
வயசு: 39
தொழில்: ஹாலிவுட்ல ஒரு முக்கியமான இயக்குனர்
எடுத்தது: 6 படங்கள், Following (1998), Memento (2000), Insomnia (2002), Batman Begins (2005), Prestige (2006), The Dark Knight (2008) (இதுல 4 IMDB Top 250-ல இருக்கு...)
பொழுதுபோக்கு: படம் பார்க்கறவங்களோட மூளையைக் குழப்பறது
பிடிச்சது: மனநோய் இருக்கற கதாபாத்திரங்களை
பிடிக்காதது: Linear-ஆ இருக்கற படங்களை
சிறப்பம்சம்: அதைத்தான் இந்த பதிவுல தெரிஞ்சுக்கப்போறீங்க..
சில படங்கள்ல பார்வையாளனை சிரிக்கவச்சே வயிறு வலி வரவழைச்சுடுவாங்க.. சில படங்கள்ல பயமுறுத்தியே ஹார்ட் படபடன்னு அடிச்சுக்கும்.. கிறிஸ்டொஃபர் நோலன் கொஞ்சம் வித்தியாசம்.. பார்வையாளனின் மூளையோட விளையாடறவர்.. எப்படின்னு பார்ப்போம்..
Non-linear கதை:
Non-linear-னா என்னன்னு தெரிஞ்சவங்க இந்த பாராவை ஸ்கிப் பண்ணிடுங்க.. படத்துல இருக்கற காட்சிகள் அல்லது அத்தியாயங்கள், எந்த காலவரிசையில நடந்ததோ, அதே வரிசையில வராம, மாத்தி மாத்தி வந்ததுன்னா அதுதான் non-linear..ஃப்ளாஷ்பேக் கொஞ்சம் வேறவகை.. அதாவது 1234567 இதுதான் 7 காட்சிகள் நடந்த வரிசைன்னா, படத்துல வர்றது 23414567 அப்படின்னு வரும்.. இதுல 4 ரெண்டு தடவை இருக்கே..? அதாவது 4வது காட்சிக்கு நடுவுல யாராவது ஒரு கதாபாத்திரம் முன்னாடி நடந்ததை நினைச்சுப்பார்க்கிற மாதிரியோ, இல்ல யார்கிட்டயோ சொல்லற மாதிரியோ வரும்.. ஃப்ளாஷ்பேக் (1வது காட்சி) முடிஞ்சவுடனே விட்ட இடத்துல இருந்து நிகழ்காலக்கதை (4வது காட்சி) திரும்ப தொடரும்.. non-linear அப்படியில்ல.. எந்த கதாபாத்திரமும் நினைச்சுப் பார்க்கற மாதிரியோ, சொல்லற மாதிரியோ வராது.. 1234567 இதுதான் நடந்த வரிசைன்னா, படத்துல வர்றது 4271365 மாதிரி மாத்தி மாத்தி வரும்.. நாமதான் குத்துமதிப்பா புரிஞ்சுக்கணும்..
சில பேர் கதை சொல்லிட்டு இருக்கும்போது ஏதாவது ஒரு விஷயத்தை சொல்ல மறந்துடுவாங்க.. பின்னாடி தேவைப்படும்போதுதான், அடடா அதை சொல்ல மறந்துட்டேனே அப்படின்னு, விட்ட சீனை சொல்லுவாங்க.. க்வெண்டினோடReservoir Dogs, Kill Bill ரெண்டு படத்துலயும் வர்ற non-linear கிட்டத்தட்ட இந்த வகைதான்.. புரிஞ்சுக்கறது ரொம்ப சுலபம்.. அதுமட்டுமில்லாம பெரும்பாலான படங்கள்ல non-linearity வர்றதே படம் பார்க்கறவங்களுக்கு சில காட்சிகளை சொல்லாததால கதையில வர்ற ஆர்வம்தான்..
ஆனா Memento படத்துல non-linear டெக்னிக்கை பயன்படுத்துனதுல ஒரு புரட்சின்னுதான் சொல்லணும்.. இது எவ்வளவு முக்கியமானதுன்னு சொல்ல கொஞ்சம் திரைப்பட வரலாற்றில நடந்த சில சம்பவங்களை பார்க்கவேண்டி இருக்குது..
