இதற்கும் நான்காண்டுகளுக்கு முன்பு அதாவது 1944-ல் டிசிகா உருவாக்கிய திரைப்படம் The Children Are Watching Us.
'இந்தக் கட்டிடம் வெறும் சிமெண்ட்டாலும் செங்கற்களாலும் ஆனது. இதை ஒரு வீடாக மாற்றுவது உன் கையிலதான் இருக்கிறது' என்று ஒரு கணவன் தன் புது மனைவியிடம் சொல்வது போல் ஒரு காட்சி மெளனராகம் திரைப்படத்தில் வரும். குடும்பம் என்கிறதொரு நிறுவனம் ஒரு பெண்ணால்தான் முழுமையடைகிறது, அவளால்தான் சிறப்பாக பேணப்படுகிறது, தொடர்ந்து இயங்குகிறது. அவள் அந்த நிறுவனத்திலிருந்து விலகி விட்டால் அது தட்டுத் தடுமாறி பிறகு அமிழ்ந்தே போய்விடுகிறது.
'இப்படியாகச் சொல்லித்தானே எங்களை விலங்கிட்டு வைத்திருக்கிறீர்கள்?' என்பது பெண்ணியவாதிகளின் கூக்குரலாக இருந்தாலும் இதுவே உண்மை. ஒரு ஆணால் இந்த நிறுவனத்தை சிரமப்பட்டாவது விதிவில்க்காக இயங்க வைத்துவிட முடியுமென்றாலும் ஒருக்காலும் பெண் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை அவனால் நிரப்ப முடியாது.
The Children Are Watching Us திரைப்படம் மேற்சொன்னவைகளை பிரதானமான முன்வைத்து இயங்குகிறது.
நான்கு வயதுச் சிறுவனான பிரிக்கோ, தந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் உணர்ச்சிப் போராட்டத்தினால் அலைகழிக்கப்படுகிறான். அவனது தாய் நினா, ராபர்டோ என்பவனைக் காதலிக்கிறாள். அவனுடன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக தன் குடும்பத்திலிருந்து விலகிச் செல்கிறாள். கணவனான ஆண்டிரியா, இது குறித்து பெருத்த அவமானமும் துன்பமும் அடைகிறான். சிறுவனை பார்த்துக் கொள்வதற்காக உறவினர்களிடம் உதவியை நாடுகிறான். இதனால் அலைக்கழிக்கப்படும் சிறுவனான பிரிக்கோ மிகுந்த காய்ச்சலில் விழுந்து கிடப்பதைக் கேள்விப்பட்டு தாய் திரும்பி வருகிறாள். அவளுடன் இணைந்து வாழ விருப்பமில்லாவிட்டாலும் மகனுக்காக அவளைத் தன்னுடன் இருக்க அனுமதிக்கிறான் கணவன். இப்படியாக சில நாட்கள் கழிகின்றன. தம்பதிகளுக்குள் இயல்பாக நேசம் மலருகிறது. மனைவியை மகிழ்விப்பதற்காக அருகிலுள்ள நகருக்கு சில நாட்களுக்கு இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்கிறான் கணவன். ஆனால் அலுவலக விஷயமாக இரண்டொரு நாட்களிலேயே உடனே திரும்ப வேண்டிய சூழ்நிலை. மனைவியையும் மகனையும் சுற்றுலாத் திட்டம் முடிந்த பிறகு வந்தால் போதும் என தான் மாத்திரம் திரும்புகிறான்.
திரும்ப வரப்போகும் மனைவிக்காக வீட்டு அலங்காரங்களைச் செய்துக் கொண்டிருக்கும் அவனுக்கு, தாயால் கைவிடப்பட்டு எங்கெங்கோ அலைக்கழிக்கப்பட்டு எப்படியோ திரும்பி வரும் மகனின் மூலம் அதிர்ச்சி கிடைக்கிறது.
ஆம். அவனது மனைவி மீண்டும் காதலருடன் போய் விடுகிறாள். இம்முறை அவமானம் தாங்காத கணவன் தற்கொலை செய்து கொள்கிறான்.
திரைப்படங்களில் அதுவரை மிகுந்த ஆச்சாரமாக பேணிக் காக்கப்பட்டுக் கொண்டிருந்த 'குடும்பப் பெண்' என்னும் குறியீட்டை அதற்குரிய பிரத்யேக உணர்ச்சி வெளிப்பாடுகளின் மூலம் சித்தரித்து அந்தக் குறியீட்டை உடைத்தெறிந்ததின் மூலம் இந்தப் படம் முக்கியமானதாக உள்ளது.
தங்களின் காதல்களை வெளிப்படையாகச் சொல்லும், மனைவியிடமிருந்து விலகி காதலியை தேடிச் சென்று மனம் திருந்தி மீண்டும் மனைவியிடமே வந்தால் கூட இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படும் ஆண்களின் உலகத்தில், அதே வகையான உணர்ச்சிகள் பெண்ணுலகத்திலும் இருக்கலாம் என்று சிந்திப்பதையே ஆபத்தானதாக இன்றும் கூட கருதப்படும் சூழலில் 1940-களில் இம்மாதிரியான திரைப்படம் வந்தது நிச்சயம் புரட்சியானதாகத்தானிருக்க வேண்டும். இத்திரைப்படத்தையே அந்த மனைவியின் பார்வையில் இயக்குநர் சித்தரித்தால் நமக்கு இந்த உறவின் இன்னொரு பரிமாணம் தெரிந்திருக்க்கூடும்.
டிசிகா இத்திரைப்படத்தை மிக சுவாரசியமாகவும் லாவகமான காட்சிக் கோர்வைகளின் மூலம் நகர்த்திச் செல்கிறார். பொதுவாக குழந்தைகளை வைத்து படப்பிடிப்பு நடத்துவது கடினமானது. தாம் நினைப்பதை உடனேயே செயல்படுத்தி விடக்கூடிய சுதந்திரமுள்ள குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி சட்டகத்திற்குள் கட்டுப்படுத்தி இயங்க வைப்பது மிகுந்த பொறுமையைக் கோரக்கூடியது. இதில் பிரிக்கோவாக நடித்திருக்கும் சிறுவன் ஒவ்வொரு பிரேமிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறான். தந்தையின் அருகாமையிருந்தாலும் தாயின் அரவணைப்பே அவனுக்குத் தேவை என்பதை பல காட்சிகளில் வெளிப்படுத்துகிறான்.
படத்தின் இறுதிக் காட்சி மிக முக்கியமானது. கணவனின் தற்கொலைக்குப் பிறகு மகனைத் தேடி வரும் தாய், அவன் தன்னிடம் வருவான் என்று தீர்மானமாக நம்புகிறாள். இத்தனை துன்பத்திற்கும் காரணம் அவளுடைய காதல்தான் என்பதை தன் நுண்ணறிவால் புரிந்து கொள்ளும் பிரிக்கோ, கண்ணீருடன் தன்னுடைய புறக்கணிப்பையே அவளுக்குத் தண்டனையாகத் தருகிறான். எவர் துணையுமின்றி அவன் தனியாக திரும்பி நடக்கும் சித்திரத்துடன் படம் நிறைகிறது.
'ஒரு துப்பாக்கியை உன் படைப்பில் வர்ணணை செய்திருந்தால் பின்னர் அது நிச்சயம் வெடிக்க வேண்டும்' என்கிறார் ருஷ்ய சிறுகதையாசிரியர் ஆண்டன் செகாவ். இத்திரைப்படத்திலும் அந்தக் குடும்பம் கட்டிடடத்தின் எட்டாவது மாடியில் தங்கியிருப்பது ஆரம்பக் காட்சியில் சூசகமாக உணர்த்தப்படுகிறது. படத்தின் இறுதியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட செய்தி மாத்திரமே உரையாடல்களின் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. எனில் அத்தற்கொலை எவ்வாறு நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை பார்வையாளன்தான் யூகிக்க வேண்டும்.
திரும்பி வந்த மனைவி உண்மையாகவே தன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்து கொள்ள விரும்புகிறாள். தன்னைத் தேடி வரும் காதலனையும் விரட்டியடிக்கிறாள். ஆனால் அவள் மனம் எவ்வாறு திரும்பவும் மாற நேர்கிறது என்பதை மிக இயல்பான காட்சிகளின் மூலம் சொல்கிறார் இயக்குநர். சுற்றுலா நகரில் கட்டற்ற சுதந்திரத்துடன் இரு ஆண்களுடன் சுற்றும் பெண் இவள் கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கிறாள். அதில் ஒருவனும் இவளைத் தொடர்ந்தபடியே இருக்கிறான். அந்தக் குழுமத்துடன் நட்பேற்படும் சூழலும் நிகழ்கிறது. இந்நிலையில் இவளைத் துரத்தி வரும் காதலுனும் அங்கு வந்து சேர இவளுக்குள் பழையகாதல் உணர்வுகள் சுதந்திரமாக துளிர்க்கின்றன்.
இந்த கணவன்-மனைவி உறவின் விரிசலை மோப்பம் பிடித்தபடியே அலையும் பக்கத்து வீட்டுக்காரி, அந்தக் குடும்பத்தினருக்காக மிக உண்மையாக, ஆத்மார்த்தமாக உழைக்கும் தாதி, காதலனைத் தேடிப் போகும் சகோதரியை ஆதரிக்கும் தங்கை, அவளுடைய வயதான காதலன்...என்று ஒவ்வொரு பாத்திரமும் அதற்குரிய தனித்தன்மைகளுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன்.
இத்திரைப்படம் முழுவதுமே சிறுவனான பிரிக்கோவின் பார்வையிலேயே செல்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே, தாய் இவனை விட்டு விலகிச் சென்றிருப்பதை அறியாமல் அந்நியச் சிறுவனோடு தன் சைக்கிளை பகிர்ந்து கொள்வதும், தந்தையை புண்படுத்த வேண்டாமே என்று தாயின் பொய்களுக்கு உடந்தையாக இருப்பதும், வீட்டிற்கு வரும் தாயின் காதலனை கையைப் பிடித்து கடித்து துரத்துவதும், சுற்றுலா நகரில் தன்னை விட்டு விட்டு காதலனுடன் சுற்றும் தாயை வெறுத்து தன்னந்தனியாக ஊர் திரும்ப முடிவு செய்வதும் என்று குழந்தைகளின் அகவுணர்வுகள் இவனின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
படத்தின் ஒளிப்பதிவு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. நுட்பம் வளர்ந்ததின் காரணமாக நாம் இழந்தவைகளில் கறுப்பு -வெள்ளைத் திரைப்படங்களும். அட்சரம் பிசகாத துல்லியமான வண்ணத் திரைகளில் கூட கொண்டு வர முடியாத உணர்ச்சி வெளிப்பாடுகளை கறுப்பு -வெள்ளைச் சட்டகங்கள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.
