Monday, 16 April 2012

5CS- கேமராக் கோணம்: CAMERA ANGLE_PART_1


ஒரு திரைப்படம் என்பது காட்சிகளால் ஆனது என நினைக்கிறோம். காட்சிகளை ஒருங்கிணைத்தால் திரைப்படம் உருவாகி விடும் என நம்புகிறோம். ஆனால் ஒரு திரைப்படம் என்பது பல துண்டு 'ஷாட்ஸ்'(shots)-களால் ஆனது. பல ஷாட்சுகள் கோர்வையாக இணைக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியான தன்மையில் கதை சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஷாட்டும் சரியான கோணத்தில் படமாக்கப்படவேண்டும். அதாவது அந்த ஷாட்டில் நடிக்கும் நடிகனை, அவன் செயலை பார்வையாளன் சரியாகப் பார்க்கத் தேவையான கோணத்தில் கேமரா வைத்துப் படமாக்கப்பட வேண்டும்.



கேமராக் கோணத்தைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் உள்ளன. குறிப்பாக அந்தக் கதையின் தன்மை, அதன் தேவை ஆகியவற்றைப் பொறுத்தே கேமராக் கோணம் அமைக்கப்படவேண்டும். இரண்டு முக்கிய தேவையை கேமராக் கோணம் அமைத்தலில் நாம் பூர்த்தி செய்யவேண்டும். அந்தக் காட்சியைப் பார்வையாளன் பார்க்க சரியான 'பார்வைக் கோணம்(View Point) மற்றும் எவ்வளவு 'பரப்பளவை' (Area Covered) அந்த ஷாட் காட்டப்போகிறது என்பது. ஒவ்வொரு தடவையும் கேமரா இடம் மாறும்போதும் இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தேடவேண்டும்.


இதிலிருந்து நாம் முடிவுக்கு வரவேண்டியது, 'கேமராக் கோணம்' என்பது ஒரு காட்சியை பார்வையாளன் சரியான இடத்திலிருந்து(best viewpoint) பார்க்க அனுமதிப்பதும், எந்த அளவு பரப்பளவைப்(How much area) பார்க்கிறான் என்பதையும் தீர்மானிப்பதும் எனக் கொள்ளலாம்.






கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'கேமராக் கோணம்' கதையில் பார்வையாளனை ஈடுபாடு கொள்ளவைக்கிறது, அதுவே கவனக்குறைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'கேமராக் கோணம்' பார்வையாளனை கதையிலிருந்து அன்னியப்படுத்துகிறது, ஏனெனில் திரையில் நடக்கும் செயலை அவன் சரியாகப் பார்க்க முடியாத போது, என்ன நடக்கிறது என்பது சரியாகத் தெரியாதால் கதையோட்டதில் ஆர்வம் குறைந்து அவனை எரிச்சல் அடையச்செய்கிறது. ஆகவே ஒரு ஷாட்டை வடிவமைக்கும்போது சரியான 'கேமராக் கோணத்தைத்' தேர்ந்தெடுப்பது முக்கியமாகிறது.


சில திரைக்கதைகள் அதற்குத் தேவையான கேமராக் கோணத்தைத் தீர்மானித்தாலும், இயக்குனர் படம் எடுக்கும் போது தமக்குத் தேவையான கோணத்தைத் தீர்மானித்துக்கொள்ள முடியும். ஒளிப்பதிவாளர் கதை மற்றும் இயக்குனரின் ஆலோசனையுடன் 'கேமராக் கோணத்தைத்' தேர்ந்தெடுக்கிறார். பெரும்பான்மையான இயக்குனர்கள் அதை ஒளிப்பதிவாளரின் பொறுப்பில் விட்டு விடுவது உண்டு. சில இயக்குனர்கள் திரைப்படம் எடுக்க தளத்திற்குச் செல்லுவதிற்கு முன்பாகவே, ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர் ஆலோசனையுடன் 'story board' வரைந்து கொண்டு தங்களின் கேமராக் கோணத்தைத் தீர்மானிக்கிறார்கள்.