1890-கள்ல வந்த படங்கள் ஊமைப்படங்களாகவே இருந்தது.. அப்பறம் கதாபாத்திரம் சோகமா இருந்தா, அதே சோகத்தை பார்க்கிறவங்களுக்கும் கொண்டு வரணும்னு, சோகமா வயலின் இசையை சேர்த்தாங்க..
1920-கள்ல சில படங்கள்ல த்ரில் சேர்க்கிறதுக்காக, முன்னாடி நடந்த மர்மமான ஒரு விஷயத்தை சொல்லற மாதிரி ஃப்ளாஷ்பேக் கொண்டுவந்தாங்க..
1954-ல வந்த Rear window படத்துல, கால் உடைஞ்ச ஹீரோ படம் முழுக்க நகர முடியாம ஒரே ரூம்ல ஒரே நாற்காலியில உட்கார்ந்துகிட்டு, எதிர்வீட்டை நோட்டமிட்டுகிட்டு இருப்பாரு.. ஹீரோ எப்படி ஃபீல் பண்ணறாரோ அதே மாதிரி நாமும் ஃபீல் பண்ணணும் அப்படிங்கிறதுக்காக, படம் முழுக்க ஒரே அறையில்தான் கேமிரா இருக்கும்.. ஹீரோவோட அதே பார்வையிலதான் நாமும் பார்ப்போம்.. ஹீரோ எதிர் வீட்டைப் பார்க்க, நாம பார்க்கற மாதிரி தோணும்.. கடைசில, எதிர்வீட்டுக்காரன் ஹீரோவைத் தாக்க வர்றப்போ, நம்மைத் தாக்க வர்ற மாதிரி பயம் வரும்.. அந்த ஃபீலிங்கை வெறும் கேமிராவை வச்சு சாதிச்சார் ஹிட்ச்காக்..
1972-ல வந்த காட்ஃபாதர் படத்துல, மார்லன் பிராண்டோ அடிக்கடி சொல்லற முக்கியமான வசனம் இது: Never let others know what you think. அப்படி சொல்லற மார்லன் பிராண்டோ என்ன நினைக்கிறார்னு நமக்கு தெரியக்கூடாது இல்லையா.. அதுனால அவர் வர்ற காட்சிகள் முழுக்க அவர் தலைக்கு நேரா மேல லைட்டிங் வச்சு, அவரோட கண்கள் எப்போதும் நிழல் இருட்டுலதான் இருக்கும்.. ஒருத்தரோட கண்களைப் பார்க்காம, அவர் சந்தோஷப் படறாரா, வருத்தப்படறாரா, பயப்படறாரான்னு சொல்லறது கஷ்டம்.. அதுனால அவர் என்ன நினைக்கிறார்னு புரிஞ்சுக்க முடியாத குழப்பத்தை நமக்கு உண்டாக்கினாங்க..
இசை, வசனம், கதை, ஃபளாஷ்பேக், கேமிரா, லைட்டிங் எல்லாமே படத்தின் elements (அம்சங்கள்). இந்த அம்சங்களை வச்சு எப்படி பார்வையாளனை ஃபீல் பண்ண வச்சுருக்காங்களோ, அதே மாதிரி, நம்மாளு நோலன் எடுத்த Memento படத்துல, திரைக்கதை அப்படிங்கிற ஒரு அம்சத்தை வச்சு, கதாபாத்திரத்துக்கு இருக்க அதே ஃபீலிங்கை பார்வையாளனுக்கு கொடுத்திருக்கார்..
