Thursday, 29 July 2010

Nandha - Scene of Judgement



பாலா
தமிழ் சினிமாவின் பிதாமகன் படைப்புகள்..நந்தா

Enge Sellum - Sethu

பாலா
தமிழ் சினிமாவின் பிதாமகன் படைப்புகள்

Tuesday, 27 July 2010

ரோமன் பொலன்ஸ்கி – 3

.

ரோமன் பொலன்ஸ்கியின் சில சொற்கள் :

  • “நாம் படத்தில் எந்தக் குறையும் இருக்கக்கூடாதென்று நினைத்தாலும், சிலசமயங்களில் அவை உண்டாகிவிடுகின்றன. ஒரு முழுநீளத் திரைப்படத்தில் சிறுகுறைகள் எப்படியோ மன்னிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் ஒரு குறும்படத்துக்கு அப்படி இல்லை, அது மிகமிக நேர்த்தியாக, நுண்மையாக செதுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குறும்படங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எடுக்கப்பட்டபோதும், மிகச்சில நல்ல குறும்படங்களே உலகில் உள்ளன.”
  • “நான் விரும்பத்தக்க மனிதர்களைப் பற்றிப் படமெடுப்பதே இல்லை. பலவீனங்கள் நிறைந்த கதாபாத்திரங்கள்தான் விரித்துரைப்பதற்கு ஏராளமான நுணுக்கங்களைக் கொண்டிருக்கின்றன.”

  • “வன்முறையை அது எப்படிப்பட்டதோ அப்படித்தான் படத்தில் காட்டவேண்டும். நீங்கள் அதை நிஜத்தன்மையோடு காட்டவில்லை என்றால், அதுதான் ஒழுக்கமின்மையும் கேடு விளைவிக்கக் கூடியதும் ஆகும். ஒரு வன்முறைக் காட்சியில் மக்கள் வருத்தமும் எரிச்சலும் அடையவில்லை என்றால், அதுதான் தடை செய்யப்படவேண்டிய காட்சி.”
  • “ஒரு படம் இயக்குவதென்பது கண்களை மூடிக்கொண்டு ஓவியம் வரைவதைப் போன்றது”
  • “படப்பிடிப்பின்போது, ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கிறோம். பகுதி பகுதியாகத்தான் திரையிலும் ‘ரஷ்’ பார்க்கிறோம். அவற்றை ஒன்றாக ஒரே படமாகச் சேர்க்கும்போதும், அவை சிறுசிறு பகுதிகளாகவே நன்றாக நினைவில் நீடிக்கும், அதனால் நம்மால் அதை ஒரே கோர்வையாக மொத்தமாகப் பார்க்கவே முடியாது. படத்தை இறுதி செய்யும் போதும், முழுப்படம் என்பது ஒரு உள்ளுணர்வாகத்தான் நமக்கு இருக்கும். முன்னோட்டத் திரையீடுகளிலும் நாம் அதை முழுப்படமாகப் ‘பார்க்க’வே முடியாது. காரணம், ஒரு படத்தின் பின்னாலுள்ள எத்தனையோ விஷயங்கள் நம் கவணத்தை சிதறடிக்கும். ஒவ்வொருமுறை முழுப்படத்தைப் போட்டுப் பார்க்கும்போதும், அதில் ஒன்றிரண்டு காட்சிகள் விடுபட்டுவிட்டதாக எனக்குத் தோன்றுவதுண்டு. “அந்தக் காட்சி படத்தில் வந்ததா?” என்று நான் யாரிடமாவது கேட்பேன், ஏனென்றால் அதைப் பார்த்ததாக நினைவே இருக்காது. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தைப் புதிய பார்வையாளனைப்போல் பார்க்க முடியும், சிறுசிறு தகவல்களை மறந்து ஒரு முழுத் தொகுதியாக அப்போதுதான் நான் முதல் முறை பார்ப்பேன்.”
  • “கணநேரத்தில் தோன்றும் ஆசைகளின் வெளிப்பாடுகளே எனது படங்கள். நான் அதிகமும் எனது உள்ளுணர்வையே பின்தொடர்வேன், ஆனால் அதில் ஒரு ஒழுங்கான வழிமுறை இருக்கும்.”

  • “நீங்கள் திரையரங்கில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பதை, திரைப்படம் கண்டிப்பாக மறக்கடிக்க வேண்டும்.”
  • “குறும்படம் என்பது சிறுகதை எழுதுவதைப் போன்றது, நீங்கள் ஒரு காட்சியிலோ ஒரு ஷாட்டிலோ கூடத் தவறிவிடக்கூடாது. ஒரு நீளமான வடிவம் மிகுந்த சகிப்புத்தன்மையுடையது, சில குறைகளை மறைத்துவிடும் அளவுக்குப் போதுமான விஷயங்கள் அதில் இருக்கும். ஒரு 80 சதவிகிதம் சரியாக இருந்தாலே முழுநீளப் படத்துக்குப் போதும், ஆனால் ஒரு குறும்படம் நூறு சதவிகிதம் சரியாக இருக்க வேண்டும்.”

  • [“தி பியானிஸ்ட்” சுயசரிதைப் புத்தகத்தைப் பற்றி] “இந்தக் கதையைத்தான் நான் இத்தனை வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்தேன்..”
  • “திரைப்பட வேலைகளின் மீதான காதல் முக்கியக் காரணம்தான், ஆனால் அதைவிடவும் படைப்பு மனத்தின் உந்துதலாலேயே நான் தொடர்ந்து படமெடுக்கிறேன்”
  • “என்னை முழுமையாகத் திருப்திப்படுத்திய ஒரு படத்தை நான் இதுவரை எடுக்கவில்லை.”

  • “நான் பார்த்த நடிகர்களிலேயே உடன்பணியாற்றுவதற்கு மிக எளிதானவர் ஜாக் நிகல்ஸன் மட்டுமே. முதலில் அவர் மிகுந்த தொழில்முறையானவர், இரண்டாவது நீங்கள் என்ன சொன்னாலும் அவர் மிக எளிதாக அதைச் செய்துவிடுவார். அவர் இயக்குனரையும் எழுத்தாளரையும் கெடுத்துவிடக்கூடியவர், ஏனென்றால் நீங்கள் ஒரு உரையாடலைத் தவறாகவோ, கேட்பதற்கு விகாரமாக இருக்கும்படியோ எழுதிக்கொடுத்தாலும் அவர் பேசும்போது அது சரியாகவே ஒலிக்கும். அவர் எதைப் பேசினாலும் கச்சிதமாக இருக்கும். அவர் எதையும் மாற்றும்படிக் கேட்பதே இல்லை. நான் உடன்பணியாற்றிய மற்ற எல்லா நடிகர்களும், ஏதாவது ஒரு சமயத்தில் என்னிடம், “இதை நான் மாற்றிக்கொள்ளலாமா?” அல்லது “இந்த சொல்லை எடுத்துவிடட்டுமா?” என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஜாக் அப்படிச் சொன்னதே இல்லை. நிஜமாகவே ஆச்சர்யம்தான்.”
  • “சாதாரன காதல் ஆர்வமூட்டுவதாக இருக்காது. என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் அது மிகுந்த சலிப்பூட்டுவதாகவே இருக்கும்”

