Monday, 17 January 2011

பாதை மாற்றியப் பயணம்:

இரண்டு இளைஞர்கள் இளமையின் துள்ளலில் பயணம் துவங்குகிறார்கள். நாட்டைச் சுற்றி வரும் ஒரு உல்லாசப் பயணம். ஒரு பழைய மோட்டார் சைக்கிளில். 5000 மைல் தூரத்தை நாலரை மாதத்தில் கடப்பதாக திட்டம். பயணம் நோக்கம் உல்லாசம்,பொழுதுப்போக்கு மற்றும் முடிந்தமட்டும் தன் இளமைக்குத் 'தீனி'ப்போடுதல். இளமையின் கொண்டாட்டமும், வாழ்கையின் திட்டமிடலும், வருங்காலத்தில் என்னவாக வேண்டும் என்ற குறிக்கோளும் கொண்ட அந்த இளைஞர்களின் அந்த பயணம் அவர்களின் பிற்காலத்தை நிர்ணயித்தது. அது அவர்கள் திட்டமிடாதது.


இருவரில் ஒருவர் 'எர்னஸ்ட்டோ குவேரா'(Ernesto Guevara) என்ற பெயரைக்கொண்ட 23 வயது இளைஞர், மற்றொருவர் அவரின் நண்பர் 'ஆல்பர்ட்டோ கிரானடோ'(Alberto Granado). தென்னமெரிக்க நாடுகளைச் சுற்றிவருவது நோக்கம். 'பூனஸ் ஏர்ஸ்'-லிருந்து 'ஆண்டிஸ்','சிலி','அட்டகாமா பாலைவனம்','பெரு' வழியாக வெனிசுலாவை அடைவது பயணத்திட்டம். இருபத்தி ஒன்பது வயதைக்கடந்த 'ஆல்பர்ட்டோ' தன் முப்பதாவது வயது பிறந்தநாளை இந்த பயணத்தின் முடிவில் வெனிசுலாவில் கொண்டாடுவது என்பதும் வழியில் 'பெருவில்' 'குஸ்ட நோயாளிகளின் குடியிருப்பில்'(leper colony) பணி செய்வது என்பதும் அவரிகளின் இந்த பயணத்திற்கான காரணங்களில் ஒன்று. 'எர்னஸ்ட்டோ' விரைவில் தன் மருத்துவர் படிப்பை முடிக்க இருந்தார். 'ஆல்பர்ட்டோ' 'biochemist' படிப்பை முடித்தவர்.


பயணத்தின் துவக்கம் சந்தோசமானதாகவும், கொண்டாட்டமானதாகவும் இருக்கிறது. அவர்களின் மோட்டர் சைக்கிள் அவர்களைச் சுமக்கிறதா அல்லது அவர்கள் அதை சுமக்கிறார்களா என்பதைப்போன்ற பயணம் அது. வழிநெடுக்க மோட்டார் சைக்கிளோடு விழுந்து புரளுவதும், வழியில் தென்படும் குதிரைக்காரர்களோடு போட்டிப்போடுவதும் என குதுகுலமான இளமைப்பயணம் அது. கண்ணையும் மனதையும் கொள்ளைக்கொள்ளும் பல பிரதேசங்களிடையே பயணம் கொள்கிறார்கள்.


ஒரு நாள் பழுதாகும் தங்கள் வாகணத்தை சரிபார்க்க ஒரு உள்ளூர் பழுதுபார்ப்பவரிடம் செல்லுகிறார்கள். இரவு அவரின் மனைவிடம் நடன நிகழ்ச்சியின் போது தவராக நடக்க முயன்று மொத்த கூட்டமும் இவர்களை துரத்த, தப்பி ஓடிவருவதும், வழியில் 'பிரேக்'(Break) இல்லாது கட்டுப்பாட்டை இழந்த வாகணத்தோடு விழுந்ததினால் அந்த வாகணம் அதோடு உபயோகமற்றதாகிவிடுகிறது. இதன் பின் அவர்களின் பயணம் கால் நடையாகவும் அவ்வவ்வபோது கிடைக்கும் இளவச வாகண பயணத்தாலும் தொடர்கிறது.