குழந்தைகளின் உலகின் மூலம் பெரியவர்களின் அபத்த உலகைக் காண விரும்புவர்கள் தவறவிடக்கூடாத திரைப்படமிது
ஹிட்ச்காக்-கை ஒரு மூன்றாந்தர திகில் பட இயக்குநர் என்றே ஏனோ நீண்ட ஆண்டுகளாக நான் எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழில் 'மாடர்ன் பிக்சர்ஸ்' எனும் சினிமா நிறுவனம் பெரும்பாலும் ஜெய்சங்கரை வைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் வெளியிடும் அபத்தமான சஸ்பென்ஸ் படங்களையும் ஹிட்ச்காக்கையும் எப்படியோ நானாகவே தொடர்புபடுத்தி ஒரு முன்முடிவுடன் அவரை நிராகரித்து வைத்திருந்தேன். அது எத்தனை பெரிய தவறு என்பது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிந்தது. பிரிட்டிஷ்காரராக இருந்தாலும் பிற்பாடு பெரும்பாலான படங்களை ஹாலிவுட் நிறுவனங்களின் மூலம் உருவாக்கியதால் 'ஹாலிவுட்டின் சிறந்த கதைசொல்லி' என்று அவரை முதன்மைப்படுத்த விரும்புகிறேன்.
ஹிட்ச்காக்கின் பெரும்பான்மையான படங்கள் 'சஸ்பென்ஸ்' வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் அவை செயற்கைத்தனமான பரபரப்பையோ, அசட்டுத்தனமான மர்மங்களையோ கொண்டிருப்பதில்லை. மாறாக பாத்திரங்களின் அகவுணர்வு சார்ந்தும் உளவியல் ரீதியானதாகவும் அர்த்தப்பூர்வமான வித்தியாசமான காமிரா கோணங்கள் மூலமும் அழுத்தமான காட்சிகளை கோர்ப்பதின் மூலமும் மிக உயர்ந்த தளத்தில் இயங்குகின்றன. தம்முடைய படங்களில் தொடர்ந்து அவர் பரிசோதனை முயற்சிகளை செய்துவருவதை பார்வையாளர்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக ROPE என்கிற திரைப்படம் முழுவதுமே வெறும் 10 நீளமான காட்சிகளுடன் தொடர்ச்சியான ஒரே காட்சிக்கோர்வை போன்ற பாவனையுடன் உருவாக்கப்பட்டது.
ஹிட்ச்காக் படங்களின் மிகப் பெரிய பலமாக அவரின் திரைக்கதையமைப்பை குறிப்பிடலாம். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் திரைக்கதையை அதன் ஒவ்வொரு பிரேமிலும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குறைவான வசனங்களுடன் பெரும்பாலும் காட்சிப்பூர்வமாக மிக கச்சிதமாக சிந்தித்து மிகுந்த திட்டமிடலுக்குப் பின்புதான் படப்பிடிப்பிற்குத் தயாராகிறார். அதற்குப் பிறகு திரைக்கதையை ஒரு தகவலுக்காகக் கூட அவர் பார்ப்பதில்லை. அத்தனையுமே அவர் மூளையில் தெளிவாக பதிவாகியிருப்பதால் எவ்வித தயக்கமுமில்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் தம் படைப்பை உருவாக்கிச் செல்கிறார்.
படத்தின் துவக்கத்திலேயே அழுத்தமான ஒரு கொக்கியை பார்வையாளர்களின் மூளைகளில் மாட்டிவிடுகிறார் ஹிட்ச்காக். படம் பூராவும் அந்தக் கொக்கி நம்மை சுவாரசியமாக இழுத்துச் செல்கிறது. இந்த ரோலிங் கோஸ்டர் பயணம் காரணமாக ஒருவேளை நடுவில் ஏற்படும் தொய்வு கூட நம்மை பாதிப்பதில்லை.
ஹிட்ச்காக் படங்களில் நடிகர்கள், குறிப்பாக நாயகிகள், கருப்பு - வெள்ளை திரைப்படத்திலும் அவர்களைக் காதலிக்கத் தூண்டுமாறு பிரத்யேக அழகுடன் உள்ளனர். ஆனால் அவர்கள் வெறுமனே அழகுப்பதுமைகளாக சித்தரிக்கப்படுவதில்லை. அவர்களுககுரிய தனித்தன்மையுடனும் சுயமரியாதை உள்ளவர்களாகவும் ஆபத்துக்காலங்களில் சுயமாக சிந்தித்து போராடுபவர்களாகவும் வெளிப்படுகிறார்கள்.
உண்மையில் நான் இந்தப் பதிவை எழுத ஆரம்பித்ததே ஹிட்ச்காக்கின் 'The Wrong Man'என்கிற திரைப்படத்திற்காக. மாறாக அவரை சிலாகிப்பதிலேயே இத்தனை வரிகளை செலவழித்து விட்டேன். தவறொன்றுமில்லை.
'ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது'என்பது தேய்ந்து போன வாக்கியமாக இருந்தாலும் அதன் அளவில் மிக அர்த்தப்பூர்வமானது. செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிப்பதைப் போன்ற கொடுமை எதுவுமே கிடையாது. தண்டனையின் கூடவே சுயஇரக்கமும் சேர்ந்து ஆளையே முழுக்கக் கொன்றுவிடும்.
கொஞ்சம் சுயபுராண பிளாஷ்பேக். சற்று சகித்துக் கொண்டாவது வாசித்து விடுங்கள்.
இலக்கியத்தில் ஆர்வமுள்ள பெரும்பாலானோரைப் போல எனக்கும் கணிதம் என்றால் ஆகாது. பள்ளிப்பருவத்தில் மற்ற பாடங்களை சுமாராகவும் தமிழ்ப்பாடத்தை விருப்பத்துடனும் படித்து விடும் எனக்கு தருக்கத்தின் மிகக் கடினமான வடிவமான கணிதத்துடன் எப்போதும் மல்லுக்கட்டல்தான். 'கணிதத்தில் மட்டும்தான் உங்கள் ஜீரோ மதிப்பெண் வாங்க முடியாது' என்பார் என்னுடைய ஆறாம் வகுப்பு கணித ஆசிரியர் அமலதாஸ். மிகக் கண்டிப்பானவர். ஆனால் அதை ஒரு சாதனையாக செய்து அடிக்கடி அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பேன். புறங்கையின் மீதான விரல் எலும்புகளின் மீது மரக்கட்டை ஸ்கேல் அமலதாஸின் மூலம் வேகமாக மோதும் போது கணிதத்தின் மீதான வெறுப்பும் ஒவ்வாமையும் இன்னும் கூடவே செய்யும்.
இப்படியாக ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கணிதத்தின் மூலமாக ஒருபுறமும் அமலதாஸின் மூலமாக இன்னொரு புறமும் தொடர்ந்து கொண்டிருந்த தாக்குதல் பத்தாம் வகுப்பில்தான் முடிவிற்கு வந்தது. ஆனால் படம் முடிந்தும் டிரைலர் முடியவில்லை என்கிற கதையாக பத்தாம் வகுப்பிலும் விதியும் அமலதாஸூம் வேறுவடிவில் நுழைந்தனர். 'எந்தெந்த வகுப்பிற்கு யார் யார் ஆசிரியர்கள்' என்று முதல் நாளில் நாங்கள் ஆவலாக அமர்ந்திருந்த போது நுழைந்தாரய்யா அமலதாஸ். எனக்குள் பயப்பந்து ஒன்று சுருண்டு உருண்டது. ஆனால் அவர் ஆங்கிலம் இரண்டாம் தாளுக்காம். கணிதத்திற்கு அல்லவாம். அப்பாடா ஒரு வகையில் நிம்மதி!.
முதல் நாளே ஒரு ஆங்கிலச் செய்யுளை நடத்திவிட்டு அதை மனப்பாடம் செய்து வரவேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார் அமலதாஸ். இப்போது எல்.கே.ஜி. படிக்கும் என் மகளின் மொழியில் சொன்னால், 'மிஸ் ரொம்ப ஓவராத்தான் பண்ணிக்கிறாங்க."
ஆனால் குறிப்பிட்ட அந்தச் செய்யுளை ஏற்கெனவே நான் மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். இங்கே என்னுடைய மூத்த சகோதரரை நினைவு கூர வேண்டும். அமலதாஸின் மிக உக்கிரமான வடிவம் அவர். டியுஷனுக்குச் செல்ல மறந்து விளையாடின மயக்கத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை தூக்கிப் போட்டு மிதித்த அந்தச் சம்பவத்தினை நினைத்தால் இன்றும் கூட என் முதுகுத்தண்டு சில்லிடுகிறது. ஒன்பதாம் வகுப்பு முடித்து கிடைத்த ஆண்டு விடுமுறையில் கூட என்னை அதிகம் விளையாட விடாமல் அடுத்த ஆண்டிற்கான படிப்பை அப்போதே கட்டாயப்படுத்தி படிக்கச் செய்ததால்தான் என்னால் அந்த ஆங்கிலச் செய்யுளை அப்போதே மனப்பாடமாக எழுத முடிந்தது. இந்த ஒரு தருணத்திற்காகவாவது அவருக்கு நன்றி சொல்லக்கூடிய சம்பவம் அடுத்த நாள் நிகழ்ந்தது.
அமலதாஸின் இரண்டாம் நாள்.