  • “ஆகச்சிறந்த படங்கள் வேறு யாராலும் அல்ல இயக்குனரால் மட்டுமே உருவாகின்றன.”
  • “இந்தக் காலத்தில் முழுக்க அற்புதமான ஒரு மனிதரைப் பற்றி வாரஇதழில்கூட எழுத முடியாது. அவரில் ஒரு சிறு குறையாவது காண முடியுமா என்றுதான் பார்ப்பார்கள். அதுபோலவே, ஒரு கதாபாத்திரத்தின் பலவீனங்களின் மூலமும் குறைகளின் மூலமும் அவற்றை நம்மோடு அடையாளப்படுத்திக் கொண்டால்தான் படமெடுக்க முடியும். ‘திருவாளர் அற்புத’த்தைப் பற்றிப் பேசுவது மிகுந்த சலிப்பானது.”

  • “நான் ஒவ்வொரு படத்தை ஆரம்பிக்கும்போதும் அது எனக்கு ஒரு புறப்பாடு போன்றதுதான். ஒரு படத்தை எடுத்து முடிக்க நெடுங்காலம் ஆகிறது, ஆகவே அடுத்த படத்துக்குள் நுழையும்போது ஏற்கனவே ஒரு வித்தியாசம் ஏற்பட்டிருக்கும், ஒன்றிரண்டு ஆண்டுகள் வளர்ந்திருப்பேன்.”
  • “நான் ஏன் எப்போதும் தீயசக்தியைப் (Devil) பற்றிப் படமெடுக்கிறேன் என்று எல்லாரும் கேட்கிறார்கள். ஆனால் நான் அப்படிப்பட்ட படங்கள் இரண்டு மட்டுமே எடுத்திருக்கிறேன் அதுவும் 30 வருட இடைவெளியில்”

  • “நைன்த் கேட்” கதையில் என்னைக் கவர்ந்த அம்சமே, அதன் ஹீரோ ஒரு புத்தகம் என்பதுதான். நான் அதை ஒரு கதாபாத்திரமாகவேதான் பார்த்தேன். அட்டையில் உள்ள வேலைப்பாடுகளை நானே வடிவமைத்தேன், அதன் நிறத்தையும் அளவையும் தீர்மானித்தேன், எப்படி ஒரு நடிகரைத் தேர்ந்தெடுத்து கதாபாத்திரத்துக்கு ஏற்ப மாற்றுவேனோ அப்படி”
  • “எனக்குத் தனிப்பட்ட முறையில் சூனியத்திலோ பேய்பிசாசுகளிலோ சுத்தமாக நம்பிக்கை இல்லை. சாத்தான் என்றால் எனக்கு சிரிப்புத்தான் வரும். படமெடுப்பதற்கு அவை சிறந்த மூலப் பொருட்கள் என்ற வகையில், ஒரு திரைப்பட இயக்குனராக மட்டுமே என்னால் அவற்றை விரும்ப முடியும்.”

  • “ட்ரூஃபோ (Francois Truffaut), லெலோச் (Claude Lelouch), கொடார்ட் (Jean-Luc Godard) போன்ற இயக்குனர்கள் தங்களைப் புரட்சியாளர்களாகக் கற்பனை செய்து விளையாடும் சிறுபிள்ளைகளைப் போன்றவர்கள். நான் அந்தக் கட்டத்தை எப்போதோ தாண்டிவிட்டேன். அந்த விஷயங்கள் மிகுந்த தீவிரத்தோடு நடைபெற்ற நாட்டைச் சேர்ந்தவன் நான்.”
  • “சிறுவர்களுக்கு தாங்கும் சக்தி அதிகம். நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். அதற்குக் காரணம் ஒருவேளை அவர்களுக்கு வேறு எதுவும் செய்யத் தெரியாது என்பதால் இருக்கலாம். அவர்கள் எப்படியோ அதிக நெகிழ்த்தன்மையோடு இருக்கிறார்கள், பெரியவர்களைவிட மிக வேகமாக நிலைமைக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.”

  • “ஹாலிவுட் எப்படிப்பட்டதென்றால், செல்லத்தால் கெட்டுப்போன வால்பையனைப் போன்றது. ஒரு புது பொம்மையைப் பார்த்ததும் உடனே அதை அடைவதற்காக அடம்பிடிப்பான். கிடைத்ததும் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டுத் தூர எறிந்துவிடுவான்.”
  • “எது அதிர்ச்சிகரமானது என்று நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை. தலை துண்டிக்கப்பட்ட ஒருவனின் கதையை நீங்கள் சொல்லவேண்டுமென்றால், அவனது தலையை எப்படித் துண்டித்தார்கள் என்று காட்டத்தானே வேண்டும். இல்லையென்றால் அது, நகைச்சுவைத் துணுக்கு ஒன்றைச் சொல்லி அதன் உச்ச வரியை மட்டும் விட்டுவிடுவதற்குச் சமம்.”

  • “ஹாரிசன் ஃபோர்ட் ஒரு வசனத்தைச் சொன்னால், அது எப்போதுமே நான் எதிர்பார்த்ததிற்கு முரணாகத்தான் இருக்கும், ஆனால் அது எப்படியோ வேலை செய்தும்விடும். அது நான் நினைத்ததைக் காட்டிலும் பார்வையாளர்களைத் தொடுவதாகவும், நிஜமானதாகவும் இருக்கும்.”
  • “நகைச்சுவை என்பது ஒவ்வொரு சமுதாயத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்ப வேறுபடக்கூடியது. பிரஞ்சுக்காரர்கள் வெடித்துச் சிரிக்கும் ஒரு விஷயம் அமெரிக்கர்களுக்கு நகைச்சுவையாகவே தோன்றாமல் போகலாம்.”