இப்படி ஒரு நாள் எந்த வாகண உதவியும் கிடைக்காத நடைப்பயணத்தின் போது ஒரு தம்பதிரை சந்திக்கிறார்கள். திறந்த வெளியில் குளிரை விரட்ட நெருப்பு மூட்டிய அந்த இரவில் அந்த தம்பதியர்களின் சோக வாழ்வை அறிகிறார்கள். அந்த தம்பதியர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு, மகனை பிரிந்து வேலை தேடி அலைவதையும் அதற்கு காரணம் அவர்கள் கம்னியூஸ்டுகள் என்பதே என்பதை அறிகிறார்கள். பிறகு வழி நெடுக்க பல துயரம் கொண்ட மனிதர்களைச் சந்திக்கிறார்கள். இருப்பவன் இல்லாதவன் என்பதிற்கிடையே இருக்கும் வித்தியாசத்தை வாழ்வில் முதல் முறையாக உணர்கிறார்கள். அதுவரை உல்லாச பயணமாகிருந்தது முற்றிலுமாக மாறிவிடுகிறது.


பெருவில் 'மச்சு பிச்சு'( Machu Picchu) என்கிற 'Incan' இனத்தின் அழிக்கப்பட்ட ஒரு வரலாற்று பெருநகரத்தை காண்கிறார்கள். இங்கேதான் 'எர்னஸ்ட்டோ' ஒரு பெரும் மனமாற்றத்தை அடைகிறார். 'அல்பர்ட்டோ' அமைதிவழி போராட்ட முறையைப்பற்றி தன் எண்ணத்தை பகிர்ந்துக்கொள்ள, எர்னஸ்ட்டோ "துப்பாக்கி அற்ற புரட்சியா? அது வேலைக்காகாது" என்கிறார்.



பெருவில் 'அமெசான்' நதியோரத்தில் அமைந்த ஒரு 'குஸ்ட நோயாளிகளின் குடியிருப்பில்'(San Pablo leper) தன்னார்வத் தொண்டர்களாக பணிச்செய்ய செல்லுகிறார்கள். அங்கேப் போகும் படகுபயணத்தில் தனியே குஸ்ட்ட நோயாளிகளைக்கொண்ட ஒரு சிறிய படகு பெரும்படகின் பின்னால் கட்டப்பட்டிருப்பதை எர்னஸ்ட்டோ காண்கிறார். அந்த நிவாரண முகாம் 'அமெசான்' நதியால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கரையில் மருத்துவர்களும், மறுகரையில் நோயாளிகளும் என பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.


நோயாளிகள் இருக்கும் கரைக்குச்செல்லும் போது உடன் வரும் மருத்துவர் இவர்களை கையுறை அணியச்சொல்லுகிறார். குஸ்ட்ட நோய் பரவாதென்றால் தாங்கள் கையுறை அணியப்போவதில்லை என்கிறார் எர்னஸ்ட்டோ. இப்படி கையுறை அணியாமல் வந்து தங்களோடு கைகுலுக்கும் எர்னஸ்ட்டோவை அச்சிரியத்தோடும் அன்போடும் பார்க்கிறார்கள் அந்த நோயாளிகள். பின்பு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் அவர்களோடு உணவருந்துவதும் விளையாடுவதும் என அவர்களோடு மிக நெருங்கி பழகுகிறார்கள் இந்த இரண்டு நண்பர்களும்.



இந்நிலையில் எர்னஸ்ட்டோவிற்கு பிறந்த நாள் வருகிறது. அவருடைய 24வது பிறந்த நாளை மருத்துவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அந்த கொண்டாட்ட அறையிலிருந்து வெளியே வரும் எர்னஸ்ட்டோ மறுகரையில் இருக்கும் நோயாளிகளைப் பார்க்கிறார். அவரின் நெஞ்சில் பெரும் துயரம் ஏற்படுகிறது, தன் நண்பனிடம் தான் மறுகரைக்குச் செல்லப்போவதாகவும் அங்கேச் சென்று தன் பிறந்த நாளை அந்த நோயாளிகளோடு கொண்டாடப்போவதாகவும் அதற்கு படகு இருக்கிறதா என்று பார்க்கும்படியும் சொல்லுகிறார். படகு இல்லாததால் மறுநாள் காலை அங்கே சென்று கொண்டாடலாம் என நண்பர் சொல்லுகிறார். அதை மறுக்கும் எர்னஸ்ட்டோ தனக்கு இன்றுதான் பிறந்த நாள், அதனால் தான் இப்போதே அங்கே செல்லப்போவதாக சொல்லிவிட்டு, ஆற்றி இறங்கி மறுகரையை நோக்கி நீந்த துவங்கிவிடுகிறார்.