மிக ஞாபகமாக அவர் எல்லோரையுமே அந்த ஆங்கிலச் செய்யுளை எழுதச் சொல்ல, மற்றவர்கள் விரை வீக்கத்திற்காக லாட்ஜ் வைத்தியரைச் சந்திக்கச் சென்றவர்கள் போல தயங்கிக் கொண்டிருக்கும் போது நான் இரண்டே நிமிடத்தில் கிடுகிடுவென்று எழுதி விட்டு கெத்தாக நிமி்ர்ந்தேன். அரையும குறையுமாக எழுதப்பட்டிருந்த ஒவ்வொருவரின் நோட்டுப் புத்தகமாக பார்த்துக் கொண்டு திட்டிக் கொண்டு வந்தவர், என் நோட்டைப் பார்த்து விட்டு திகைத்தார். சந்தேகம் கண்ணில் மின்னிற்று. முந்தைய ஆண்டுகளில், கணித வகுப்புகளில் தொடர்ந்து அடிவாங்குவதின் மூலம் 'நான் ஒரு மக்கு' என்கிற எண்ணம் அவருக்குள் உறைந்திருக்க வேண்டும். 'இவன் எப்படி இதை எழுதியிருக்க முடியும்? என்கிற கேள்வி பள்ளிக்கட்டிடம் அளவிற்கு உயரமாக அவருக்குள் நின்றிருக்க வேண்டும். எனவே நான் புத்தகத்தைப் பார்த்துத்தான் காப்பியடித்திருக்க வேண்டும் என்று முடிவே செய்து விட்டார். மற்றவர்களைப் போல் நானும் தப்புதவறுமாக எழுதியிருந்தால் கூட தப்பித்திருப்பேன். நிமிர்வதற்குள் கன்னத்தில் ஓங்கி விழுந்த அறையில் பொறி கலங்கியது."போய் போர்டுல இதை அப்படியே எழுதுடா பார்க்கலாம்".
பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு போர்டு அருகே சென்றேன். மொத்த வகுப்புமே என்னை அவநம்பிக்கையாய்ப் பார்த்தது. சாக்பீஸூம் கரும்பலகையும் விநோத சப்தத்துடன் மோதிக் கொள்ளும் அபூர்வமான அனுபவத்துடன் கடகடவென்று எழுதி முடித்தேன். வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த முழு வகுப்பும் அந்த திகைப்பு அடங்குவதற்குள், இதற்கு ஆசிரியரின் எதிர்வினை என்ன, என்று அடுத்த பரபரப்பிற்கு தயாராகி அவரைப் பார்க்க ஆரம்பித்தது. இதை அமல்தாஸ் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. 'சரி' என்றாற் போல் ஏதோ முனகி விட்டு வெளியே சென்றார்.
செய்யாத தப்பிற்கு தண்டனை பெற்ற கழிவிரக்கத்தில் அப்போது அழுதேன் பாருங்கள் ஒர் அழுகை! கண்ணாம்பாவெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். என் ஜியாமெண்ட்டரி பாக்ஸை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஒன்பதாம் வகுப்பிலிருந்தே நான் பேசாமல் இருந்த சேகர் கூட வந்து 'இட்ஸ் ஓக்கேடா மச்சான். விடு' என்று அமைதிப்படுத்தும் படி ஆயிற்று.
ஆக...
சரி சரி. உங்களுக்கு புரிந்து விட்டிருக்கும்.
()
இப்போது 'The Wrong Man' (1956) -க்கு வருவோம். அப்பாவியொருவன் குற்றவாளியாக தவறாக அடையாளங் காட்டப்படுதலின் மூலம் அவனும் குடும்பமும் அல்லலுறும் கதை. உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
கிளப் ஒன்றில் செலோ இசைக்கலைஞனாக பணிபுரியும் Manny Balestrero தன் மனைவியுடனும் எப்போதும் ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டிருக்கும் இரண்டு மகன்களுடனும் பணப்பற்றாக்குறையிடையிலும் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறான். மனைவியின் வைத்தியச் செலவிற்காக இன்ஸூரன்ஸ் பாலிசியின் மீது கடன் வாங்கச் செல்லும் போது பிடிக்கிறது ஏழு மற்றும் அரைச் சனி.
ஹிட்ச்காக்கின் திரைக்கதை சாகசம் இதிலும் வெளிப்படுகிறது. படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை எங்குமே தடம் மாறுவதில்லை. நூல் பிடித்தாற் போல் செல்கிறது.
இந்த மாதிரியான சஸ்பென்ஸ் படங்கள் தமிழில் ஏன் சாத்தியப்படுவதில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. அறிந்தோ அறியாமலோ வணிக ரீதியாக வெற்றிகரமான தமிழ்ப்படங்களுக்கென ஒரு வடிவமைப்பு உருவாகி விட்டிருக்கிறது. அது எப்படிப்பட்ட கதையென்றாலும் இரண்டு மூன்று சண்டைக்காட்சிகளும், கவர்ச்சி நடனங்களும், ஒரு சோகப்பாட்டும், திணிக்கப்பட்ட ரொமான்ஸூம் சென்டிமென்ட்டும் இருக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியிருக்கிறது. எனவேதான் மார்பில் குண்டடி பட்ட நாயகன் உடனே ஆஸ்பத்திரிக்கு போய்த் தொலையாமல், அரைமணி நேரம் வசனம் பேசி பிறகு செத்துத் தொலைக்கிறான். நாயகனின் எல்லா கல்யாண குணங்களும் கொண்ட யோக்கியனை அவனுடைய காமாந்தகார நண்பன் வலுக்கட்டாயமாக கிளப் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறான். அப்போதுதானே ஒரு கவர்ச்சி நடனத்தை நுழைக்க முடியும்?
இப்படியாக திரைக்கதையை அவரவர்களின் அபிலாஷைகளின் படி கொத்து பரோட்டா போட்டால் எப்படி அது ஒரு நல்ல திரைப்படமாக உருவாகும்? தமிழில் நான் கவனித்தவரை அதனளவில் சிறப்பாக உருவாக்கப்பட்ட சஸ்பென்ஸ் திரைப்படங்களாக எஸ்.பாலச்சந்தரின் 'பொம்மை' யையும் கே.பாலச்சந்தரின் 'எதிரொலி'யையும் குறிப்பிட முடியும்.
காவல்துறையின் விசாரணையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி மனிதராக HENRY FONDA மிக அற்புதமாக நடித்துள்ளார்.
ஹிட்ச்காக்கின் சிறுவயதில் அவருடைய தந்தை, இவரின் குறும்புத்தனங்களுக்கு தண்டனை தரும் பொருட்டு அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சில நிமிடங்கள் லாக்கப்பில் அடைத்து வைக்குமாறு வேண்டிக் கொள்வாராம். சிறுவயதிலேயே காவல்துறையினர் மீது ஆழப்பதிந்த இந்த விநோதமான பயவுணர்வு இந்தப் படத்தின் பல காட்சிகளில் தன்னிச்சையாக வெளிப்பட்டிருப்பதாக ஹிட்ச்காக் ஓர் நேர்காணலில் கூறுகிறார்.
ஹிட்ச்காக் தனது படங்களில் சில விநாடிகளில் ஏதாவது ஒரு அடையாளமில்லா பாத்திரமாக தோன்றி மறையும் CAMEO APPEARANCE மிகப் பிரபலமானது. இதைக் கண்டுபிடிக்கவே சில திரைப்படங்களை மீண்டும் கூர்ந்து பார்த்திருக்கிறேன். இதில் அவ்வாறான சிரமங்கள் ஏதும் தராமல் இயக்குநரே படத்தின் ஆரம்பத்தில் நிழலுருவமாக தோன்றி படத்தின் போக்கைப் பற்றி சுருக்கமாக விவரிக்கிறார்.
ஹிட்ச்காக்கின் ரசிகர்கள் மாத்திரமல்லாது அனைவருமே கட்டாயமாக பார்க்க வேண்டிய படமாக பரிந்துரைக்கிறேன்.
தொடர்புள்ள பதிவு:
ஹிட்ச்காக்கின் அட்டகாசமானதொரு திரில்லர்
தீக்கோழி பண்ணையில் பணிபுரியும் கரீம், கோழியொன்று தப்பியோடின தவறின் காரணமாக பணிநீக்கம் செய்யப்படுகிறார். மகளின் காதுகேளா கருவியை பழுதுபார்க்க நகரத்திற்குச் செல்லும் அவரை தற்செயலான பணியை திணிப்பதின் மூலம் நகரம் தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது. நகரம் அவருக்கு பல அனுபவங்களைத் தருகிறது. சற்று பொருளீட்ட முயன்றாலும் தன்னுடைய ஆன்மா அமைதியின்றி தவிப்பதை அவ்வப்போது உணர்கிறார் கரீம். மறுபடியும் அவருடைய பழைய பணியை திரும்பப் பெற்றவுடன்தான் இயல்பான நிம்மதியைப் பெறுகிறார். மேலே குறிப்பிட்டபடியான பல நுட்பமான காட்சிகளின் மூலம் இத்திரைப்படம் ஓர் உன்னத அனுபவத்தைத் தருகிறது.
நகரப்பணிக்கு பழகிக் கொண்டிருந்தாலும் தப்பிச் சென்ற தீக்கோழி அவருடைய அல்லறும் ஆன்மாவை பல்வேறு சமயங்களில் மறைமுகமாக தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. எங்கோ இறக்கி வைக்க வேண்டிய ஒரு குளிர்பதனப் பெட்டிச் சுமையை வழிதவறுதல் காரணமாக வீட்டிற்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. திருடுவது அவரது நோக்கமில்லையென்றாலும் தானாக வந்த அந்த அதிர்ஷ்டத்தை அந்த எளிய கிராம மனம் உடனடியாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இரவெல்லாம் அதை விக்கித்துப் பார்ததபடி அமர்ந்திருக்கிறார் கரீம். நகரத்தில் எங்காவது அதை விற்றுக் காசாக்கிக் கொள்ளும் முடிவுடன் புறப்படுகிறார். தானாகவே முன்வந்து விசாரிக்கிற காசு தருகிற வியாபாரியை புறக்கணித்து (இப்படித்தானே நம் மனம் இயங்கும்) வேண்டாமென்று துரத்துகிறவனிடம் கெஞ்சுகிறார். இப்படியாக அலைகிற போது வழியில் தென்படுகிற ஒரு காட்சி அவரை திகைத்து நிறுத்துகிறது. அது வண்டியில் ஏற்றப்பட்டிருக்கிற சில தீக்கோழிகள். அவை அவரின் பழைய நிம்மதியான வாழ்க்கையை நினைவுப்படுத்துகின்றன. அடுத்த காட்சியில் குளிர்பதனப் பெட்டியை அதற்குரிய இடத்தில் கரீம் சேர்த்துவிடுகிற காட்சி காட்டப்படுகிறது.