  • “எனக்கு வயதாகிவிட்டதாகத் தோன்றுவதே இல்லை. சிலசமயம், சவரம் செய்யும்போது கண்ணாடியில் தெரியும் முகம் மெல்லிய அதிர்ச்சியை உருவாக்கும். எது என்னை அதிகம் பயமுறுத்துகிறது என்றால், நான் சாதாரன நேரத்தில் காணாத என் தந்தையின் சாயல் அப்போது என் முகத்தில் தெரிவதுதான்.”
  • “ஒவ்வொரு தோல்வியும் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையையே ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் அதைப் பழிதீர்த்து வெற்றிகொள்ள, என்னாலும் முடியும் என்று காட்ட, எனக்கு அதிக தன்னம்பிக்கை தேவையாயிருந்தது”

  • “எப்போதெல்லாம் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அபாயகரமாக உணர்வேன்.”
  • “என்னுடைய கலைப் படைப்புகளை வைத்தே என்னை மதிப்பிட வேண்டும், என் வாழ்க்கையை வைத்து அல்ல. நடக்கப்போவதை உங்களால் மாற்ற முடியும் என்றால், அது உங்கள் கலை வாழ்வில் மட்டுமே சாத்தியமாகலாம், நிச்சயமாக உங்கள் நிஜ வாழ்க்கையில் அல்ல.”

ரோமன் பொலன்ஸ்கி – 2

பொதுவாக ரோமன் பொலன்ஸ்கி இயக்கிய படங்கள், தப்பிப் பிழைக்கும் ஓட்டங்களையும், சபலங்களையும், பேரிழப்புகளையுமே மையமாகக்கொண்டிருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம், அவரது சொந்த வாழ்க்கையே அப்படித்தான் அமைந்திருக்கிறது.

.

போலந்து நாட்டைச் சேர்ந்த யூதரான ரோமன் பொலான்ஸ்கி சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ், குடும்பத்தோடு காண்செண்ட்ரேஷன் கேம்ப்பில் அடைக்கப்பட்டார். அங்கு அவரது அம்மா இறந்துபோனார். சிறுவர்களுக்கான பகுதியில் அடைக்கப்பட்டிருந்த ரோமன் மிகச் சிரமப்பட்டு உயிர்தப்பி வெளியேறினார். போலந்தின் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்து, வெவ்வேறு குடும்பங்களின் தயவில், பல்வேறு வேலைகளைச் செய்து அவர் வாழ்ந்தார்.

அக்காலத்தில் ஜெர்மானிய படங்கள் மட்டுமே திரையரங்குகளில் காண்பிக்கப்படும் என்பதால் உள்ளூர்வாசிகள் யாரும் பொதுவாகப் படம் பார்ப்பதில்லை, ஆனால் ரோமன் தேசப்பற்றை ஓரங்கட்டிவிட்டு ஏராளமான ஜெர்மன் படங்களைப் பார்த்தார். பின்பு அவரது தந்தையால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு ஒன்று சேர்ந்தபிறகே அவர் படிப்பைத் தொடரமுடிந்தது.

.

ரோமன் முதலில் ஒரு நடிகராகத்தான் திரையுலகுக்கு வந்தார். அதன்பின்பே அவர் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார், சில குறும்படங்களை இயக்கினார். அவர் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படம்தான், போலந்தில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு வெளிவந்த படங்களிலேயே, போருக்கு சம்பந்தமில்லாத கதையைக் கொண்ட முதல் படம். “Knife in the Water” என்ற அந்தப் படம் நிறைய விருதுகளையும் பெற்றது. அதன் பிறகு அவர் பிரான்ஸ் சென்று அங்கு படங்களை எடுத்து, பிறகு லண்டனுக்கு சென்று ஆங்கிலப் படங்களை எடுக்க ஆரம்பித்தார். அதன்பிறகு அவர் அமெரிக்காவுக்கு வந்து 1968யில் “ரோஸ்மேரிஸ் பேபி” படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்தார். அந்த ஒரு படத்திலேயே அனைவரின் கவணத்தையும் ஈர்த்தார். ஆனால் அடுத்த ஆண்டே அவர் வாழ்க்கை நிலை குலைந்தது.

அவர் படவேலையாக ஐரோப்பாவில் இருந்தபோது, அவரது காதல் மனைவியும் நடிகையுமான ஷெரான் டேட் (Sharon Tate) அவரது அமெரிக்க வீட்டில் வைத்து மிகக்கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சார்லஸ் மேன்சன் என்பவரால் வழிநடத்தப்பட்ட “மேன்சன் குழுமம்” என்று அழைக்கப்படும், தீவிரவாத கலாச்சார இயக்கத்தினர்தான் இந்தக் கொலையைச் செய்தார்கள். அப்போது ஷெரான் 8 மாதக் கர்ப்பினியாக இருந்தார், அவரோடிருந்த வேறு நான்குபேரும்கூடக் கொல்லப்பட்டார்கள். ரோமன் பொலன்ஸ்கிக்கு அதுவொரு தாங்க முடியாத பேரிழப்பு. அவரால் அமெரிக்காவில் இருக்க முடியவில்லை, மீண்டும் ஐரோப்பாவிற்கே திரும்பிச் சென்றார்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து, 1974-யில் எடுத்த படம்தான் “சைனா டவுன்”. அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட அந்தப் படத்தின் மூலம் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்தார் ரோமன். ஆனால் அதுவும் வெகுநாள் நீடிக்கவில்லை.

ஜாக் நிகல்ஸனின் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியின்போது 13 வயதுப் பெண்ணுடன் அவர் உடலுறவில் ஈடுபட்டதாக அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது. சட்டப்படி அது கற்பழிப்பு என்பதால், வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது ரோமன் தலைமறைவாகி அமெரிக்காவைவிட்டு வெளியேறி பாரீஸில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு அவர் இன்றுவரை அமெரிக்க மண்ணில் கால் பதிக்கவே இல்லை, அவரைக் கைது செய்யும்படி நீதிபதி பிறப்பித்த உத்தரவு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. ஆகவே அவர் இத்தனை ஆண்டுகளாக சிறையைப் பற்றிய பயத்துடனேயே வாழ்ந்துவருகிறார்.

ஆனாலும் அவர் தொடர்ந்து படங்களை எடுத்தபடியேதான் இருக்கிறார். படப்பிடிப்புகளைத் தனக்குப் பாதுகாப்பளிக்கும் நாடுகளில் மட்டுமே வைத்துக்கொள்வார். இங்கிலாந்து சென்றாலும் அவர் கைது செய்யப்படுவார் என்பதால், “டெஸ்” படத்திற்காக ஒரு இங்கிலாந்து நகரத்தை அச்சு அசலாக பிரான்ஸில் உருவாக்கிப் படமெடுத்தார். அமெரிக்கப் பத்திரிகை ஒன்று மிக அவதூறாக ரோமன் பொலன்ஸ்கியைப் பற்றி எழுதியபோது, அவர் அதற்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிரான்ஸில் இருந்தபடியே வீடியோ உரையாடல் மூலம் அவர் வழக்கில் பங்குபெற்று வெற்றியும் நஷ்டஈடும் பெற்றார். இங்கிலாந்து நீதித்துறை வரலாற்றில் முதல் வீடியோ சாட்சியம் அதுதான்.