எர்னஸ்ட்டோவிற்கு சிறுவயதிலிருந்தே 'ஆஸ்துமா' வியாதி உண்டு. அதனால் ஏற்படும் பெரும் மூச்சிதினரலால் அவதிபட்டுவருபவர் அவர். மேலும் அந்த அமெசான் நதி முழுவதும் ஆளைக்கொல்லும் பல மிருகங்கள் உண்டு. அந்த நதியைத்தான் அந்த இரவில் நீந்தி கடக்க துவங்குகிறார். இங்கே கரையிலிருந்து நண்பரும் மற்ற மருத்துவர்களும் அவரை திரும்பி வந்துவிடும்படி குரல் எழுப்புகிறார்கள், அங்கே மறுகரையில் சத்தம் கேட்டு நோயாளிகள் கரையோரம் வந்து பார்க்கிறார்கள். தங்களை நோக்கி வரும் எர்னஸ்ட்டோவை முதலில் பதற்றத்தோடுப் பார்த்தாலும் பின்பு உற்சாகப்படுத்துகிறார்கள். ஒருபுறம் திரும்பி வந்துவிடும்படியான கூக்குரலும் மறுபுறம் உற்சாகக்குரலுக்கிடையே போராடி மறுகரையை அடைகிறார் எர்னஸ்ட்டோ. நோயாளிகள் பெருத்த ஆராவரத்தோடு எர்னஸ்ட்டோவை தூக்கி கொண்டாடினார்கள். அன்று இரவை அவர்களோடு கழிக்கிறார்.


பின்நாளில் 'சே' என அழைக்கப்பட்டவரும் இன்றுவரை உலகம் நினைவில் கொள்ளும் போராளியுமான 'எர்னஸ்ட்டோ சேகுவாராவின்' அந்த 24வது பிறந்த நாள் அவர் வாழ்வின் மிக முக்கியமானது. அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போதுதான் அவரின் முதல் அரசியல்பேச்சு நிகழ்ந்தது. அந்த பேச்சில் தன் அரசியல் நிலைபாட்டை வெளிப்படுத்தினார். நதியை கடந்ததின் மூலம் தன் செயலின் தீவரத்தை காட்டினார்.


மறுநாள் ஒரு சிறிய படகின் மூலமாக அவர்கள் அங்கே இருந்து புறப்படுகிறார்கள். அந்த நோயாளிகளைப் பிரியும் அந்த காட்சி 'சே' மற்றும் 'ஆல்பர்ட்டோ'வின் மனதில் மட்டுமல்ல நம் மனதிலும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. கைவிடப்பட்டவர்களின் துயரம் நம் கண்முன்னே வந்துபோகிறது.


பிறகு நண்பர்கள் பிரிகிறார்கள். ஆல்பர்ட்டோ வேலைக்கு போகிறார், தன்னுடன் வந்துவிடும் படி 'சே'வை அழைக்கிறார். மறுக்கும் 'சே', இந்தப் பயணம் தனக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவிட்டதாகவும், அதைப்பற்றி தான் நீண்ட நாட்கள் சிந்திக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார். நண்பர் வேலைக்காக தங்கிவிட இவர் விமானம் ஏறி ஊர் திரும்புகிறார்.


பிறகு அந்த நண்பர்கள் சந்திக்க எட்டு ஆண்டுகள் ஆயிற்று. இந்த பயணம் நிகழ்ந்தது 1952-இல். பின்பு 1960இல் ஆல்பர்ட்டோவிற்கு 'சே'விடமிருந்து கடிதம் வந்தது. கியூபாவில் வந்து வாழவும் வேலைச் செய்யும் படி. ஆல்பர்ட்டோ இன்றும் கியூமாவில் வசிக்கிறார். அங்கே அவர் 'Santiago School of Medicine'-ஐ நிறுவினார். 'சே' 1967-இல் பொலிவியாவில் சிஐஏ-வினால் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 39.