கிராமம் என்றாலே அது வெள்ளந்தியான மனிதர்களின் இடம் போலவும் நகரம் என்றால் அது கொடூரமானது என்கிற கறுப்பு-வெள்ளைச் சித்திரம்தான் பொதுவாக முன்வைக்கப்படும். பெரும்பாலும் கிராமத்திலிருந்து புலம்பெயர்கிற மனிதர்களுடனும்தான் நகரம் இயங்குகிறது என்கிற உண்மையை கிராமத்திலிருந்து வந்தவர்கள் செளகரியமாக மறந்துவிடுவார்கள். தவறுதலாக அதிக பணத்தை தந்து விட்டு விரைகிற செல்வந்தரை கிராமத்தனான கரீம் திருப்பித் தர துரத்துகிற அதே நகரத்தில்தான், அதிக பணத்தை பாக்கிச் சில்லறையாக தந்து விடும் கரீமிடம் அதை துரத்தி வந்து திரும்பத் தரும் நகரவாசியும் சித்தரிக்கப்படுகிறார்.
திரைமொழியை எத்தனை நுட்பத்துடன் உபயோகிக்க வேண்டும் என்பதை பல காட்சிகளில் சூசகமாக உணர்த்துகிறார் மஜித் மஜிதி. விபத்தொன்றில் சிக்கி நகரப் பணியின் வருவாயையும் இழந்து படுத்துக்கிடக்கும் கரீம், தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனக்குப்பதிலாக பணிபுரிவதை கையாலகாததனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். உடம்பு ஒரளவிற்கு குணமான ஒரு தனிமையில் கீச்கீச்சென்று கத்திக் கொண்டிருக்கிற குருவியின் சப்தம் அவரது கவனத்தை ஈர்க்கிறது. எப்படியோ அறைக்குள் மாட்டிக் கொண்ட அந்தக் குருவி தப்பிக்கும் நோக்கத்துடன் கண்ணாடிச் சன்னலில் முட்டி முட்டி கீழே விழுகிறது. மெல்ல தவழ்ந்து சென்று சன்னலை திறந்து குருவியை விடுவிக்கிறார் கரீம். அதே சமயத்தில் அவரது பழைய பணி திரும்பக் கிடைக்கும் நல்ல செய்தியும் கிடைக்கிறது. குருவியைப் போல தத்தளித்துக் கொண்டிருந்த அவர் அதிலிருந்து விடுவிக்கப்படுகிற சூழலை மிகப் பொருத்தமாக உபயோகித்திருக்கிறார் இயக்குநர்.
காது கேளா மகளுடான தகப்பனின் பரஸ்பர அன்பும், தங்க மீன்கள் வளர்ப்பதன் மூலம் செல்வந்தனாகி விடலாம் என்ற கனவுடன் அலையும் அவரது மகனும், எப்பவும் அவனை கொலைவெறியுடன் துரத்தியடிக்கும் கரீமும், வளர்ந்த பிள்ளைகளிடமிருந்து விலகி மனைவியை நேசத்தை தனிமையில் அடைய விழைகிற கரீமின் குழைவும் அதற்கான மனைவியின் வெட்கமும், சிறுவர்களின் தங்கமீன் கனவு நிராசையில் முடிகிற அநீதியும் அதிலிருந்து துளிர்க்கிற நம்பிக்கையும் என பல நுட்பமான காட்சிகள் நம்மை நெகிழ்ச்சியடையவும் பரவசமடையவும் செய்கின்றன. சிறுவர்களின் உலகை இயல்பாக காட்சிப்படுத்துகிற விதத்தில் மஜித் மஜிதியின் தனித்துவம் இதிலும் வெற்றி பெறுகிறது.
கரீமாக நடித்த Reza Naji-ஐ தோற்றப் பொலிவில்லாததின் காரணமாகவே நம்மூர்களில் துணைநடிகராக கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாடக நடிகரான இவர் 'சில்ரன் ஆ·ப் ஹெவனின்' மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றார். இரானின் நிலப்பரப்பை கூடுதல் அழகியல் கவனத்துடன் படமாக்கும் மஜித் மஜிதி இதிலும் அவ்வாறே இயங்கியுள்ளார். நகரத்தின் காட்சிகளும் அதற்கேயுரிய பரபரப்புடன் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. என்றாலும் பெரும்பாலும் மிக யதார்த்தமாக இயங்கும் ஒளிப்பதிவு, பருந்துப் பார்வையுடன் கூடிய இரண்டு ஏரியல் ஷாட் காட்சிகளில் பிரம்மாண்டமாயும் செயற்கையாயும் நம்மை உணரச் செய்து அந்நியமாய் விலகி நிற்பதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
மற்ற எந்த நாட்டுத் திரைப்படங்களையும் விட இரான் திரைப்படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாய் இருப்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன். The Song of Sparrows-ம் அதிலொன்று.
அப்படியாக நான் சமீபத்தில் பார்த்த எந்தவிதமான தருக்கப் பிழைகளும் இல்லாத திரைப்படம் என்று நான் கருதும் ஒன்றைப் பற்றி இங்கே பகிர உத்தேசம். TULPAN (2008).கஜகஸ்தான்நாட்டுத் திரைப்படம்.
பாலைவனப் புயல் அவ்வப்போது வீசிக் கொண்டிருக்கும் மிக வறண்ட நிலப்பரப்பு. ஆட்களே அபூர்வமாக நடமாடும் உள்ளார்ந்த கிராமப்பகுதியில் ஆட்டு மந்தையை கூலிக்காக மேய்த்துப் பிழைக்கும் ஒரு குடும்பம். அந்த குடும்பத்தைச் சார்ந்து நிற்கும் ஒரு இளைஞன். திருமணமாகியிருந்தால்தான் அவனுக்கென்று தனியாக ஒர் ஆட்டு மந்தையை தரமுடியும் என்று உரிமையாளர் கூறிவிடுகிறார். அந்தக் கடுமையான நிலப்பரப்பின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒரே மணவயதுப் பெண் TULPAN. தான் முன்பு பணிபுரிந்து கொண்டிருந்த ராணுவ சாகசங்களை இளைஞன் கூறி அந்தக் குடும்பத்தை கவர முயன்றாலும், மிகப் பெரிய காதுகளையுடைய அவனை பெண்ணுக்கு பிடிக்காமல் போகிறது.
அந்த மந்தையின் ஆடுகள் பிரசவங்களின் போது மர்மமாக இறந்து போகின்றன. உரிமையாளர் கடிந்து கொள்வதால் மன உளைச்சலில் இருக்கும் குடும்பத்தலைவன், வீட்டின் கூடுதல் சுமையாக இருக்கும் தனது மச்சானை அவ்வப் போது கடிந்து கொள்கிறான். இருவருக்குமிடையில் ஏற்படும் மனக்கச்ப்பின் காரணமாக இளைஞனின் சகோதரியான குடும்பத்தலைவி வருத்தமடைகிறாள். ஒரு உச்ச வாக்குவாதத்தில் இளைஞன் மனமுடைந்து நகரத்தை நோக்கி புறப்படுகிறான்.
()
தங்கள் வீட்டுப் பெண் மணமாகியிருக்கிற இடத்தில் தங்க நேர்வதைப் போன்ற சங்கடமான விஷயம் வேறு எதுவுமேயில்லை. கணவனைச் சார்ந்திருக்கிற பெண் தன்னுடைய சகோதரனின் சங்கடத்தைக் காணச் சகியாமலும் அதற்காக கணவனிடம் அதிகம் போராட முடியாமலிருக்கும் சூழலும் அதையும் விட கொடுமையானது. கடுமையான பணிக்குப் பிறகு திரும்பியிருக்கும் கணவனை ஆற்றுப்படுத்த மனைவி இயல்பாக உடல்உறவிற்கு ஆயுத்தமாவதும், அந்தச் சமயத்தில் இளைஞன் வீட்டிற்குள் நுழைவதால் இருவரும் விலகுவதும், கூட்டுக்குடித்தனத்தில் வசித்த ஒவ்வொருவரும் இந்தச் சங்கடமான அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.
இந்தப் படத்தின் மிகச்சிறப்பானதாக நான் கருதுவது, அந்த வறண்ட நிலப்பரப்பின் உஷ்ணமு்ம் குளிரும் புழுதியும் பார்வையாளன் நெருக்கமாக உணருமளவிற்கு சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது. ஆட்டுக்குட்டியொன்று பிரசவத்தில் இறந்து போவதும், பின்னர் ஒரு சூழ்நிலையில் இளைஞன் தன்னந்தனியாக ஒரு ஆட்டின் பிரசவத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் மிக சாவகாசமாக நேரடி ஒளிபரப்பு போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தன்னுடைய நீண்ட காதுகளின் காரணமாக திருமணமாகவில்லையே என்று அந்த இளைஞன் வருத்தமடைவதும் ஆனால் சற்றும் மனம் தளராமல் மணப்பெண்ணை எப்படியாவது கவர முயல்வதும் சுவாரசியமான காட்சிகள். நகரத்தில் செட்டிலாகி விடுவதையே தன்னுடைய வாழ்க்கை லட்சியமாக கொண்டிருக்கும் இளைஞனின் நண்பன், பெரிய மார்புகள் கொண்ட நடிகைகளின் படங்களின் துணையுடன் அதற்கான கனவில் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். நகரத்தின் கவாச்சி தரும் பிரமிப்பை எப்படியாவது சுகிக்க வேண்டும் என்று கனவு காணும் பெரும்பாலான கிராமத்து இளைஞர்களை அவனது பாத்திரம் எதிரொலிக்கிறது.ஒட்டகக் கடியினால் துன்புறும் மருத்துவரின் காட்சிகள் சொற்ப நேரமே என்றாலும் நகைச்சுவையாக இருக்கிறது.