32 ஆண்டுகளாக அமெரிக்காவால் அவர் தேடப்படுகிறார் என்றபோதிலும், அமெரிக்காவின் முன்னணி நடிகர்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும் தொடர்ந்து ரோமன் பொலன்ஸ்கியோடு இணைந்து பணியாற்றத்தான் செய்கிறார்கள். 2003ஆம் ஆண்டு “தி பியானிஸ்ட்” படத்துக்காக அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டபோது, அதை அவர் சார்பாக நடிகர் “ஹாரிஸன் ஃபோர்ட்” பெற்றுக்கொண்டார். பின்பு அதை அவர் பிரான்சுக்கு எடுத்துச் சென்று ரோமனின் கைகளில் கொடுத்தார்.

.

ரோமன் பொலன்ஸ்கி பகிரங்கமாகவே தன் தவறை ஒத்துக்கொண்டுவிட்டார். குறிப்பிட்ட சம்பவத்தன்று தான் போதை மருந்து உட்கொண்டிருந்ததால் சுயநினைவின்றி நடந்துகொண்டதாகவும், அதற்காக வருந்துவதாகவும் அறிவித்தார். ‘அவர் இத்தனை ஆண்டுகள் அனுபவித்ததெலாம் போதும், அமெரிக்க அரசு அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும், பத்திரிகையாளர்கள் விரோதப்போக்கை நிறுத்த வேண்டும்’ என்று “வூடி ஆலன்” உட்பட பல அமெரிக்கப் பிரபலங்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். ரோமன் பொலன்ஸ்கி, 1989-யில் பிரஞ்சு நடிகையான “எம்மானுயேல் செய்ஞர்”-யை மணந்தார். இப்போது அவர்களுக்கு இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர் 2009 செப்டம்பரில் ஸ்விட்சர்லாந்தில் கைதுசெய்யப்பட்டார். அப்போது அவர் எடுத்துக்கொண்டிருந்த படமான “கோஸ்ட் ரைட்டர்” (Ghost Writer) அத்தோடு நின்றுபோகும் என்று எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் அவர் சிறையில் இருந்தபடியே அந்தத் திரைப்படத்தின் படத்தொகுப்பு வேலைகளைச் செய்தார். அவரது முழு கண்காணிப்போடு படம் இறுதி வடிவத்தை அடைந்தது. பின்பு அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார், ஆனாலும் ஸ்விஸ் அரசு அவரை வீட்டுக்காவலில் வைத்தது. மார்ச் 2010யில் “கோஸ்ட் ரைடர்” வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முன்னாள் இங்கிலாந்து பிரதமர் “டோனி பிளேர்” நடவடிக்கையைக் கடுமையாக விமர்சிக்கும் அரசியல் படமது. அமெரிக்காவின் நட்பைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர்கள் எத்தகைய அநீதிக்கும் துணிகிறார்கள் என்று காட்டுகிறது படம்.

இந்நாள் வரை ஸ்விட்சர்லாந்தில் வீட்டுக்காவலில் இருக்கும் ரோமன் பொலான்ஸ்கி, விரைவிலேயே அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் செய்த பாவம் 32 வருடங்களாக அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அது அவரைத் தீண்டும் நேரம் நெருங்கிவிட்டது என்றே பொதுவாகக் கருதப்படுகிறது.

ரோமன் பொலன்ஸ்கி – 3

ரோமன் பொலன்ஸ்கி – 1

என்னை மிகவும் பாதித்த சில திரை முன்னோடிகளைப் பற்றி நான் ப்ளாக்கில் எழுதத் தொடங்கியதே, அவர்களையும் அவர்கள் படங்களையும் பற்றி மீண்டும் ஒருமுறை நான் சிந்திப்பதற்கும் ஏற்கனவே இருந்த கருத்துக்களை மீட்டுருவாக்கம் செய்துகொள்வதற்கும்தான். இதற்காக நான் அவர்களின் படங்களில் சிலதை மீண்டும் பார்த்தேன், அவர்களைப் பற்றி மீண்டும் படித்தேன். அவர்களது பிரபலமான சில கருத்துக்களைத் தமிழாக்கம் செய்யத் தொடங்கியபோதுதான், அவைகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு சிறந்த வழி என்பது புரிந்தது. அடுத்ததாக யாரைப்பற்றி எழுதலாம் என்று யோசித்தபோது, திரும்பத் திரும்ப என் நினைவில் வந்தபடியே இருந்தவர், இயக்குனர் ரோமன் பொலன்ஸ்கி (Roman Polanski).

அவருடைய படங்களில் நான் முதலில் பார்த்தது “சைனா டவுன்”. திரைக்கதை எழுதுவதைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதிய ஆசிரியர் “சிட் ஃபீல்ட்” (SYD FIELD) அவர்கள், நல்ல திரைக்கதையின் கூறுகளை விளக்குவதற்கு அடிக்கடி உதாரணத்திற்கு எடுத்துப் பேசும் படம் சைனா டவுன். அதனாலேயே, அவர் சொல்வதை விளங்கிக்கொள்வதற்காகவாவது அந்தப் படத்தைப் பார்த்தாக வேண்டுமென்ற அவசியம் ஏற்பட்டது. துப்பறியும் கதைகளுக்கே உரித்தான முடிச்சுகளும், திருப்பங்களும், விறுவிறுப்பும் நிரம்பிய கதையென்பதால் இலகுவாக நம்மை உள்ளிழுத்துச் சென்றுவிடும் படம் அது. அதோடு இளம் ஜாக் நிகல்ஸனின் துடிப்பான நடிப்பாற்றலும், யதார்த்தமான சண்டைக் காட்சிகளும் இப்படத்தை ஒரு சிறந்த பொழுதுபோக்காகவும் ஆக்குகிறது. அதிலும் குறிப்பாக இயக்குனரே ஒரு சிறிய அடியாள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அவர் கத்தியால் ஜாக் நிகல்ஸனின் மூக்கை அறுக்கும் காட்சி, ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் நிஜம்போலவே தோன்றுகிறது. ஆனால் இதை ஒரு சராசரிப் படத்திலிருந்து உயரத்துக்குத் தூக்கிச் செல்வது, உளவியல் சிக்கல்களையும் விபரீதமான உறவுச் சிக்கல்களையும் இதில் ரோமன் பொலன்ஸ்கி கையாண்டிருக்கும் விதம்தான்.