ஹீரோவுக்கு Short Term Memory Loss. சில நிமிடங்களில் நடந்தது மறந்து விடும். (கஜினி சூர்யா போல) அதனால் யார் நல்லவர், யார் கெட்டவர், யார் நண்பர், யார் எதிரி, யாரை நம்பலாம் நம்பக்கூடாதுன்னு எதுவுமே புரியாது ஹீரோவுக்கு. ஹீரோவுக்கு இவ்ளோ குழப்பம் இருக்கப்போ, அந்த குழப்பம் நமக்கும் இருக்கணும் இல்ல. ஆனா நமக்குதான் Short Term Memory Loss இல்லயே. சாதாரணமா கதை சொன்னா, நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு நமக்கு தெரிஞ்சுடும். அதனால, படத்துல கதையே Reverse-ல போகுது. இதை reverse chronology-ன்னு சொல்லுவாங்க.. non-linear-ல ஒரு வகை இது.. அதாவது படத்தோட முதல் காட்சியே, கிட்டத்தட்ட climax மாதிரிதான். வேற யாரும் இந்த அளவுக்கு non-linear-ஐ பொருத்தமா உபயோகப்படுத்தியதா தெரியல..
நோலன் சொன்ன அற்புதமான கருத்து இது:
நாவல்களில் ஒரு கதாபாத்திரம் நினைப்பதை, அப்படியே வாசிப்பவனுக்கு சொல்வது போல narration-ஆக எழுதலாம்.. ஆனால், திரைப்படங்களில் அதை அப்படியே காட்ட ஒளியும், ஒலியும் இருப்பதால், பெரும்பாலும் narration தேவையில்லையென தவிர்த்து விடுகின்றனர்.. இதனால திரையில் பல விஷயங்களைப் பார்த்தும், கேட்டும், கதாபாத்திரத்தை விட அதிகமாக தெரிந்துகொள்கிற வசதி வந்துவிடுகிறது பார்வையாளனுக்கு..
படம் முழுக்க, கதாபாத்திரம் மட்டுமின்றி, அங்கு ஒரு கேமிராமேன் நின்று படமெடுக்கிறார் என்ற உள்ளுணர்வும் பார்வையாளனுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.. இதனால் நாவல்களில் கிடைக்கிற, கதாபாத்திரத்துடன் ஒன்றுவது போன்ற உணர்வு சினிமாவில் கிடைப்பதில்லை.. கதாபாத்திரத்துக்கு எவ்வளவு விஷயம் தெரியுமோ, அவ்வளவு விஷயம் மட்டுமே பார்வையாளனுக்கும் தெரிந்தால், பார்வையாளனும் கதாபாத்திரத்தைப் போலவே யோசிப்பான்.. அதனால் கதாபாத்திரத்தோடு ஒன்றி விடுவான்.. (Rear Window மாதிரி..) Memento-வின் ஹீரோ கதாபாத்திரம் காலையில் எழுந்தால், அது யார் அறை, அது என்ன ஊர், என்ன நாள் எதுவுமே ஹீரோவுக்கு தெரியாது.. கதையை நேராக சொன்னால், (கஜினி படம் போல) ஹீரோ எங்கிருக்கிறான், ஏன் இங்கிருக்கிறான் என்று பார்வையாளனுக்குத் தெரிந்துவிடும்.. அதெல்லாம் பார்வையாளனுக்குப் புரிந்துவிட்டால், ஹீரோவின் மனக்குழப்பத்தை உணரமுடியாது.. எனவே கதையோடு ஒன்றி இருக்கமாட்டார்கள்.. அதனாலேயே non-linear-ஆக எடுத்தேன்..
இது மட்டும் இல்ல.. இன்னொரு விஷயம் சொன்னாரு.. அதாவது...
வாழ்க்கையில நாம கேள்விப்படற அல்லது தெரிஞ்சுக்கற எல்லா விஷயங்களையும், நடந்த அதே வரிசையில தெரிஞ்சுக்கறது இல்ல.. உதாரணத்துக்கு, முதல்ல உங்க பக்கத்துவீட்டுக்காரர் ஒரு குடிகாரன்னு தெரியுது, அப்பறம் அவர் எங்க வேலை பார்க்கறார்னு தெரியுது, அப்பறம் அவர் சொந்த ஊர் எதுன்னு தெரியுது.. இதெல்லாம் வேற வேற வரிசையில தெரிஞ்சாலும், நம்மால சரியா பொருத்தி முழுசா புரிஞ்சுக்க முடியுது.. நாம வாழ்க்கையிலேயே தினமும் non-linear இருக்கு.. இதெல்லாம் நமக்கு புதுசு இல்ல..