இறுதிக் காட்சி மிக நெகிழ்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எத்தனை பெரிதான மனக்கசப்புகளையும் குடும்பம் என்கிற நிறுவனமும் உறவுகள் எனும் கட்டமைப்பும் போக்கிவிடுகிறது என்பதை இத்திரைப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது.
இதில் வரும் குழந்தைகள் அதிகப்பிரசங்கத்தனமாக இல்லாமல் அவர்களுக்கேயுரிய பிரத்யேக அப்பாவித்தனங்களுடன் சித்தரிக்கப் பட்டுள்ளார்கள். 'பசங்க' திரைப்படத்தின ஒரு குறிப்பிடத்தக்க காட்சி (மாத்திரம்) நினைவுக்கு வருகிறது. அந்த வீட்டுச் சிறுவன் ஏதோ பேசிக் கொண்டிருக்க, மிக குறைந்த வயதுடைய அவனின் தம்பி, சிறுவனின் தலையில் அட்டை ஒன்றினால் விளையாட்டாக அடித்துக் கொண்டேயிருப்பான். செயற்கைத்தனமாக இயங்காமல் காட்சியை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு செல்ல இந்த மாதிரியான உத்திகளை இயக்குநர் கையாள்வது நல்லது. இத்திரைப்படத்தில் அது போல் பல காட்சிகளை உணர்ந்தேன். படத்தின் துவக்கத்திலேயே நிகழும் அந்த நீளமான காட்சியமைப்பின் மூலம் ஒளிப்பதிவாளரை நாம் சிலாகிக்கலாம்.
குடும்பத்தலைவியின் பாத்திரத்தை தவிர மற்ற அனைவருமே முன்அனுபவம் இல்லாத நடிகர்கள் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது. 2009 அகாதமி விருதுக்காக அந்த நாட்டின் சார்பாக தேர்வு செய்யப்பட்ட இத்திரைப்படத்தை மிக அழுத்தமாக பரிந்துரைக்கிறேன்.
மரணத்தை மிக மிக அருகில் தவிர்த்த ஒரு போர்க்குற்றவாளி Kameda. அது தரும் அனுபவத்தால் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் கருணையுள்ளம் கொண்டவனாகவும் வலிப்பு நோயுள்ளவனாயும் மாறுகிறான். இதன் காரணமாகவே மற்றவர்களால் 'முட்டாளாக'பார்க்கப்படுகிறான். ஊருக்குத் திரும்பும் அவனுடைய வாழ்க்கையில் இரண்டு பெண்கள் குறுக்கிடுகிறார்கள். Ayako என்கிற உறவுக்காரப் பெண். செல்வந்தரின் வைப்பாட்டியான Taeko Nasu.
இடியட்டான Kameda, Taeko Nasu-வை புகைப்படத்தில் பார்த்த முதல் கணத்திலிருந்தே அவளால் ஈர்க்கப்படுகிறான். இவனுடன் வண்டியில் பயணிக்கும் முரடனான Akama அவள் அழகை ரசிக்கும் போது, Kameda அவளுடைய கண்கள் கருணையைக் கோருவதாக உணர்கிறான். தன் முன்னாலேயே கொல்லப்பட்ட ஒர் இளைஞனின் கண்களை அவளுடைய கண்கள் நினைவுப்படுத்தியதாக பின்னால் விவரிக்கிறான். Taeko Nasuவும் இவனுடைய அப்பாவித்தனத்தினால் ஈர்க்கப்படுகிறாள். இதற்காகவே தன்னை மணந்து கொள்ளவிருக்கும் பணத்தாசை பிடித்த Kayamaவை புறக்கணிக்கிறாள். என்றாலும் திடீரென்று தீர்மானித்தவளாய், தன்னால் இந்த அப்பாவி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முரடன் Akamaவை மணந்து கொள்ளத் தீர்மானிக்கிறாள்.
இப்படியாக இந்த முக்கோணக் காதல் பயணம் செய்யும் பாதைகளும் அதனுடனான உணர்ச்சிப் போராட்டங்களும் அகிராவின் பிரத்யேக திரை மொழியில் விவரிக்கப்படுகிறது.
இடியட்டின் பாத்திரத்தை விட வைப்பாட்டியான Taeko Nasuவின் பாத்திரம் மிக அழுத்தமாக பதிவாகியுள்ளதாக நான் உணர்கிறேன். இவள் முரடனுடன் மறைந்துவிடுவதால் அவளைத் தேடித்திரியும் Kameda மெல்ல Ayakoவால் ஈர்க்கப்படுகிறான். என்றாலும் இவர்களின் இடையில் மீண்டும் நுழையும் Taeko Nasu, "அவன் உன்னை விடவும் என்னைத்தான் விரும்புகிறான். வேண்டுமென்றால் சோதித்துப் பார்" என்று சவால் விடுகிறாள். இருவரின் இடையே Kameda தடுமாறினாலும் Taeko Nasu மீதுள்ள ஈர்ப்பை அவனால் இழக்க முடியவில்லை.
முரடன் Akama வாக நடித்த தோஷிரோ மிபுனேவின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. 'செவன் சாமுராய்' உட்பட அகிரா தன்னுடைய பல படங்களில் இவரை உபயோகப்படுத்தியுள்ளார்.
()
ருஷ்யாவின் பனிப்படர்ந்த பின்னணியில் நிகழும் இந்த நாவலின் களத்தை அதே பின்புலத்தோடு ஜப்பானில் நிகழ்வதாக உருவாக்கியுள்ளார் அகிரா. இந்த வேறுபாடும் இருநாட்டு கலாசார முரண்களும் படத்தோடு ஒன்றிப் போக முடியாமல் செய்துவிடுகின்றன. மேலும் தஸ்தாயெவ்ஸ்கி மீதுள்ள மதிப்பால் நாவலை அப்படியே திரைமொழிக்கு அகிரா மாற்றம் செய்துள்ளதை விமர்சகர்கள் ஒரு குறையாக முன்வைக்கிறார்கள். நாவலின் அடிச்சரடை மாத்திரம் எடுத்துக் கொண்டு தன்னுடைய பாணியில் அதை உருவாக்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
அகிரா இந்தப் படத்தை நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடுவதாக உருவாக்கினார். ஆனால் ஸ்டூடியோ முதலாளிகள் இத்தனை நீளத்தை விரும்பாததால் இருவருக்குள்ளாகவும் கருத்து மோதல் ஏற்பட்டு பின்னர் இரண்டரை மணிநேரமாக குறைக்கப்பட்டது. இதனால் படத்தின் சில ஆரம்ப பகுதிகள் எழுத்தின் மூலமாகவும் பின்னணி குரலின் மூலமாகவும் பொருந்தா அபத்தமாக நகர்த்தப்படுகிறது.
அகிராவின் காட்சிக்கோர்வைகளாலும் காமிராக் கோணங்களாலும் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ள அண்மைக் காட்சிகளாலும் குறிப்பாக முக்கோணக் காதல் கதையினாலும் தமிழ்த்திரை இயக்குநர் ஸ்ரீதர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நான் யூகிக்கிற அளவிற்கு இது ஸ்ரீதரின் சில திரைப்படங்களை நினைவூட்டியது. ஒளிப்பதிவாளர் Toshio Ubukata-ன் இருளும் ஒளியுமான கவிதைக் கணங்கள் பிரமிப்பேற்படுத்தியது ஒருபுறம் என்றால் Fumio Hayasaka -ன் பின்னணி இசை காட்சிகளின் தொனியோடு மிகப் பொருத்தமாக இயைந்தொலித்தது.
தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை வாசித்த பிறகாகவும் மீள்பார்வைகளின் மூலமாகவும் இந்த திரைப்படத்தை காட்சிகள் ரீதியாக இன்னும் அழுத்தமாக புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.
திரையிடலின் இறுதியில் நிகழ்ந்த கலந்துரையாடலில் கவிஞர் ராஜசுந்தர்ராஜன் முன்வைத்த சில விளக்கங்கள், திரைப்படத்தை சரியான கோணத்தில் உள்வாங்கிக் கொள்ள உதவியதோடு மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தை தனியாக காண்பதை விட ஒத்த ரசனையுள்ள நபர்கள் இணைந்து ஒரு குழுமமாக காண்பதிலுள்ள பயன்பாட்டையும் புரிந்து கொள்ள உதவியது.
திரையிடலை ஏற்பாடு செய்த 'உரையாடலுக்கும்' அதற்கு உதவிய 'கிழக்கு பதிப்பகத்திற்கும்' நன்றி.
ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலான சிறை வாழ்விலிருந்து 1990-ல் விடுவிக்கப்படும் மண்டேலா, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு 1994-ல் தென் ஆப்ரிக்காவின் அதிபராகிறார். அதுவரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களின் மனத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக ஏற்படும் பயத்தைப் போக்குவதும் வெள்ளை மற்றும் கறுப்பர் இனத்திவரிடையே நீண்ட காலமாக நிலவிக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பகையையும் நிறவெறியையும் போக்குவதே பிரதான பணி என்பதை உணர்கிறார்.
ரக்பி விளையாட்டு உலக கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் போது அதற்காக நடத்தப் பெறும் தகுதி ஆட்டங்களில் வெள்ளையர்கள் அவர்களது பாரம்பரிய அணியான Springboks-க்கு ஆதரவாக குரலெழுப்பும் போது கறுப்பர்கள் எதிரணிக்கு ஆதரவாக - அதாவது தங்களின் சொந்த நாட்டு அணிக்கு எதிராக - குரலெழுப்புகின்றனர். Springboks அணியில் ஒரே ஒரு கறுப்பர் இருந்தாலும் இத்தனை ஆண்டு காலமாக தங்களை ஆதிக்கம் செய்து கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களை அவர்கள் அத்தனை சீக்கிரம் மன்னிக்கத் தயாராக இல்லை.
இந்தப் பகைமை உணர்ச்சியை விளையாட்டுப் போட்டியை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் போக்க முடியும் என்று தீவிரமாக நம்புகிறார் மண்டேலா. நிற வேறுபாட்டை மறந்து 'தன்னுடைய தேசம்' என்று இரு பிரிவினரையுமே உணரச் செய்ய விரும்புகிறார். இதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளே பின்னர் நிகழும் காட்சிகளாக விரிகிறது.