1974யில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 1937ஆம் ஆண்டு வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தும் கதாநாயகன், பொதுவாகக் கணவன்-மனைவி கள்ளத்தொடர்புகளைப் புலனாய்ந்து சம்பாதிப்பவன். அவனிடம் ஒரு பெண் வந்து, நகராட்சியின் நீர்நிலைகளைப் பராமரிக்கும் தலைமைப் பொறியாளரான தனது கணவனுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறதாவென வேவு பார்க்கச் சொல்கிறாள். நாயகன் துப்பறிய ஆரம்பிக்கும்போது, அது நீர்நிலை திட்டங்களில் இருக்கும் தில்லுமுல்லுகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவது, நகராட்சியில் நடக்கும் ஊழல், பினாமிகளின் பெயரில் நில ஆக்கிரமிப்பு செய்யப்படுவது என்று பெரிய தளத்தில் விரிகிறது. நாயகன் அந்தத் தலைமைப் பொறியாளர் நிஜமாகவே பொதுமக்களின் நலனில் அக்கறையுள்ளவர் என்று கண்டறிகிறான், ஆனால் அவருக்கு ஒரு இளம் பெண்ணோடு தொடர்பிருக்கிறது என்றும் தெரிகிறது. அந்த உண்மையை அவன் வெளியிட்ட பிறகுதான், தலைமைப் பொறியாளரின் உண்மையான மனைவி இன்னொருத்தி (கதாநாயகி) என்பதும், அவனிடம் துப்பறியும்படிச் சொன்னவள் ஒரு போலி என்பதும், அவன் யாராலோ இந்தப் பொறிக்குள் சிக்கவைக்கப்பட்டிருக்கிறான் என்பதும் தெரியவருகிறது. இதற்கிடையில் தலைமைப் பொறியாளர் நீரில் மூழ்கி இறந்துபோக, நாயகன் அது கொலைதான் என்று கண்டறிகிறான்.

அந்தக் கொலையைச் செய்தது யார், காரணம் என்ன, என்பதைத் துப்பறியுமாறு அவனிடம் நாயகியே சொல்கிறாள். நகராட்சியின் ஊழல்களுக்கெல்லாம் மையமாக விளங்கும் பெரும்புள்ளியான ‘நோவா கிராஸ்’, நாயகியின் தந்தைதான் என்பது நாயகனுக்குத் தெரியவருகிறது. தலைமைப் பொறியாளருக்குத் தொடர்பிருப்பதாக நாயகன் நினைத்த அந்த இளம் பெண் யார் என்பது தெரிந்தால் எல்லா முடிச்சுகளும் அவிழும் என்று அவன் நினைக்கிறான். பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, அந்த இளம் பெண்ணை, நாயகியே ஒளித்துவைத்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்கிறான். முதலில் நாயகி அவளைத் தன் தங்கை என்கிறாள், பிறகு தன் மகள் என்று மாற்றிச் சொல்கிறாள். இறுதியில் அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிவருகிறது. பெரும்புள்ளியான நோவா கிராஸ்க்குத் தன் சொந்த மகளுடனேயே வரம்பு மீறிய உறவிருந்தது. நாயகிக்குப் 15 வயதிருக்கும்போது அந்த உறவால் பிறந்த குழந்தைதான் இப்போது அந்த இளம்பெண்ணாக வளர்ந்து நிற்கிறாள். நாயகி தன் மகளோடு தன் அப்பாவிடமிருந்து தப்பிச்செல்வதற்கு நாயகனின் உதவியைக் கோருகிறாள். நாயகன் “உன் அப்பா உன்னைக் கற்பழித்துவிட்டாரா?” என்று கேட்கும்போது, நாயகி கண்களில் ஈரம் கசிய ‘இல்லை’ என்று தலையாட்டுகிறாள். அடுத்தக் காட்சியில் நோவா கிராஸ் நாயகனிடம், “நான் என்னைக் குற்றம் சொல்லமாட்டேன்.. நிறைய பேருக்கு ஒரு உண்மை தெரிவதில்லை, சரியான நேரமும், இடமும், சந்தர்ப்பமும் அமைந்தால் ஒரு மனிதன் எந்த எல்லைக்கும் போகக்கூடும்..” என்று சொல்லும்போது, காட்சியாகக் காட்டப்படாத அந்த விபரீத சம்பவம் தீவிரமாக நமக்கு உறைக்கிறது.

ரோமன் பொலான்ஸ்கியின் திகில் படமான “ரோஸ்மேரிஸ் பேபி” (Rosemary’s Baby) (1968), ஹாலிவுட்டின் பிரபலமான பேய்ப் படங்களான “எக்ஸார்சிஸ்ட்”, “ஓமென்” படங்களின் வரிசையில் வைக்கப்பட்டிருக்கிறது என்ற போதிலும் அவற்றுக்கு முற்றிலும் வேறான ஒரு படமாகவும், ஐரோப்பிய சினிமா பாணியைக்கொண்டும் இருக்கிறது. ஏராளமான சஸ்பென்ஸ் திரில்லர்களை எடுத்த ஹிட்ச்காக் ஒரு பேய்ப்படம் கூட எடுத்ததில்லை. ஒருவேளை அவர் எடுத்திருந்தால் அது “ரோஸ்மேரிஸ் பேபி” போல இருந்திருக்கும் என்று நான் நினைத்துக்கொள்வதுண்டு. சுருக்கமாக இந்தப்படம், பார்வையாளர்களின் கண்களை மிரட்டாமல் மனதை மிரட்டும் திகில் படம் என்று சொல்லலாம். அமானுஷ்ய சக்தியால் ஒருத்தி தற்கொலை செய்துகொள்வது, ஒரு நாடக நடிகரின் கண்கள் இரண்டும் குருடாவது, ஒரு முதியவர் திடீரென்று கோமாவில் விழுந்து பிறகு இறந்துபோவது என்பதெல்லாம் இந்தக் கதைக்குள் இருக்கிறது. ஆனால் இவை எவையுமே ‘காட்சியாக’ப் படத்தில் வராது. ரோஸ்மேரி என்னும் மையக் கதாபாத்திரத்திரம் எதையெல்லாம் காண்கிறதோ அதுமட்டுமே காட்சியாக வருகிறது. மற்றவையெல்லாம் அவள் நடந்து முடிந்த பிறகு பார்க்கும்போதும், கேள்விப்படும் போதும்தான் பார்வையாளர்களுக்குத் தெரிகிறது. ஆனால் அந்த அத்தனைக் குரூரக் காட்சிகளும் பார்வையாளர்களின் மனதுக்குள் நடந்துவிடும் என்பதால் அதிகமாக பயமுறுத்துவதாக இருக்கிறது. இந்தப் படத்தின் முக்கியமான ஒரு திகில் காட்சியைக் கூட நாயகி, அது கனவா நனவா என்று தெரியாத குழப்பத்துடனேயே காண்கிறாள். கனவுகளைப் படமெடுப்பதில் தேர்ந்தவர்களான பெர்க்மன் (Ingmar Bergman), தார்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) போன்றவர்களுக்கு இணையாக அந்தக் கனவை ரோமன் பொலன்ஸ்கி படமாக்கியிருக்கிறார்.