Low Angle





Top Angle
திரையில் ஓடும் கதை என்பது தொடர்ச்சியாக மாறும் பிம்பங்களை/காட்சிகளை வெவ்வேறு கோணத்திலிருந்து காட்டுவதாகும். அதாவது காட்சியின் தன்மைக்கேற்ப பார்வையாளனை நடிகனின் அருகில்(close-up) இருந்து பார்ப்பதிற்கும், தூரத்தில் நிறுத்தி ஒரு புல்வெளியை (Landscape) முழுமையாகப் பார்க்க ஏதுவாகவும் கேமராக் கோணத்தைத் தீர்மானிக்கலாம். அதேபோல் ஒரு உயர்ந்த மாடியிலிருந்து கீழ் நோக்கிய கேமராக் கோணத்தால்(Top Angle) அந்த மாடியின் உயரத்தைக்கண்டு மலைக்கவைப்பதும், அண்ணார்ந்து பார்த்து வியக்க மேல் நேக்கிய கேமராக் கோணத்தையும்(Low Angle) பயன்படுத்தலாம். அதே போல் குதிரையில் பயணப்படும் குதிரையோட்டியின் இடத்தில் கேமராவைப் பொருத்தி அதன் வேகத்தையும் சாகாசத்தையும் உணரவைக்கலாம். மேலும் ஒரு நுண்ணிய கிருமியின் செயல்பாட்டை 'மைக்ரோஸ்கோப்' மூலமும், பூமின் சுழற்சியை செயற்கைக் கோளிலிருந்தும் காட்டலாம்.






ஒரு பார்வையாளனை எதைவேண்டுமானாலும்(anything) எங்கிருந்து(anywhere) வேண்டுமானாலும் எந்தக் கோணத்திலும்(any angle) உடனுக்குடன்(instantly) பார்க்கவைக்க முடியும். ஒளிப்பதிவாளர் மற்றும் 'எடிட்டர்'(Editor) துணைகொண்டு திரைப்படத்தில் இதை சாத்தியப்படுத்த முடியும். இதுவே திரைப்படத்தின் மிகப் பெரிய பலம். ஆகவேதான் சரியான 'கேமராக் கோணத்தைத்' தேர்ந்தெடுப்பது அதிமுக்கியமாகிறது.  


அதற்கு முன்பாக நாம் முக்கியமான மூன்று விஷயங்களைப் பார்த்துவிடுவோம்.


சீன் : Scene
ஒரு சீன் என்பது அந்தக் காட்சி நடக்கும் இடம் அல்லது தளத்தைக் குறிப்பது. ஒரு காட்சி என்பது ஒரு சீனாகவோ(Scene)  அல்லது பல சீனாகவோ பிரிக்கப்பட்டிருக்கும். அதே போல் ஒரு சீன் என்பது ஒரு ஷாட்டாகவோ(shot) அல்லது பல ஷாட்டாகவோ காட்சியின் தொடர்ச்சியைப் பொறுத்துப் பிரிக்கப்பட்டிருக்கும்.


ஷாட்: shot
ஒரு ஷாட் என்பது கேமராவைக் கொண்டு எந்த வித இடை நிறுத்தமும் இல்லாமல் தொடர்ச்சியான பார்வைக்கு படம் பிடிக்கப்படும் ஒரு காட்சி துண்டு. (a continuous view filmed by one camera without interruption)


அதாவது ஒரு காட்சியைப் படம் பிடிக்க கேமராவைத் துவக்கியதிலிருந்து நிறுத்தும் வரைக்கும் இடைப்பட்ட காட்சித் துண்டை ஒரு ஷாட் என்கிறோம்.


ஒவ்வொரு ஷாட்டும் ஒரு டேக் (take) என்கிறோம். அதே செயலை எந்த வித மாறுதலும் இல்லாமல், தொழில்நுட்பத் தவறினாலோ அல்லது சிறப்பாக இருப்பதிற்காகவோ மீண்டும் எடுத்தால் அதற்கு Re-take என்று பெயர்.


கேமராவின் கோணத்தையோ, லென்சையோ அல்லது காட்சியின் தொடர்ச்சியையோ மாற்றி எடுத்தால் அது Re-take ஆகாது. அது ஒரு புது ஷாட் (New shot) என அழைக்கப்படும்.


சீக்வன்ஸ்: sequence
சீக்வன்ஸ் என்பது ஒரு முழுமையடைந்த தொடர்ச்சியான சீன்களின் தொகுப்பு அல்லது தொடர்ச்சியான ஷாட்களின் தொகுப்பு (series of scenes, or shots , complete in itself) எனலாம்.