அது மட்டுமில்ல.. ஒரு கதையை எப்படி சொல்லணுமோ அப்படி சொன்னா அது linear.. மாத்தி சொன்னா, அது non-linear..Memento-வை பார்வையாளன் ஃபீல் பண்ணற மாதிரி சொல்லணும்னா, இப்படிதான் சொல்ல முடியும்.. அதுனால இது non-linearஇல்ல.. linear-தான்.. ஒருவேளை இந்த படத்தை நேரா சொன்னாதான் பார்வையாளனை ஃபீல் பண்ண வைக்கணும்கிற நோக்கம் நிறைவேறாது.. குழப்பத்தை அனுபவிக்க, பார்வையாளன் காட்சிகளை மாத்தி யோசிச்சுக்க வேண்டியிருக்கும்.. அதுனால இந்த படத்தை நேரா எடுத்திருந்தாதான் அது non-linear.. -அப்படிங்கறாரு..
புரிஞ்சுடுச்சா..? இவரு பேசுறதே இப்படி இருக்கறப்போ, ரெண்டு வருஷம் யோசிச்சு படம் எடுத்தா எப்படி இருக்கும்?
Memento-வை சுருக்கமா எழுதினாலும் ஒரு தனி போஸ்ட் வேணும்.. அதுனால அடுத்த போஸ்ட்ல Memento-வைப் பார்க்கலாம்.. அதுக்கு முன்னாடி படத்தை ஒருமுறை பார்த்துட்டு வந்துட்டீங்கன்னா, படிக்க வசதியா இருக்கும்..
Psychological thrillers:
Psychological thriller அப்படிங்கறது த்ரில்லர் படங்கள்ல ஒரு உட்பிரிவு.. இந்த மாதிரி படங்கள்ல, ஹீரோவும் வில்லனும் மற்ற த்ரில்லர் படங்கள் மாதிரி துப்பாக்கி எடுத்துட்டு துரத்திட்டே இருக்க மாட்டாங்க.. ரெண்டு பேருக்கிடையில, Mind gameஎனப்படும் உளவியல் ரீதியான விளையாட்டுக்களே நடக்கும்.. பொதுவா வில்லன் புத்திசாலியா இருந்தாதான், ஹீரோ கேரக்டருக்கு மரியாதை கூடும்.. (இதுனாலதான் முதல்வன், படையப்பா, சிவாஜி போன்ற படங்கள்ல வில்லன் கேரக்டருக்கும் ஒரு’கெத்து’ இருக்குனு நினைக்கிறேன்..) Psychological thriller படங்கள்ல கேட்கவே வேண்டாம்.. வில்லன் பெரும்பாலும் ஹீரோவை விட புத்திசாலியா இருப்பான்.. ஹீரோவோட பலம், பலவீனம், எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு எல்லாம் தெரிஞ்சு வச்சுருப்பான்.. ஹீரோவும் அவனை சமாளிக்கற அளவுக்கு இருப்பாரு..
நாமெல்லாம் செஸ் விளையாடினா அடுத்த மூவ் என்ன பண்ணலாம்னுதான் யோசிப்போம்.. ஆனா, விஸ்வநாதன் ஆனந்த் மாதிரி ஜாம்பவான்கள் எதிராளி என்ன பண்ணுவான், அடுத்தது நாம என்ன பண்ணலாம், அதுக்கு எதிராளி திரும்ப என்ன பண்ணுவான் அப்படின்னு அடுத்த ஆறேழு மூவ் யோசிப்பாங்களாம்.. Psychological thriller படங்கள்ல ஹீரோவும் வில்லனும் அப்படிதான் யோசிப்பாங்க.. அடுத்தவங்க என்ன பண்ணுவாங்க, அதை எப்படி சமாளிக்கறது அப்படின்னே போட்டி இருக்கும்..
நோலனோட எல்லா படமுமே இந்த வகைப்படங்கள்தான்.. Psychological Thriller வகைக்கே இவர் படங்கள்தான் உதாரணம்னு சொல்லலாம்..
