற்காக நாம் மிருகங்களாக முடியாது"


"நாம் இங்கே மனிதர்களாக வாழுவோம், உயிர்வாழ முயற்சித்தலில் நாம் மரணிக்க நேர்ந்தாலும் குறைந்தபட்சம் மனிதர்களாக சாவோம்"



No comments:

Post a Comment