()
இரண்டு கூறாக பிரிந்து கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்தும் ஒரு பொறுப்புள்ள தலைவனாக மண்டேலா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நெகிழ்வையும் பரவசத்தையும் ஏற்படுத்துகின்றது. 'வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது' என்கிற நோக்கில் காந்தி கொண்டு வந்த அகிம்சை போராட்டத்தை இந்தியர்களே கைவிட்ட நிலையில் மண்டேலா அதைச் செயல்படுத்தி வெற்றி பெறும் போது நமக்கு பெருமையாக இருக்கிறது.
புதிதாக பொறுப்பேற்றுக் கொள்ளும் விளையாட்டு ஆணையக்குழுவிலுள்ள பெரும்பாலான கறுப்பர்கள், Springboks அணியின் நிறம் கொடி போன்றவற்றை மாற்ற தீர்மானம் கொண்டுவருகின்றனர். மண்டேலா இதை விரும்புவதில்லை. இது மேலும் பகைமை உணர்ச்சியையே வளர்க்கும் என்று கருதுகிறார். தடுக்க வேண்டும் என விரைகிற தருணத்தில் அவரைத் தடுக்கும் அரசாங்க காரியதரிசி, “இது பெரும்பான்மையான மக்கள் விரும்புவது, இதற்கு எதிராக நீங்கள செயல்படுவது உஙகள் பதவிக்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் ஆபத்தானது” என எச்சரிக்கிறார். “மக்கள் தவறு செய்கிறார்கள். இந்தச் சமயத்தில் அதை எதிர்க்கும் துணிவில்லையென்றால் நான் தலைமைப் பொறுப்பில் இருக்கவே லாயக்கற்றவன்”என்கிறார் மண்டேலா.
இந்த மாதிரி நபர்களை இனி நாம் மியூசியத்தில் மாத்திரமே காண முடியும். பின்னர் அவர் விளையாட்டு ஆணையக்குழுவிடம் ஆற்றும் சிறிய அழுத்தமான உரை பரவசத்தை ஏற்படுத்தக்கூடியது. இவ்வாறான பல நுட்பமான காட்சிகள் படத்தை சுவாரசியமாக்குகின்றன.
()
Springboks அணியின் கேப்டனாக Matt Damon. அதிபர் தன்னை சந்திக்க விரும்புகிறார் என்பதை இவனால் நம்பவே முடியவில்லை. “இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக இந்த விளையாட்டில் ஜெயிக்க வேண்டியது அவசியம்” என்று மண்டேலா இவனை கேட்டுக் கொள்கிறார். சிறையிலிருந்த போது தம்மை ஊக்கப்படுத்தின ஆங்கிலக் கவி William Ernest Henley எழுதிய Invictus என்கிற கவிதையை அவனிடம் பகிர்ந்து கொள்கிறார்.
அணி கேப்டனின் தந்தை கறுப்பர்களை வெறுக்கும் வெள்ளையர்களின் ஒரு பிரதிநிதி. “இனி இந்த தேசத்தில் நமக்கு இடமிருக்காது” என்கிறார்.
உண்மையில் திரைப்படமே இம்மாதிரியானதொரு காட்சியுடன்தான் துவங்குகிறது. மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வாகனத்தில் வரும் போது கறுபபினச் சிறுவர்கள உற்சாகக் குரலெழுப்புகிறார்கள். எதிர் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் வெள்ளையச் சிறுவர்களில் ஒருவன் கேட்கிறான். “யார் சார் அது?. அந்தத் தீவிரவாதி மண்டேலாவை விட்டு விட்டார்களா?”அவர்களின் கோச் சொல்கிறார். “ஆமாம் பசங்களா! இனி இந்த தேசம் அந்த நாய்களின் கையில்தான் போகப் போகிறது”.
கறுப்பினத்தவர்களின் பிரதேசத்தை முதல் முறையாக பார்க்க நேரும் விளையாட்டுக் குழுவிலுள்ள ஒரு வெள்ளையர் சொல்கிறார். "நல்ல வேளை, நான் இங்கு வாழ நேரவில்லை"
இதற்கும் மேலான சுவாரசியமான காட்சிகள், மண்டேலாவின் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்டது. அதிபரின் பாதுகாப்பை பொறுப்பை கறுப்பின அதிகாரிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் ஆட்கள் தேவை என்று அவர்கள் அரசிடம் விண்ணப்பிக்கும் போது மண்டேலா வெள்ளையர்களை அனுப்புகிறார். இரு குழுக்களுக்குமான நுட்பமான விரோதமும் பின்பான சிநேகமும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
()
மண்டேலாவும் பார்வையாளர்களும் எதிர்பார்ப்பது போலவே அந்த விளையாட்டுப் போட்டியின் வெற்றியை கறுப்பர்களும் வெள்ளையர்களும் இணைந்து கொண்டாடுவதுடன் படம் நிறைகிறது. ஆனால் யதார்த்ததில் இந்த பகைமை உணர்ச்சி தேய இன்னும் பல ஆண்டுகளாகலாம்.
மண்டேலாவின் உறவினர்கள் உட்பட அனைவரும் வெள்ளையர்கள் தங்களுக்கிழைத்த கொடுமைகளை அவருக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கின்றனர். "எல்லாவற்றையும் மன்னிக்க வேண்டிய தருணமிது. இனி நம் சிந்தனை இந்த தேசத்தைப் பற்றினதாக இருக்க வேண்டும்" என்கிறார் மண்டேலா. பழிவாங்குகிற நோக்கில் கறுப்பர்கள் வெள்ளையர்களிடம் வன்முறையைக் காட்டினால், இருவர்களும் நிற்கும் இடம்தான் மாறியிருக்குமே ஒழிய, வன்முறையும் பகைமையும் அப்படியேதானிருக்கும் என்பதாகத்தான் அவர் சிந்தனை இயங்குகிறது.
எங்காவது யாராவது தியாகம் செய்து இதை நிறுத்தித்தான் ஆக வேண்டும்.
படத்தின் சில காட்சிகள் நாடகத்தனமாக இருந்தாலும், இவ்வாறான நீதிபோதனைக் கதைகள், நமக்கு தொடர்ந்து தேவைப்படுமளவிற்கு நம்மிடம் வன்முறையுணர்வும் பகைமையுணர்ச்சியும் ஆழமாகப் பதிந்துள்ளது. கிளின்ட் ஈஸ்ட்வுட் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு காலத்தில் துப்பாக்கியால் சுட்டு புகையை ஸ்டைலாக ஊதிக் கொண்டிருந்த ஆக்ஷன் நடிகர், இப்படியொரு மென்மையான இயக்குநராக உருமாறியிருப்பது ஆச்சரியமாகத்தானிருக்கிறது.
பிரான்சின் ஒரு கிராமத்தில் தம்முடைய குடும்ப உறுப்பினர்களை நாஜிப்படையினர் படுகொலை செய்து விடுவதால் ஷோசன்னா அங்கிருந்து பாரிஸ் நகரத்திற்கு தப்பி பெயரை மாற்றிக் கொண்டு உறவினரின் திரையரங்கை நிர்வகிக்கின்றார்.
இத்தாலியில் உள்ள பிராட்பிட் தலைமையிலான அமெரிக்க-யூத கொரில்லா படைக்குழு ஒன்று 'இயன்ற அளவிற்கு நாஜிப்படையினரை கொல்வது' என்ற நோக்கத்துடன் இயங்கிவருகிறது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள்தான் 'Basterds' என்று அறியப்படுகின்றார்கள்.
போரில் பலரைக் கொன்ற காரணத்திற்காக 'கதாநாயகனாக' புகழ்பெற்றுள்ள Frederick Zoller என்கிற நாஜிப்படை வீரன் கிராமத்திலிருந்து தப்பிவந்த யூத நங்கையான ஷோசன்னாவால் கவரப்படுகிறான். அவன் செய்த வீர சாகசங்களை அடிப்படையாக வைத்து 'தேசத்தின் பெருமை' என்ற திரைப்படத்தை கோயபல்ஸ் உருவாக்குகிறார். வேறொரு அரங்கில் திரையிடப்படுவதாக இருந்த அந்தத் திரைப்படத்தை ஷோசன்னா மீதுள்ள காதலால் தம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அவளுடைய அரங்கில் திரையிடப்படுவதற்கு ஏற்பாடு செய்கிறான். நாஜிப் படையினரின் உயர்மட்ட தலைவர்கள் பலர் அந்தத் திரைப்பட வெளியீட்டிற்கு வருவதான தகவல் தெரிந்ததும் ஷோசன்னா நாஜிகளை பழிவாங்க இதுவே சிறந்த தருணம் என்பதை உணர்கிறார். படம் ஓடிக் கொண்டிருக்கும் போது திரையரங்கை மொத்தமாக எரித்துவிடுவது என்பது அவளது திட்டம்.
இன்னொரு பக்கம் இன்னுமொரு குழு இதே திட்டத்துடன் இறங்குகிறது. திரைப்பட வெளியீட்டை அறிந்து கொள்ளும் இங்கிலாந்தின் உளவுத்துறை, திரையரங்கில் நாஜி அதிகாரிகளை கொல்ல தம்முடைய ஆட்களை அனுப்புகின்றனர். இரட்டை ஏஜெண்ட்டான ஜெர்மனிய நடிகையும் 'Basterds' குழுவினரும் அவர்களுக்கு உதவுவார்கள். கடைசி தருணத்தில் ஹிட்லரும் அந்தத் திரைப்பட வெளியீட்டிற்கு வருவதாக முடிவு செய்யும் போது பரபரப்பு அதி உச்சத்தை எட்டுகிறது.