வேகமான காட்சிகள்:
எப்படி கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தணும், எவ்வளவு நேரம் ஒரு காட்சியைக் காட்டணும், எப்படி கதையில பிரச்சினையைக் கொண்டுவரணும் இப்படியெல்லாம் ஹாலிவுட் படங்கள்ல பல திரைக்கதை விதிமுறைகள் இருக்கு.. நோலன் எதையும் மதிச்சதில்லை.. குப்ரிக், க்வெண்டின் எல்லாம் மெதுவா கதை சொல்லற வகைன்னா, இவர் அதுக்கு நேரெதிர்.. பரபரன்னு வேகமா போகும் காட்சிகள்..
ஹீரோவும் வில்லனும் யோசிக்கறதை நாம புரிஞ்சுக்கறதுக்குள்ள, அடுத்த சீன் வந்துடும்.. இதெல்லாம் பார்வையாளனுக்கு புரியணுமே அப்படிங்கற கவலையெல்லாம் எப்பவுமே கிடையாது நோலனுக்கு..
வேகமான காட்சிகள்.. ஹீரோ வில்லன் ரெண்டு பேரும் புத்திசாலித்தனமா பேசிக்கறாங்க, உளவியல்ரீதியா விளையாடறாங்க.. அதுக்கு மேல non-linear வேற.. எப்படிப்பா படம் புரியும்னு நோலனைக் கேட்டா, “சரிதானே.. நான் ரெண்டு வருஷமா யோசிச்சது, உங்களுக்கு எப்படி ரெண்டு மணி நேரத்துல முழுசா புரியும்?”-னு சொல்லறாரு..
ஆனா, இவர்கிட்ட பிடிச்ச விஷயமே, சும்மா குழப்பிவிட்டுப் போறதில்லை இவரோட நோக்கம்.. குழப்பத்துக்குப் பின்னாடி, திரைக்கதையில புதுமைகள், கதாபாத்திர படைப்பில் புதுமைகள்னு பல விஷயங்கள் இருக்கும்.. அந்த புதுமையான அனுபவத்தைக் கொண்டுவர குழப்பம் தவிர்க்க முடியாததாக இருக்கும்.. பலமுறை பார்த்து ஒரு வழியா குழப்பத்தைப் போக்கினதுக்கு அப்பறம், அடடா இப்படி ஒரு படம் எடுத்துருக்காரே அப்படின்னு ஒரு வியப்பு வரும் பாருங்க.. அதுக்காகவே படம் பார்க்கணும்..
திரைக்கதை எழுதுவதில் புதுமை:
திரைக்கதை எப்படி எழுதணும்னு சில விதிமுறைகள் இருக்கு.. Capital Letters, Small Letters, Paragraph, Explanation of characters, places அப்படின்னு பல விஷயங்கள் இருக்கு.. ஏன் இப்படிதான் எழுதணும்னு அந்த ரூல்ஸையும் தூக்கி குப்பையில போட்டுட்டாரு.. எல்லாரும் அவர் எழுதற புதுமாதிரியான ஸ்டைலை ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லறாங்க..
உதாரணத்துக்கு, இது Memento-வின் ஆரம்பக்காட்சி..
A POLAROID PHOTOGRAPH, clasped between finger and thumb: a crude, crime scene flash picture of a MAN'S BODY lying on a decaying wooden floor. A BLOODY MESS where his head should be.
இதை மற்ற திரைக்கதை எழுதுபவர்கள் எழுதினால், கிட்டத்தட்ட இந்த ஸ்டைலில் இருக்கும்..
We see A POLAROID PHOTOGRAPH which is clasped between finger and thumb: there is a crude, crime scene flash picture of a MAN'S BODY lying on adecaying wooden floor. Now we see a BLOODY MESS where his head should be.