என்னை மிகவும் பாதித்தது அதன் கடைசிக் காட்சிதான். படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் போடும்போது ஒரு தாலாட்டுப் பாட்டு கேட்கும், ரோஸ்மேரி தன் கணவனோடு புதிதாக ஒரு அபார்ட்மெண்டில் வந்து தங்குகிறாள், சூனியக்காரர்களின் ரகசிய சமூகக்குழு ஒன்றின் சூழ்ச்சி வலைக்குள் அவள் சிக்குகிறாள். அவளுக்குத் தெரியாமல், சாத்தான் அவளோடு உடலுறவுகொள்ளும்படிச் செய்கிறார்கள். அவள் வயிற்றில் குழந்தை உண்டானதும், அவர்கள் கொடுக்கும் மூலிகை பானத்தை தினமும் குடிக்க வேண்டும், அவர்களது டாக்டரைத்தான் பார்க்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். அந்த டாக்டரோ பேறுகாலம் பற்றின எந்தப் புத்தகத்தையும் படிக்கக் கூடாது, முன் அனுபவம் உள்ள யார் சொல்வதையும் கேட்கக்கூடாது என்கிறார். வயிற்றில் குழந்தை வளர வளர அவள் மெலிந்து, வெளிரி ரத்தசோகை நோயாளிபோல் ஆகிறாள். அவளுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் கர்ப்பகாலத்தில் பெண்கள் இப்படி இருக்கமாட்டார்கள் என்கிறார்கள். மெல்ல மெல்ல அவளுக்குச் சூனியக்காரர்களைப் பற்றித் தெரிய வருகிறது, தன் குழந்தையைப் பலியிடுவதற்காகவே அவர்கள் எல்லாம் செய்கிறார்கள் என்று அவள் நினைக்கிறாள். அவர்களிடமிருந்து தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று அவள் பலவாறாக முயற்சிக்கிறாள், தப்பித்து ஓடுகிறாள். தன் எண்ணங்களை வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசியபடியே இருக்கிறாள், ஓரளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டவள் போல் ஆகிவிடுகிறாள். ஆனால் குழந்தை பிறக்கவிருக்கும் சமயத்தில் அவர்களிடம் மீண்டும் மாட்டிக்கொள்கிறாள்.

அவள் திரும்பக் கண் விழிக்கும் போது, நடந்தது எல்லாமே அவளுடைய வீணான பயத்தால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுதான், இம்மாதிரி மனக் குழப்பங்கள் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு வருவதுதான் என்கிறார்கள். அவள் செய்த களேபரத்தால் குழந்தை இறந்தே பிறந்தது என்கிறார்கள். பிறகு, அவள் தனிமையில் இருக்கும்போது, பக்கத்து ஃப்ளாட்டிலிருந்து தன் குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்டு அங்கு செல்கிறாள். சூனியக்காரர்களின் சமூகம் மொத்தமும் அங்கு குழுமியிருக்க, நடுவில் தொட்டிலில் அந்தக் குழந்தை அழுதபடி இருக்கிறது. அந்தக் குழுவின் தலைவன் ரோஸ்மேரியை அந்தக் குழந்தையின் அருகில் செல்ல அனுமதிக்கிறான். அவளைப் பார்த்ததும்தான் குழந்தை அழுகையை நிறுத்துகிறது. “குழந்தையின் கண்கள் ஏன் இப்படி விநோதமாக சிவப்பாக இருக்கிறது” என்று அவள் கேட்க, தலைவன், “அது தன் தந்தையின் கண்களைக் கொண்டிருக்கிறது” என்கிறான். ரோஸ்மேரிக்கு ஒன்றும் புரியவில்லை, அவள் தன் குழந்தையை அன்போடு பார்த்துத் தாலாட்டுப் பாடத் தொடங்குகிறாள். ஆரம்ப டைட்டில் காட்சி போலவே, உயரத்திலிருந்து ஊரின் பகுதிகள் காட்டப்பட பின்னணியில் தாலாட்டு ஒலிக்கிறது. எனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததுமே முதலில் தோன்றியது, அன்பு எத்தனை ஆபத்தானது என்பதுதான். சாத்தானின் குழந்தையானாலும் தாய் அன்பைப் பொழியத்தான் செய்கிறாள். அன்பு மனித குலத்தை வாழ்விக்கிறது, ஆனால் அதேசமயத்தில் மாபெரும் அழிவுச் சக்தியும் அன்புதான்.

ரோமன் பொலன்ஸ்கியின் ஆகச் சிறந்த படம் 2002ஆம் ஆண்டு வெளியான “தி பியானிஸ்ட்” (The Pianist). இரண்டாம் உலகப் போரின்போது நாஸிப் படையினரால் யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டபோது நடந்த, உயிர் வாழ்வதற்கான போராட்டத்தைப் பற்றிய படங்களில், 3 மிக முக்கியமானவையென்று நான் நினைக்கிறேன். ஸ்பீல்பெர்க்கின் “சிண்ட்லர்ஸ் லிஸ்ட்”, ரொபெர்டோ பெனிக்னியின் “லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்” மற்றும் “தி பியானிஸ்ட்”. மூன்றுமே அதன் இயக்குனர்களுக்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுத்தந்தவை. முன்னது மிகச் சிறந்த படமென்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் கொஞ்சம் “ஹாலிவுட்தனமானது”, அளவுக்கு மீறிப் பிரம்மாண்டமான சட்டகத்துக்குள் வரையப்பட்டிருப்பதால் ஓரளவுக்கு யதார்த்தத்தை மீறுவது, மிகப் பலரின் கதையைச் சேர்த்துக்கட்டிய பொட்டலம் போன்ற திரைக்கதையுடையது. “சிண்ட்லர்ஸ் லிஸ்ட்”க்கு அப்படியே நேர் எதிரானது “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்”, ஒரு விளையாட்டுப்போல அந்தப் பிரச்சனையை இலகுவாக்கி நகைச்சுவையாகச் சொல்லும் படம். இந்த இரு துருவங்களுக்கும் நடுவில், யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக இருக்கும் படம் “தி பியானிஸ்ட்” தான். மேலும் அந்த இரு படங்களின் மையக் கதாபாத்திரங்களும், தத்தம் வழிகளில் நம்பிக்கையுடன் போராடி தம்மைச் சார்ந்தவர்களின் உயிரைக் காப்பாற்றி ஹீரோக்களாகிறார்கள். ஆனால் “தி பியானிஸ்ட்”டின் மையப்பாத்திரம் முழுக்க முழுக்க சாதாரணமானவனாக, கிடைக்கும் சந்தர்ப்பங்களின் பொந்துகளுக்குள் நுழைந்து, தன்னைக் குறுக்கிக்கொண்டு, பசித்திருந்து, தனித்திருந்து, ஒரு கரப்பான் பூச்சியைப்போல வாழ்ந்து தன்னை மட்டும் தப்புவித்துக்கொள்கிறான். நாம் அந்தச் சூழலில் இருந்தால் என்ன செய்திருப்போமோ அதைத்தான் அவன் செய்கிறான், அவன் ஒரு ‘ஹீரோ’ அல்ல, காப்பாற்றுபவன் அல்ல, தப்பிப் பிழைப்பவன் மட்டுமே. ‘அட்ரியன் பிராடி’க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றுத்தந்த அந்தக் கதாபாத்திரம் நூறு சதவிகிதம் ரத்தமும் சதையுமாகத் திரையில் உயிர்பெற்றிருக்கிறது.