ஒரு சீக்வன்ஸ் என்பது ஒரே இடத்திலே முடியலாம். அல்லது அந்தக் காட்சிக்குத் தகுந்த மாதிரி வெவ்வேறு இடங்களிலும் இருக்கலாம். அதாவது ஒரு நடிகன் வீட்டின் முன்புறத்திலிருந்து வீட்டிற்குள் சென்று சமையல் அறையில் இருக்கும் மனைவிடம் பேசுவது வரை இருக்கிறது என்றால் இந்தக் காட்சி வெவ்வேறு இடத்தில் நிகழ்கிறது என்றாலும் இது ஒரு சீக்வன்ஸ் என அழைக்கப்படும்.


அதேபோல் ஒரு சீக்வன்ஸ் எடிட்டிங்கின் போது நேரடியாக 'cut shot'-ஆக எடிட் செய்திருக்கலாம். அல்லது fade or dissolve உபயோகித்து எடிட் செய்திருக்கலாம்.
....................................................


பொதுவாக சீன்(scene) மற்றும் ஷாட்(shots)-வார்த்தையை மாற்றி உபயோகிக்கும் போது குழப்பம் வருகிறது. பொதுவாக ஒரு சீன் என்பது பல ஷாட்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. சீனுக்கு ஒரு எண்ணும் அதில் வரும் ஷாட்டுக்கு ஒரு எண்ணும் கொடுத்து அடையாளப்படுத்துகிறார்கள். அதாவது ஐந்தாவது சீன், இரண்டாவது ஷாட், முதலாவது take  என்றால்..5/2/1 என அடையாளப்படுத்துவார்கள்.


சில திரைக்கதையில் ஒரு ஷாட்டே ஒரு சீனாக இருக்கிறது. இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அந்த ஒரு ஷாட் சீனுக்கு a,b,c,d.. என்று எழுத்தால்(letters) அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கே ஒரு ஷாட்டே ஒரு சீனாக இருக்கிறது. ஒரு சீன் என்பது ஒரே ஒரு ஷாட்டாவும் இருக்கிறது. இந்த இடங்களில் வரும் குழப்பத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் சீன், ஷாட் வார்த்தையை சரியாகப் பயன்படுத்தலாம்.


ஒரு ஷாட்டையோ அல்லது ஷாட்டின் துண்டிக்கப்பட்ட ஒரு பகுதியையோ ஒரு கட்(cut) என்கிறோம். சில சமயங்களில் ஒரு ஷாட்டிலிருந்து சில பகுதியைத் துண்டித்து மற்றொரு ஷாட்டாகப் பயன்படுத்துவார்கள். அதாவது ஒரு நடிகனின் சிரிக்கும் பகுதியை அவனின் பேச்சோடு இணைந்திருந்ததலிருந்து பிரித்தெடுத்து மற்ற நடிகனின் செயலுக்கு அப்புறம் பயன்படுத்துவார்கள்.


அடுத்து கேமராக் கோணங்களின் வகைகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். அது அடுத்த கட்டுரையில்..








TYPES OF CAMERA ANGLES
OBJECTIVE -  புறநிலைக் கோணங்கள்
SUBJECTIVE - அகநிலைக் கோணங்கள்
POINT-OF-VIEW - பார்வை இலக்குக் கோணங்கள்




அதற்கு முன்பாக இந்தக் கட்டுரையில் நாம் என்ன தெரிந்துக்கொண்டோம் என்பதின் ஒரு சுருக்கம்:
1. கேமராக் கோணம் என்பது என்ன.
2. கேமராக் கோணம் ஏன் சரியாக அமைக்க வேண்டும்.
3. என்ன வகையான 'ஷாட்' என்பது.
4. சீன், ஷாட், சீக்கியுவன்சஸ் என்பது என்ன.
5. take, re-take, cut என்றால் என்ன.
6. சீன், ஷாட், take ஆகியவையை எப்படி அடையாளப்படுத்த வேண்டும்.


....................................................................................