இந்த அதிகப்படியான வார்த்தைகள் நாம் படிப்பது வெறும் ஸ்கிரிப்ட்தான் அப்படிங்கிற உள்ளுணர்வை தந்துகிட்டே இருக்கு.. அந்த உணர்வே முழுமையா காட்சியை கற்பனை செஞ்சு பார்க்கவும் தடையா இருக்கு.. அதனால தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தாம, படிக்க, படிக்க, அப்படியே காட்சி மனசுல விரியற உணர்வை கொண்டுவருது இவரோட ஸ்கிரிப்ட்...!!
வசூலில் பெரிய சாதனைகள்:
முதல் படம் எடுக்க இவர்கிட்ட காசு இல்லை.. தயாரிப்பாளர் யாரும் உதவி பண்ணல.. இவரும், இவரோட நண்பர்களும் சேர்ந்து வெறும் 6000 டாலர் செலவில், சனி ஞாயிறு மட்டும் ஷூட்டிங் எடுத்து முடிச்ச படம் Following (1998). (தமிழ்ல வாமணன்னு ஒரு படம் வந்துச்சே.. அது இந்த படத்தோட தழுவல்தான்..) முதல் படத்தை வச்சுதான் அடுத்த படத்துக்கான தயாரிப்பாளரை பிடிக்க முடிஞ்சது.. இந்த விஷயத்தில் க்வெண்டினுக்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள்..
ஆனா, இப்போ வார்னர் ப்ரதர்ஸ் தயாரிப்பில் படம் எடுக்க ஆரம்பிச்சப்பறம், காசுக்கு பஞ்சமேயில்லை.. வசூலும் கொட்டுது.. இதுவரை உலக வரலாற்றில் 6 படங்கள்தான் 1 பில்லியன் டாலர் வசூலை தாண்டியிருக்கு.. அதுல Dark Knight(2008)-ம் ஒன்னு.. (ஏழாவதா சுறா படம் இருக்கும்னு பரவலா பேசிக்கறாங்க..)
இவருக்கு ஒரு சகோதரர் இருக்கார்.. ஜொனாத்தன் நோலன்.. அவரும் பல படங்கள்ல சேர்ந்து வேலை பார்த்திருக்கார்.. அவர் எழுதுன சிறுகதையில இருந்துதான் Memento கதை உருவாச்சாம்..
இவரோட அடுத்த படம் Inception.. படம் பேரை நல்லா ஞாபகம் வச்சுக்குங்க.. ஏன்னா, இன்னும் ரெண்டு மாசத்துல ஊரெல்லாம் இந்த படத்தைப் பத்திதான் பேச்சாயிருக்கும்..
ஜூலை 16ம் தேதி ரிலீஸாகுது.. கொஞ்சமா கதையை சொல்லி இருக்காங்க.. அதுக்கே தலை சுத்துது.. கதை என்னன்னா..
ஹீரோ டி-காப்ரியோ அடுத்தவங்களோட கனவுக்குள்ள புகுந்து, அங்கேயிருந்து அவங்களோட பர்சனல் விஷயங்களை எல்லாம் அவங்களுக்கு தெரியாமலேயே திருடி, அதை வச்சு பணம் சம்பாதிக்கறவன்.. இதனால, அவனோட வாழ்க்கையில முக்கியமான விஷயங்களை இழந்துடறான்.. அது திரும்ப கிடைக்கணும்னா, அவன் ஒரு கஷ்டமான கனவுத்திருட்டை செய்யணும்னு சொல்லறாங்க.. அந்த வேலையை செய்யறதைத் தடுக்க, இவனை விட சக்திவாய்ந்த ஒரு வில்லன் கூட்டம் அலையுது.. அதை எப்படி சமாளிக்கறான் அப்படிங்கிறதுதான் படம்.. கனவுக்குள்ள கனவுன்னு சுத்திகிட்டே இருக்குமாம்.. பல கனவுலகங்கள்ல ஒரே சமயத்துல நடக்கிறதை, மாத்தி மாத்தி காட்டியிருக்காங்களாம்.. பல பேர் மாத்தி மாத்தி narration பண்ணற மாதிரி வருதாம்..
படத்தோட கான்செப்ட்டை வச்சு ஒரு கேம் கூட வச்சுருக்காங்க.. http://inceptionmovie.warnerbros.com/






No comments:
Post a Comment