போலந்தின் புகழ்பெற்ற பியானோ இசைக்கலைஞரான Wladyslaw Szpilman எழுதிய சுயசரிதையை, முடிந்தவரை அப்படியே எடுக்க முயற்சித்தார் ரோமன். படத்தின் முதல்காட்சியில், “வார்ஸா” நகரின் வானொலி நிலையத்தில் பியானோ வாசித்தபடி இருக்கும் ஸ்பில்மன், திடீரென்று வெளியே குண்டுகள் வீசப்படும் சத்தங்கள் கேட்க, அப்போதும் அசையாமல் வாசித்தபடியே இருக்கிறான். ஊரின் களேபரங்களைவிட, நேரடி ஒலிபரப்பில் இசை நிற்கக்கூடாது என்பதுதான் அவனுக்கு முக்கியமாக இருக்கிறது. வானொலி நிலையம் மீதே குண்டு வீசப்பட்டு மற்ற பணியாளர்கள் எல்லாம் ஓடிய பிறகும் அவன் விரல்களைப் பியானோவிலிருந்து விலக்கவில்லை. இறுதியில் அந்த அறையே வெடிக்கும்போதுதான் அவன் அங்கிருந்து ஓடுகிறான். இதுவே அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையைக் காட்டிவிடுகிறது. வார்ஸாவின் உணவகங்களுக்குள் நுழைவதும் பூங்கா பெஞ்சுகளில் உட்காருவதும் கூட யூதர்களுக்குத் தடைசெய்யப்படும்போது, அவன் மிகச் சாதாரணமாக அதை ஏற்றுக்கொண்டு அந்தப் புதிய சூழலுக்குள் வாழத் தன்னைப் பழக்கிக்கொள்கிறான். இந்தத் தன்மைதான் அவனை இறுதிவரை காப்பாற்றுகிறது.

ஸ்பில்மனும் அவனது அப்பா, அம்மா, இரு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனும் சேர்ந்து தங்களிடம் இருக்கும் பெரும் பணத்தை எப்படி ஒளித்துவைப்பது எனத் திட்டமிடும் காட்சியும், சில நாட்களுக்குப் பின்பு அவர்களே கும்பலோடு கும்பலாக அடைக்கப்பட்டிருக்கும்போது, அங்கு மிட்டாய் விற்கும் ஒரு யூதச் சிறுவனைப் பார்த்து “இனி பணத்தை வைத்து இவன் என்ன செய்யப்போகிறான்?” என்று பேசுவதும், தங்கள் கைச் செலவுக்கிருந்த மொத்தத்தையும் கொடுத்து ஒரு மிட்டாயை வாங்கி, ஆறு பொடித் துண்டுகளாக நறுக்கி குடும்பமே பகிர்ந்துண்ணும் காட்சியும் மறக்க முடியாதவை. இந்தக் குடும்பம் பார்த்துக்கொண்டிருக்க, எதிர் அபார்ட்மெண்டில் நாசிப்படை நுழைகிறது, மூன்றாவது மாடியில் உணவு மேஜையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தினர் எழுந்து நிற்க, ஊனமுற்ற ஒருவர் மட்டும் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார், நாசிப் படையினர் வீல் சேரோடு அவரைத் தூக்கி ஜன்னலுக்கு வெளியே தட்டிவிடுகிறார்கள். மற்றொரு காட்சியில் பொழுதுபோகாத நாசிகள் நடுரோட்டில் வைத்து யூதர்களை ஜோடி ஜோடியாகச் சேர்த்து ஆடவிடுகிறார்கள். படம் நெடுகிலும் இம்மாதிரிக் காட்சிகள் வந்தபடியே இருக்கின்றன.

படத்தில் மிக முக்கியமானதாகக் காட்டப்பட்டிருப்பது.. பசி. தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடைய சகோதரன் விசாரணைக்காகப் பிடிக்கப்பட்டிருக்க, ஸ்பில்மன் தனக்குத் தெரிந்த போலந்து அதிகாரியிடம் கெஞ்சி அவனை விடுவிக்கிறான். சகோதரன் வீராவேசமாக ‘எதற்காக அவர்களிடம் மண்டியிட்டாய்’ என்று கோபித்தபடி நடந்து, சட்டென்று கிறங்கி விழுந்து “பசி..” என்று முனங்கும்போது, மனிதனுக்கு எது மிக முக்கியமானது எனும் கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஒரு வயோதிகப் பெண்ணிடமிருந்து உணவைப் பறிக்க ஒருவன் முயற்சித்து, இருவரும் போராடி அது தரையில் கொட்டிவிட, அவன் பாய்ந்து அதை நக்கிச் சாப்பிட, அவள் அழுதவாறு அவன் முதுகில் அடித்தபடியே இருப்பதை ஸ்பில்மன் பார்க்கிறான். படத்தின் பிற்பாதி முழுவதும் அவனே அப்படித்தான் உணவுக்காக அலைகிறான். தன் வயிற்றை நிரப்பிக்கொள்வதே ஸ்பில்மனுக்கு மற்றெல்லாவற்றையும்விடப் பிரதானமாக இருக்கிறது. முன்பு தனது ரசிகையாக இருந்து, பின்பு தோழியாகவும் ஆன பெண்ணின் வீட்டில், அவன் தஞ்சமடையும் போது, அவளும் அவள் கணவனும் பியானோ கலைஞன் என்ன சொல்லப்போகிறான் என்று ஆவலோடு பார்த்தபடி இருக்க, அவன் “ஒரு துண்டு பிரட் கிடைக்குமா?” என்று கேட்கிறான். மற்றொரு காட்சியில் உணவுக்காகத் தன் கடிகாரத்தை விற்கும்போது, “உணவு, காலத்தை விடவும் அத்தியாவசியமானது” என்கிறான்.