இந்தக் கட்டுரைக்கான கேள்விகள்:
1. பத்தாவது சீன், நான்காவது ஷாட், எட்டாவது take என்பதை எண்ணில் எப்படிக் குறிப்பீர்கள்?
2. உயரே பறக்கும் விமானத்தைக் கீழே இருந்துப் படம் எடுக்கப் பயன்படும் கோணத்திற்கு என்ன பெயர்? 
3. வானத்தில் உயரே பறக்கும் பறவையின் பார்வையில் இருந்து பார்க்கும் கோணத்திற்கு என்ன பெயர்?( இந்தக் கேள்விக்கு பதிலை இந்தக் கட்டுரையில் காணமுடியாது..நெட்டில் தேடுங்கள்)


மற்ற பாகங்களை படிக்க இங்கே சொடிக்கவும்

திரைப்பட உருவாக்கத்தில் உதவும் FIVE C'S -ஐத் தெரிந்துகொள்ளுங்கள்: முன்னுரை

 திரைப்படம் என்பது எதற்காக? 
ஒரு பார்வையாளன் ஏன் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்? 
திரைப்படம் அவனுடைய எந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது?



இந்தக் கேள்விகள் என்றேனும் உங்களுக்கு வந்ததுண்டா? இந்தக் கேள்விகளுக்கு பதில் உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். தெரியாதவர்கள் பதில் தேடுங்கள்.


அந்தப் பதில் நாம் ஏன் சினிமா எடுக்கவேண்டும், என்ன எடுக்க வேண்டும், யாருக்கு எடுக்கவேண்டும், எப்படி எடுக்க வேண்டும் என்ற தெளிவை நமக்குத் தரும்.





பொதுவாக இங்கே ஒரு விவாதம் உண்டு. திரைப்படம் எடுப்பது என்பது முழுக்க முழுக்க படைப்பாற்றல்(Creative) சம்பந்தப்பட்டது, தொழில்நுட்பம்(Techincal) சம்பந்தப்பட்டது அல்ல என்று ஒரு சாராரும், இல்லை இல்லை அது தொழில்நுட்பத் திறனோடு சம்பந்தப்பட்டது என்று மறுசாராரும் விவாதிப்பது உண்டு. இந்த விவாதங்களில் நானும் பல தடவை கலந்துகொண்டதுண்டு.


திரைப்படம் எடுக்க படைப்பாற்றல் மட்டும் இருந்தால் போதுமா? அது உங்களின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றல் திறன் ஆகியவற்றை மட்டும் சார்ந்ததா? அல்லது தொழில்நுட்ப அறிவைச் சார்ந்ததா?


இந்தக் கேள்விகளுக்கு சுலபமாக பதில் செல்லிவிட முடியும். கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன் மற்றும் அதனோடு இணைந்த தொழில்நுட்பத்திறன் ஆகியவையே ஒரு திரைப்படத்தை எடுக்கத் தேவையான தகுதி என்று. உண்மைதான், ஆனால் இது இரண்டும் எந்த சதவிகிதத்தில் கலந்து இருக்கவேண்டும் என்பதுதான் இங்கே எழும் ஆதாரக் கேள்வி. இதற்குத்தான் பல முரண்பட்ட கருத்துகள் வருகின்றன.


இரண்டும் சரிசமமாக இருக்கவேண்டும் என்றும், படைப்பாற்றலே அதிகமாகப் பங்காற்றவேண்டும் என்றும், இல்லை இல்லை இது தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் துறை, அதனால் தொழில்நுட்பத்திறனே அதிகமாகப் பங்காற்ற வேண்டும் என்றும் கருத்துச் சொல்லப்படுகிறது. 


அது 50/50 அல்லது 40/60 அல்லது 60/40 என்பதை நீங்கள் சொல்லுங்கள்.













படைப்பாற்றல் திறன் மற்றும் தொழில்நுட்ப திறன் இரண்டும் எந்த சதவிகிததில் கலந்து இருக்க வேண்டும்









இந்தக் கட்டுரையின் நோக்கம் எந்த சதவிதமாகவோ இருந்துவிட்டுப் போகக்கூடிய தொழில்நுட்பத்தைச் சார்ந்த சில விதிகளை அறிமுகப்படுத்துவதே.