'The Motorcycle Diaries'(2004) என்கிற இந்தப்படம் 'சே'வால் எழுதப்பட்ட இதே பெயரைக்கொண்ட புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டது. மேலும் தகவல்களுக்கு 'ஆல்பர்ட்டோ' எழுதிய 'Back on the Road: A Journey Through Latin America' என்ற புத்தகமும் பயன்படுத்தப்பட்டது. இந்த படம் முழுக்க 'சே' தன் தாயிக்கு எழுதிய கடித்தின் வாசகங்களாக அவரின் குரல் வருகிறது.



இரு இளைஞர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகை அறிய முயன்ற கதை இது. இளமையின் அத்தனை சேட்டைகளோடு துவங்கிய அவர்களின் பயணம், கண்ட காட்சிகள் இருவரிடமும் வெவ்வேறு மாதிரியான எண்ணங்களை தோற்றுவிக்கிறது. ஒருவன் துன்பமான இந்த உலகில் தான் பிழைக்க வழிதேடிக்கொள்ள வேண்டும் என்றும் மற்றவன் அந்த துன்பமான சூழலை மாற்றுவதிற்கான போராட்டத்தை நோக்கியும் செல்லுகிறார்கள்.


இரண்டாம் உலகப்போருக்குப் பின் துவங்கிய பனிப்போரின் விளைவாக தென்னமெரிக்கா முழுவதும் வடஅமெரிக்காவின் அடக்குமுறை பரவியிருந்த காலம் அது. உலகமுழுவதும் பரவத் துவங்கிய 'பொதுயுடமை' சித்தாந்தத்தை தடுக்கும் பொருட்டு வடஅமெரிக்கா தன் அத்தனை பலத்தையும் பயன்படுத்தியது. சிஐஏ, பொருளாதார அடியாட்கள், குள்ளநரிகள், இராணுவம் என அத்தனை கேடுகெட்ட துறைகளும் கலத்தில் இறக்கிவிடப்பட்டன. தென்னமெரிக்கா முழுவதும் நிலையான, மக்களுக்கான அரசு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. மக்கள்தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டோ அல்லது படுகொலை செய்யப்பட்டோ வட அமெரிக்காவிற்கு ஏதுவான சர்வதிகாரிகள் பதிவியில் அமர்த்தப்பட்டனர்.




தென்னமெரிக்காவின் நிலங்கள் மற்றும் இயற்கை வளங்கள் எல்லாம் வட அமெரிக்காவின் பெறுநிறுவணங்களால் சூறையாடப்பட்டன. இதன் விளைவாக கண்டம் முழுவதும் வறுமை நிலவியது. நிலங்கள் பிடுக்கப்பட்ட மக்கள், துரத்தி துரத்தி கொல்லப்பட்ட கம்னியூஸ்டுகள், ஒட்டு மொத்தமாக கைவிடப்பட்டு, நீதி கிடைக்காத மக்கள் என அந்த கண்டமே இருட்டில் கிடந்தது. பல போராட்ட குழுக்களும், சுதந்திரத்தை நோக்கிய போராட்டங்களும் நிறைந்த காலம் அது.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் 'சே'வின் இந்த பயணம் அமைகிறது. முன்னதாக 1950-இல் தன் மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிளில் ஒருமுறையும்,பின்பு 1953-இல் மற்றொரு முறையும் 'சே' தன் நாட்டை சுற்றிப்பார்த்திருக்கிறார். இந்தப்பயணங்களே 'சே'வை வடிவமைத்தன, உருவாக்கின என்பது காலம் சொல்லும் செய்தி.



சிறுவயதில் சிறுவனாகவும், வாலிப வயதில் வாலிபனாகவும் இருந்தவன் புரட்சியாளனாக மாறமுடியும் என்பதும், ஒரு புரட்சியாளன் என்பவன் பிறந்து வருபவனில்லை, சூழலின் அழுத்தமே அவனை உறுவாக்குகிறது என்பதுதான் இந்தப்படம் நமக்குச்சொல்லும் செய்தி.


இந்த படத்தின் இறுதியில் 'சே' சொல்லும் வாசகம் இது ...


"நான் இனிமேல் நான் இல்லை, குறைந்த பட்சம் முன்பிருந்த அதே நான் இல்லை".

No comments:

Post a Comment