தனித்தனியாக திட்டமிடப்படும் இந்த சதித்திட்டங்கள், அவற்றிற்கான சம்பவ நிகழ்வுகள், அவற்றின் பின்னடைவுகள், எக்கச்சக்கமாக நிகழும் கிளைமாக்ஸ் ... என்று ஒவ்வொன்றிலும் டாரண்டினோவின் பிரத்யேக முத்திரை பதிந்துள்ளது. கூர்மையான வசனங்கள் டாரண்டினோவின் பிரத்யேக பலம். எந்த நேரத்திலும் துப்பாக்கி வெடிக்கலாம் என்கிற இறுக்கத்தை வன்முறையின் அழகியலோடு இணைத்து உருவாக்குவதில் திறமையானவர் என்பதை அந்தக் மதுக்கூட காட்சிக் கோர்வைகள் தெரிவிக்கின்றன. அதுவரை திகிலும் பரபரப்புமாக அமர்ந்திருக்கும் பார்வையாளன் காட்சியின் இறுதியில் பீர் குடித்த மூத்திரக்காரன் கழிவறையில் அடையும் ஆசுவாசத்தை அடைகிறான்.
படத்தின் துவக்கத்திலிருந்தே டாரண்டினோவின் வசீகரம் துவங்கி விடுகின்றது. தன்னுடைய வீட்டை நோக்கி வரும் நாஜிப் படையினரைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு அவர்களை எதிர்கொள்வதற்கான மனநிலையை வரவழைத்துக் கொள்கிறான் அந்தப் பண்ணையாளன். நாஜிப் படையின் அதிகாரி எதிரே அமர்ந்து தமது சாதுர்யமான உரையாடலினால் அவனாகவே 'யூதக்குடும்பத்தை ஒளித்து வைத்திருப்பதை' கண்ணீரோடு ஒப்புக் கொள்ள வைக்கும் காட்சிகள் அபாரம். Hans Landa என்கிற அந்த அதிகாரியாக நடித்திருக்கும் Christoph Waltz படம் முழுவதும் தம்முடைய திறமையான அலட்டிக் கொள்ளாத நடிப்பினால் பார்வையாளர்களை பிரமிக்கச் செய்கிறார். அதனால்தான் அகாதமி விருதின் Best Supporting Actor பிரிவில் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விருதை நிச்சயம் வெல்வார் என நம்புகிறேன்.
Frederick Zoller தாம் எதிரிகளைக் கொன்ற சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் வன்முறைக்காட்சிகளை அவனே ரசிக்க முடியாத போது ஹிட்லரும் கோயபல்ஸீம் விழுந்து விழுந்து குரூர சிரிப்புடன் ரசிக்கின்றனர். கோயபல்ஸ் கூட ஒரு தருணத்தில் கண்ணீர் விடுகிறார்.
அப்போது அவர்களை கொல்வதான திட்டங்கள் நிறைவேறாத சூழ்நிலையை நோக்கி காட்சிகள் பயணித்த போது நான் மிகுந்த பதட்டமடைந்தேன். ஹிட்லர் குழுவை டாரண்டினோ சாகடிக்காமல் விட்டிருந்தால் நான் அவரை மன்னித்திருக்கவே மாட்டேன். அந்தச் சமயத்தில் நானும் ஒரு யூதனாகவே மாறியிருந்தேன். ஷோசன்னாவின் ஏற்பாட்டின் படி ஒருபக்கம் திரையரங்கம் பற்றியெரிய ஆரம்பிக்க மறுபுறம் பிராட்பிட்டின் ஆட்கள் மீதமுள்ளவர்களை துப்பாக்கியால் துளைக்கும் போதுதான் என்னுள் அதுவரை உச்சத்திலிருந்த பதட்டம் தணிய ஆரம்பித்தது. ஆனால் அப்போதைய என் மனநிலை ஹிட்லரின் குருரத்திற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல என்கிற அபத்த உணர்வு பிறகுதான் உறைத்தது.
டாரண்டினோ-வின் திரைப்படங்களில் எப்போது துப்பாக்கி வெடிக்கும் என எதிர்பார்க்கவே முடியாது என்று மேலே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதற்கு மிகச்சரியான உதாரண காட்சி இறுதியில் நிகழ்கிறது.
திரையரங்கை எரிப்பதற்கான இறுதி பரபரப்பில் ஷோசன்னா இயங்கிக் கொண்டிருக்கும் போது, தாம் சண்டையிட்டுக் கொன்ற காட்சிகளை தன்னாலேயே ரசிக்க முடியாத Frederick Zoller ஆறுதலுக்காக ஷோசன்னாவை தேடி ஆபரேட்டர் அறைக்கு வருகிறான். அவனை அங்கு எதிர்பார்க்காத ஷோசன்னா அதிர்ச்சியடைந்தாலும் தம்முடைய பதட்டத்தை நிதானமாக மறைத்துக் கொண்டு அன்பாக பேசி அவனை அப்புறப்படுத்த முயல்கிறாள். நடக்கவிருக்கும் கொலைச்சதியை அறிந்திராத அவன், ஏன் இவள் தன் காதலை வெளிப்படுத்தாமலே வெறுப்பேற்றுகிறாள்? என்று புரியாமல் சற்று முரட்டுத்தனமாக அறைக்குள் பாய்கிறான்.
தன்னுடைய இறுதிச் செயலை நிறைவேற்ற முடியாமல் குறுக்கே நிற்கும் அந்தக் காதலனை என்ன செய்வது என்று அவள் சற்றும் யோசிப்பதில்லை.
()
அநேர்க்கோட்டு திரைக்கதையமைப்பிற்காக சிலாகிக்கப்படும் டாரண்டினோ, இந்தத் திரைப்படத்தை நேர்க்கோட்டு முறையிலேயே தன்னுடைய வழக்கமான பாணியில் அத்தியாயம் அத்தியாயமாக பிரித்துச் சொல்கிறார். என்றாலும் அவர் அமைத்திருக்கும் அபாரமான திரைக்கதை காரணமாக பார்வையாளனுக்கு அது எவ்வித ஏமாற்றத்தையும் தரவில்லை. எனவேதான் இது சிறந்த படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் அகாதமி விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் உள்ளது. இதற்கான திரைக்கதையை 1998-லேயே அவர் எழுதியிருந்தாலும் இப்போதுதான் உருவாக்க முடிந்திருக்கிறது.
பிராட்பிட் எவ்வித கதாநாயக அதீதங்களும் அல்லாமல் ஒரு பாத்திரமாகவே வந்து போகிறார். அவரது ஒப்பனையும் உடல் மொழியும் மார்லன் பிராண்டோவை நினைவுப்படுத்துகிறது.
சிறந்த இயக்குநராக டாரண்டினோவும் சிறந்த துணைநடிகராக Christoph Waltz-ம் சிறந்த ஒரிஜினல் திரைக்கதை விருதையும் இத்திரைப்படம் பெறும் என எதிர்பார்க்கிறேன்.
இந்த வரிசையில் இரண்டாவது படம் THE BLIND SIDE.
செல்வராகவனின் ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் வகுப்பறையில் தூங்கி ஆசிரியரிடம் துடைப்பானால் அடிவாங்கி பின்பு கரும்பலகையில் தன்னுடைய ராமானுஜத் திறமையை நிரூபித்து விட்டு மறுபடியும் சென்று தனுஷ் தூங்குவார் அல்லவா? அந்தக் காட்சி உங்களிடம் அப்போது ஏற்படுத்திய உணர்வை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். இந்தப் படத்திலும் அதே மாதிரியான உணர்வுகளை நீங்கள் மீட்டெடுக்க நேரிடும். ‘உருப்படாத கேஸ்’ என்று சமூகம் புறக்கணிக்கும் மந்தமானவர்களையும் முறையான படி பட்டை தீட்டினால் வைரமாக்கி விட முடியும் என்கிற வழக்கமான கதை சென்டிமென்ட் காட்சிகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது.
Michael Oher, உயரத்திலும் அகலத்திலும் பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கும் ஓர் இளைஞன். மனதளவில் சிறுவன். பெரும்பாலான
அதே பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனின் தாய் அநாதையாக சுற்றித்திரியும் இவனைக் கண்டு பரிதாபப்பட்டு தற்காலிகமாக இருக்கட்டும் என்று தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். காலப்போக்கில் அந்தக் குடும்பத்தின் அன்புமிக்க ஒரு உறுப்பினனாக ஆகிப் போகிறான். இவனுக்குள் இருக்கும் விளையாட்டுத் திறமையைக் கண்டுபிடித்து அதில் அவனை அதில் உலகப் புகழ்பெற்றவனாக மாற்றுகிறாள் அவனுடைய வளர்ப்புத் தாய்.
Michael Oher என்பவரின் உண்மையான கால்பந்து விளையாட்டு வீரரின் வாழ்க்கையை குறிப்பிட்டு மைக்கேல் லூயிஸ் எழுதின The Blind Side: Evolution of a Game என்கிற நூலின் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. John Lee Hancock இத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
புதைந்திருக்கும் வைரமான Michael Oher-ஐ தத்தெடுத்து அவனை மீட்டெடுக்கும் தாயாக நடித்திருக்கும் Sandra Bullock-ன் அற்புதமான நடிப்பு இந்தத் திரைப்படத்தின் குறிப்பிட வேண்டிய அம்சமாகும். எனவேதான் அகாதமி 2010 விருதின் 'சிறந்தநடிகை' பிரிவில் இவரது பெயர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கிறது. 'ஒரு
Michael Oher-ஆக Quinton Aaron நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பு என்று சொல்ல இயலாவிட்டாலும் தம்முடைய பாத்திரத்திற்கு தேவையானதை போதுமான அளவிற்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்க கால்பந்து விளையாட்டின் விதிமுறைகளை புரிந்து கொண்டு செயல்படுவதில் Michael Oher தடுமாறும் போது "நம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தத் திசையிலிருந்து எப்படி ஆபத்து வந்தால் எப்படி எதிர்கொள்வாய் என்பதை நினைவில் கொண்டு ஆடு" என்று அவனுடைய அம்மா சொல்வதை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப விளையாட்டில் வெற்றி கொள்ளும் காட்சிகள் சுவாரசியமானவை. இந்தக் காட்சிக் கோர்வையின் ஆரம்பத்தில் அவன் எதிரே மோத வருபவனை விட்டுவிட்டு திடீரென்று வானத்தில் பறக்கும் காற்றாடியில் மனம் லயிப்பது அவனுள்ளிருக்கும் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தும் காட்சி.
வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்குமான தீராத பகைமையும் வெறுப்பும் மிக நுட்பமாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 'ஒரு கருப்பனையா தத்தெடுத்துக் கொள்ளப் போகிறாய்" என்று அந்த அம்மாவின் தோழிகள் கேட்கிறார்கள். அவர்களின் உரையாடலின் போது கறுப்பர்கள் வசிக்கும் பகுதிக்கே அவர்கள் சென்றதில்லை என்பதை உணர முடிகிறது. வறுமை காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு பாழாகும் சிறுவர்களை மீட்டெடுத்து முறையாக பராமரித்தால் Michael Oher போல அவர்களும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்பதையும் இந்தப்படம் அடிநாதமாக சுட்டிக் காட்டுகிறது.
நிஜமான Michael Oher-ன் புகைப்படங்கள் பட இறுதியில் காண்பிக்கப்படுகிறது.
இந்த மாதிரியான சென்டிமென்ட் படங்களை நாம் தமிழிலேயே அதிகம் பார்த்துவிட்டதால் எந்தவொரு பெரிதான ஆச்சரியத்தையோ பரவசத்தையோ இந்தப்படம் நமக்குத் தராது என்றுதான் நான் கருதுகிறேன். என்றாலும் காட்சிகளின் இடையில் வெளிப்படும் சில கவிதைக் கணங்களுக்காக இது 'சிறந்த திரைப்படத்திற்கான' பிரிவில் நாமினேஷன் ஆகியிருக்கலாம். முன்னரே சொன்னது போல் Sandra Bullock 'சிறந்த நடிகை' விருதைப் பெறக்கூடும். Golden Globe விருதை இதே தகுதிக்காக ஏற்கெனவே அவர் பெற்றிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது.
இதே போல The Hurt Locker-ம், போர்வீரர்களின் பிரச்சினைகளை உளவியல் ரீதியாக அணுகுகிறது. அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கில் நுழைந்த 2004-ல் படத்தின் நிகழ்வு துவங்குகிறது. சுற்றிலும் வெறுப்புடன் பார்க்கும் மக்களிடமும் ஆங்காங்கே குண்டுகளை ஒளித்து வைக்கும் தீவிரவாதிகளின் இடையில் எப்போதும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய சூழல்.
குண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் (Explosive Ordnance Disposal) ஒரு குழுவில் குண்டு வெடிக்கப்பட்டு தாம்சன் இறந்து விட அவரின் இடத்தில் பணிபுரிய வருகிறான் வில்லியம் ஜேம்ஸ் (Jeremy Renner). உயிர் குறித்த பயமோ நடுக்கமோ இல்லாமல் அவன் குண்டுகளை விளையாட்டுப் பொம்மை போல் கையாள்வது சக வீரர்களை வியப்புடனும் திகைப்புடனும் பார்க்க வைக்கிறது. மாத்திரமல்லாமல் அனைவரும் பதைபதைப்புடன் சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது இவன் குழுவிடனுனான உரையாடல் தொடர்பை துண்டித்துக் கொண்டு தனியாக செயல்படுவதும் அவர்களை எரிச்சல் கொள்ள வைக்கிறது. மற்றவர்களுக்கு வெடிகுண்டென்பது மரணத்திற்கான அழைப்பாக தெரியும் போது ஜேம்ஸ் அதை ஒரு விளையாட்டில் வெற்றி கொள்ளும் விருப்பத்தோடு அணுகுகிறான். தான் செயலிழக்கும் குண்டுகளின் பாகங்களையெல்லாம் அடையாளச் சின்னமாக வைத்துக் கொள்கிறான்.
Bravo என்கிற இந்தக்குழு பாக்தாத் நகரத்தில் ஒளிக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் பரபரப்பாகவும் டாக்குமெண்டரி பாணியில் அதிகபட்ச நம்பகத்தன்மையுடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையேயுள்ள பதட்டமான பகடைக்காய் விளையாட்டு போலவே இந்தக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தீவிரவாதிகள் கட்டிடததிலிருந்து திடீரென்று தாக்கும் தருணத்தில் வெட்ட வெளியில் நிற்கும் இவர்கள் ஒளிந்து கொள்ளக் கூடிய போதிய வசதியில்லாமல் இருக்கும் பாறைகளின் பின்னால் அமர்ந்து கொண்டு தீவிரவாதிகளை மிகுந்த சிரமத்திக்கிடையில் சுட்டு வீழ்த்துவதும் எல்லோரும் இறந்து விட்டார்களா எனத் தெரியாமல் மணிக்கணக்கில் அவர்களின் அசைவிற்காக தாகத்துடன் காத்திருக்கும் காட்சிகளும் போர்க்களத்தின் தீவிரத்தை உக்கிரமாக வெளிப்படுத்தக் கூடியவை. இந்தக் காட்சியையே தீவிரவாதிகளாக கருதப்படுகிறவர்களின் பார்வையில் இருந்து நோக்கினால் வேறொரு சித்திரம் வெளிப்படக்கூடும்.
படத்தின் இறுதிக்காட்சியொன்றில் தீவிரவாதிகளால் உடலெங்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டு எளிதில் அதை எடுக்க முடியாதபடி பூட்டுக்களால் இணைக்கப்பட்டிருக்கும் அப்பாவியான ஒரு பொதுஜனம் உயிருக்காக அமெரிக்க ராணுவத்தினரிடம் கதறுவதும் குண்டு வெடிக்கவிருக்கும் கடைசி விநாடிகள் வரை அவரை மீட்க வில்லியம் ஜேம்ஸ் போராடுவதும் இயலாத நிலையில் அவரிடம் மன்னிப்பு கேட்வதும் அற்புதமான காட்சிகள். தாம் நிச்சயமாக இறக்கப் போகிறோம் என்று தெரிந்த அந்த பொதுஜனம் அது வரை கூப்பாடு போட்டிருந்ததை நிறுத்தி கடைசி தருணத்தில் அமைதியான முகபாவத்துடன் இறைவனை வழிபடும் காட்சியை என்னால் மறக்கவேயியலாது.
முன்னர் குறிப்பிட்டது போல வீரர்களுக்கிடையே நிகழும் உளவியல் ரீதியான பிரச்சினையும் இதில் சிறப்பாக அணுகப்பட்டிருக்கிறது. குழுவிலுள்ள மற்றவர்கள் பதட்டத்தடன் செயல்படும் போது ஜேம்ஸ் அது குறித்தான சுவடே இல்லாமல் விளையாட்டுணர்வோடு இருப்பது இவர்களை வெறுப்பேற்றுகிறது. கைப்பற்றப்பட்ட குண்டுகளை யாருமில்லாத மணற்பகுதியில் வைத்து வெடிக்கும் ஒரு சூழ்நிலையில், ஜேம்ஸ் தன்னுடைய கையுறைகளை குண்டுகளிருக்கும் பகுதியில் மறந்து வைத்து விட்டதாக கூறி எடுத்து வர புறப்படுகிறான். அவன் அபாயப் பகுதியில் இருக்கும் போது சக வீரனான Sanborn, ‘இப்போது குண்டை வெடிக்க வைத்து விட்டு விபத்து நேர்ந்ததாக ரிப்போர்ட் எழுதி விடலாம்’. என்கிறான்.
அந்தக் கணத்தின் வெறுப்பில் அவன் அதை விளையாட்டாகக் கூறுகிறான் என்பதை யூகிக்க முடிந்தாலும் ஜேம்ஸ் மீது அவனுள் பதிந்திருக்கும் எரிச்சலுணர்வை வெளிப்படுத்தும் காட்சியாக எடுத்துக் கொள்ளலாம். முரட்டுத்தனமாக சித்தரிக்கப்படும் இவன் இறுதிக் காட்சியில் தொடர்ந்து மரணத்தை நெருக்கமாக பார்க்க நேரும் தொழிலை நினைத்து கதறி அழுகிறான். "இந்த ஒப்பந்தத்தோடு இதை தொடரப் போவதில்லை ஜேம்ஸ். எனக்கென்று ஒரு மகன் வேண்டும். அதற்காகவாவது நான் உயிரோடு இருக்க வேண்டும்".
இன்னொரு வீரனான Eldridge-ன் பகுதிகளும் சுவாரசியமானது. தாம்சனின் மரணத்தைக் கண்ட பதட்டவுணர்வோடு அலையும் இவனை கவுன்சலிங் செய்ய வரும் ஒருவரை "களத்தில் சண்டையிட்டால்தான் அது உனக்குப் புரியும்" என அலட்சியப்படுத்துகிறான். இவனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு களத்திற்கு வரும் அவர் வெடிகுண்டுப் பையின் மீது காலை வைத்து வெடித்துச் சிதற, Eldridge-ன் பதட்டமும் குற்றவுணர்வும் அதிகமாகிறது. இறுதிக்காட்சியில் காயமடையும் இவன் "நீ ஒரு வெறி பிடித்தவன்" என்று ஜேம்ஸை திட்டிவிட்டுச் செல்கிறான்.
ஒப்பந்த நாட்கள் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் ஜேம்ஸ், திரும்பவும் களத்திற்குச் செல்ல முடிவு செய்து அதற்கு முன் தன்னுடைய சிறிய மகனிடம் உரையாடும் காட்சி அற்புதமானது. "இந்த வயதில் அற்புதமாகத் தோன்றும் விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் நீ வளர்ந்தவுடன் அற்பமானதாகிவிடும். இன்னும் பெரியவனாகும் போது அப்படி அற்பமாகும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாகி அற்புதமாகத் தங்கும் விஷயங்கள் ஒன்றோ அல்லது இரண்டோதான் மீதமாகும். அப்படி எனக்கு அற்புதமாகத் தேங்கியிருக்கும் விஷயம் ஒன்றேயொன்றுதான்".
அவன் பாம் ஸ்குவாட் உடையுடன் நடக்கும் அடுத்த காட்சியில் அந்த அற்புதம் என்னவென்று நம்மால் உணர முடிகிறது. குண்டுகளை வெற்றிகரமான எடுப்பதில் உள்ள ஆர்வம் மாத்திரமல்ல அது. அதன் மூலம் பல அப்பாவி மக்களை காப்பாற்றும் வாய்ப்பும் அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியும்தான் அந்த அற்புதம் என்பதாக படம் நிறைகிறது.















No comments:
Post a Comment