எந்தத் தொழிலாகட்டும், விதிகள் எப்படி உருவாக்கப்படுகின்றன? சட்டென்று ஒரு நாளிலா? யாருக்கோ தோன்றியதைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்களா? இல்லை. விதிகள் என்பவை நாளாவட்டத்தில் உருவாகின்றன. அதாவது ஒரு குறிப்பிட்ட முறையில் செயல்படும் போது நமக்குத் தேவையான பலன் அதீதமாக, சுலபமாகக் கிடைக்கிறது என்பதைக்கண்டு, அந்தக் குறிப்பிட்ட செயல்முறையைப் பல தடவை பயன்படுத்திப் பார்த்து, வெற்றி கிடைத்ததை உறுதி செய்த பின், அடுத்து வருபவர்களுக்கு விதிகளாக உருவாக்கி வைக்கிறார்கள். இதன் நோக்கம் என்ன? வருங்காலங்களிலாவது கால விரையம் அற்று, பொருள் விரையம் அற்று சரியான பலனை அடைய வேண்டும் என்பதே.


அப்படி திரைப்படத் தயாரிப்பிலும் பல விதிகளை நம் முன்னோடிகள் உருவாக்கி வைத்துவிட்டுபோயிருக்கிறார்கள். அந்த விதிகளின்படி படம் எடுக்கும் போது, நாம் நினைக்கும் உணர்ச்சியை, கருத்தை பார்வையாளனுக்கு சுலபமாகக் கொண்டுசேர்க்க முடியும். படம் பார்க்கும் பார்வையாளனின் கவனம் சிதறாமல், அவனை சங்கடத்தில் ஆழ்த்தாமல், அதீதமாக பிரயத்தனம் பட வைக்காமல், இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் கதைசொல்லும் போது அவன் உன் கையைப் பிடித்துக்கொண்டு நீ கூப்பிடும் இடத்திற்கெல்லாம் வருவான்,  அதற்கு இந்த விதிகள் உதவும் என்பது நம் முன்னோடிகளின் கருத்து. உண்மைதான், அது பல தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.


விதிகள் எப்போதும் உடைக்கப் படக்கூடியவைதான். இன்றோ நாளையோ வரும் புதிய தலைமுறை புது விதிகளை உருவாக்கும் அல்லது விதிகள் வேண்டாம் என்றுசொல்லும். அது காலத்தின் மாற்றம். இங்கு 'மாற்றம் மட்டுமே மாறாதது' என்பது வெறும் வார்த்தை ஜாலம் இல்லை. அது வாழ்வியல் விதி. இந்த விதி எல்லாவற்றிற்கும் பொருந்தும்.


நீங்கள் விதியைப் பின்பற்றுபவரா? இல்லை விதியை உடைப்பவரா? என்பது உங்களின் சவுகரியம், ஆனால் எதையும் உடைப்பதிற்கு முன்பாக அதைத்தெரிந்துகொள்ளுங்கள், முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரு புரிதலுக்காவது அதைப்பற்றி அறிந்திருங்கள்.


படம் எடுக்கும் முறையை முதலில் அறிந்துகொள்ளுங்கள், பார்வையாளனை உங்கள் கதையோடு ஒன்றிப்போக வைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு காலம் காலமாகப் பின்பற்றும் வெற்றி முறைகள் எது என்று அறிந்து கொள்ளுங்கள். புதிய முறையில் படம் எடுங்கள். ஆனால், அதற்கு முன்பாக எது ஆதார முறை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.


ஒரு 'தட்டச்சாளனாக'(Typist) வேலைசெய்யவேண்டுமென்றால்கூட 'Type writing' படிக்கவேண்டும். அதற்கும் சில விதிகள் உண்டு. அப்படி இருக்க திரைப்படம் மட்டும் எந்தத் தொழில்நுட்ப அறிவும் இன்றி எடுத்துவிடலாம் என்று நினைப்பது எவ்வளவு தவறு.


எதையும் கற்றுக்கொள்ளும் போது விதிகளை/முறைகளை பின்பற்ற வேண்டியதாக இருக்கிறது. கற்றுக்கொண்ட பின்பு அந்த விதிகளை நாம் ஞாபகம் வைத்துப் பின்பற்ற வேண்டியது இல்லை. அதுவாக தானாக நம் செயலில் இருக்கும், நம் செயல் இயல்பாக அந்த விதிகளுக்கு உட்பட்டுதான் இருக்கும். நீங்கள் 'இருசக்கர வாகனம்' ஓட்டக் கற்றுக்கொண்டதையோ அல்லது 'நீச்சல்' கற்றுக்கொண்டதையோ நினைத்துப்பாருங்கள். எவ்வளவு பிரயத்தனம் பட்டிருப்போம்,


" 'கெலெச்சை' விடும்போது 'ஆக்சலேட்டர்' கொடு,  கியரை மாற்றும்போது கெலெச்சைப் பிடி" என்றும், 
"கையை படபட என்று அடுத்துக்கொள், காலை பின்னோக்கி அடி" என்றும்


சொல்லிச்சொல்லித் தரப்பட்டு, தப்புச் செய்து, தப்புச் செய்து கற்றுக்கொண்டோம். ஆனால் கற்றுக்கொண்ட பிறகு!