அவனைக் காப்பாற்றுவதற்காக ஒரு அப்பார்ட்மெண்டின் ஃபிளாட்டுக்குள் வைத்துப் பூட்டுகிறார்கள், உள்ளே ஆள் இருப்பதே தெரியக்கூடாது- ஒரு சிறு சத்தம்கூட வெளியே மற்றவர்களுக்குக் கேட்கக்கூடாது என்று அறிவுருத்துகிறார்கள். ஆனால் அந்த ஃப்ளாட்டுக்குள் ஒரு பியானோ இருக்கிறது, அவன் பியானோவைப் பார்த்தே பலமாதங்கள் ஆகிவிட்ட நிலையில் வாஞ்சையோடு அதைப் பார்க்கிறான். உட்கார்ந்து வாசிக்கிறான்.. இனிமையான பியானோ இசை நம் செவிகளை நிறைக்கிறது.. சத்தம் வெளியே கேட்குமே என்று நாம் பதைபதைக்கும்போது, அவனது விரல்கள் காட்டப்படுகின்றன.. மிக வேகமாக அந்த விரல்கள் வாசித்தபடி இருந்தாலும், அவை எவையுமே பியானோவின் விசைகளைத் தொடவே இல்லை. அந்தரத்தில் அசைந்தபடி இருக்கின்றன. அந்த இசை முழுக்க முழுக்க அவனது மனதுக்குள்தான் இசைக்கப்படுகிறது.

படம் நெடுகிலுமே அவன் உயிரைக் காப்பாற்ற ஓடியபடி, அல்ல, பதுங்கியபடியே இருக்கிறான். சந்தர்ப்பங்கள்தான் அவனைத் தப்பவிடுகின்றன. ரோமன் பொலன்ஸ்கி, வார்ஸாவில் நடக்கும் அடக்குமுறைகள், போராட்டங்கள், யுத்தங்கள் எல்லாவற்றையும் மையக் கதாபாத்திரத்தின் பார்வைக் கோணத்திலிருந்து மட்டுமே காட்டுகிறார். அதைத் தாண்டி அவர், காட்சி விறுவிறுப்புக்காக அவற்றை விவரித்துக் காட்டுவதில்லை. கடுமையான போருக்குப்பின் அந்த நகரமே அழிந்து, வெறும் இடிபாடுகளின் குவியலாக மாற, அதன் நடுவே ஸ்பில்மன் மட்டும் மெலிந்த உருவமாகப் பசியில் தள்ளாடியபடித் தனியாக செல்லும் காட்சிதான் ரோமன் பொலன்ஸ்கி எடுத்தவற்றிலேயே சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இந்தப் படத்தை சமீபத்தில் நான் திரும்ப பார்த்தபோது, அந்தக் காட்சியில் என் மனதுக்குள் “கரப்பான் பூச்சி” என்ற ஒற்றைச் சொல்தான் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் படத்துக்குள் அப்படிப்பட்ட ஒப்பீடு எதுவுமே இல்லை.

படத்தின் இறுதியில் ஸ்பில்மன் ஒரு ஜெர்மன் அதிகாரியின் கண்ணில் பட்டுவிடுகிறான். “யார் நீ?” என்று அவர் கேட்க, ஸ்பில்மன் யோசித்துவிட்டு “..பியானிஸ்ட்” என்கிறான். அவர் அமைதியாகத் தன்னைப் பிந்தொடரும்படிச் சைகைகாட்டிவிட்டுப் பக்கத்து அறைக்குள் செல்கிறார். அந்த அறையில் ஒரு பியானோ இருக்கிறது. ஸ்பில்மன் அதை வாசிக்கிறான். அற்புதமான இசையை உள்ளம் உருகக் கேட்கும் அந்த நாசிப் படைக்காரர், அந்த யூதனுக்கு உணவு கொடுத்து, மறைந்து வாழ உதவியும் செய்கிறார், “ரஸ்யப் படைகள் நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன, இன்னும் கொஞ்ச நாளுக்கு நீ தாக்குப்பிடித்துவிடு” என்றும் சொல்கிறார்.

பின்பு ஜெர்மன் படைகள் வார்சாவை விட்டுப் பின்வாங்கிச் செல்லும்போது, அந்த அதிகாரி ரகசியமாக ஸ்பில்மனை வந்து பார்த்து, சில நாட்களுக்குப் போதுமான அளவுக்கு உணவுப்பொருட்களும் குளிருக்கு ஆடையும் கொடுக்கிறார். ஸ்பில்மன் அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று உணர்ச்சிவசப்பட, அவர் அமைதியாக “கடவுளுக்கு நன்றி சொல், எனக்கல்ல. அவர் நாம் உயிர்வாழவேண்டும் என்றுதான் விரும்புகிறார் இல்லையா? ..குறைந்தது அப்படித்தான் நாம் நம்பவேண்டும்” என்கிறார். “போருக்குப் பின் நீ என்ன செய்வாய்?” என்று அவர் கேட்க, “ரேடியோவில் இசைப்பேன்” என்று ஸ்பில்மன் சொல்ல, அந்த அதிகாரி, “உன் பெயரைச் சொல்லு.. நான் ரேடியோவில் உன் இசையைக் கேட்பேன்” என்கிறார். மிகுந்த உருக்கமான அந்த சம்பவம், நிஜமாக நடந்து சுயசரிதையில் எழுதப்படாவிட்டால் நம்பவே முடியாத அளவுக்கு, மனித நேயத்தையும் மனித குலத்தின்மேல் நம்பிக்கையையும் பிரகடனப்படுத்துவதாக இருக்கிறது.

.

காலம் எல்லாவற்றையும் சட்டென்று மாற்றிப்போட்டுவிடுகிறது. ஸ்பில்மன் ரஸ்யப் படையால் மீட்கப்பட்டு, போலந்தின் மதிப்புமிக்க இசைக் கலைஞராக 88 வயதுவரை வாழ்ந்தார். அந்த ஜெர்மன் அதிகாரி ரஸ்யப் படையால் பிடிக்கப்பட்டு, போர்க் குற்றவாளியாக சிறையிலேயே இருந்து, 1953யில் இறந்துபோனார். அவர் ஸ்பில்மன்னை தவிர்த்து வேறு சில யூதர்களையும் காப்பாற்றியதாகப் பின்பு தெரியவந்தது. தற்போது யூதர்களின் நாடான இஸ்ரேல் அந்த நாசி அதிகாரிக்கு மிக உயரிய விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அனைவரின் மனதையும் உலுக்கிய, உணர்ச்சிகரமான “தி பியானிஸ்ட்” படம்தான்.

ரோமன் பொலன்ஸ்கி – 2