எதையாவது ஞாபகம் வைத்துச் செயல்படுகிறோமா? இல்லை. 'இருசக்கர' வாகனம் ஓட்டும் போது நாம் ஏதோ ஏதோ சிந்தித்துக்கொண்டு ஓட்டுகிறோம், வண்டி சரியாகத்தான் போகிறது. அது எதனால்? வண்டி ஓட்டி ஓட்டிப் பழகியதால் வண்டியோட்டும் முறைகள் நமக்குள் பதிந்து விடுகின்றன. பின்பு நாம் விதிகளைப் பின்பற்ற பிரயத்தனம் பட வேண்டியதில்லை.


அதேபோல் நீச்சல் கற்றுக்கொண்ட பிறகு மிதப்பதற்கு நீங்கள் எந்தக் கடின முயற்சியையும் செய்ய வேண்டாம். சும்மா மெதுவாக காலையோ கையையோ அசைத்துக்கொண்டிருந்தாலே மிதப்பீர்கள். இது எதனால்? ஏனெனில் உங்கள் செயலில் ஆதாரமான நீச்சலுக்கான விதி பொருந்தி இருக்கிறது, அது உங்களை மூழ்க விடாமல் பார்த்துக்கொள்கிறது.   அதுபோலத்தான் எந்தத் தொழிலிலும் அதன் ஆதார விதிகளைப் பழகிக்கொண்டால் நாம் நம் வேலையை அதன் போக்கில் செய்ய முடியும். யோசித்துப்பாருங்கள் இது உண்மை என்பது புரியும். திரைப்படமும் அப்படித்தான், அதன் ஆதார விதிகளைத் தெரிந்துகொண்டால் அது உங்களை மூழ்காமல் காப்பாற்றும். நீங்கள் உங்கள் படைப்பாற்றலில் செயல்படலாம்.




திரைப்படம் எடுக்க பல தொழில்நுட்ப விதிகள் உண்டு. அதில் திரைப்பட உருவாக்கத்தின் போது, படபிடிப்புத்தளத்தில்  காகிதத்தில் இருக்கும் காட்சியை திரைப்படமாக எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிகளைப்பற்றி 'Joseph v. Mascelli' என்கிற ஒளிப்பதிவாளர் ' THE FIVE C's of Cinematography' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதில் திரைப்படம் எடுக்கும் போது நாம் கவனிக்க வேண்டிய ஐந்து ' C '-களைப் பற்றி விளக்கி இருக்கிறார். அவை

1.CAMERA ANGLES - கேமராக் கோணங்கள்
2.CONTINUITY - தொடர்ச்சி
3.CUTTING - வெட்டுதல்
4.CLOSE-UPS - குளோசப்புகள்
5.COMPOSITION - கம்போசிஷன் (வரையரைப்படுத்துதல் என்று சொல்லலாமா?)




இதை ஒவ்வொன்றாக விளக்க அவர் 250 பக்க புத்தகம் எழுதி இருக்கிறார். நான் அப்படி எல்லாம் எழுதப்போவதில்லை. இனிவரும் கட்டுரைகளில் ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே என் நோக்கம். இந்தக் கட்டுரைகள் அந்தப் புத்தகத்தின் நேரடி மொழியாக்கம் அல்ல. நான் அந்தப் புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொண்டதையும், நடைமுறையில் நான் அதைப் பயன்படுத்தி அடைந்த பலனின் கிடைத்த அனுபவ அறிவில் எழுதப்படுகிறது. அதேபோல் முழுமையாக விளக்க முடியாது, அதைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு அறிமுகக் கட்டுரைகளாகவே இவை இருக்கும்.


என்ன துவங்கலாமா...?




ARMSTRONG VIJAY