Monday, 29 August 2011

மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்-VIJAY ARMSTRONG

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள்.அப்படி பலப் புகைப்படங்கள், தான் சொல்ல வந்தக் கருத்தை முழுமையாக உலகத்தாருக்கு கொண்டுச் சேர்த்திருக்கின்றன. அவ்வகையில் புகழ்ப் பெற்ற சில புகைப்படங்களையும், அதன் முன்/பின் விவரங்களையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

உலகப்புகழ்ப் பெற்றப் பலப்படங்களிலிருந்து சிலவற்றை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன். அவை கடந்த கால நினைவுகள் மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும் பொருந்திப் போகக்கூடியவை. இப்புகைப்படங்கள் மானுடர்களுக்கான செய்திகளைத் தாங்கிக் கொண்டுள்ளன.


மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்:

1994-ஆம் ஆண்டுக்கான 'புலிட்சார் விருது'(Pulitzer Prize) பெற்ற இப்படம் 1993 ஆம் வருடம் சூடானில் எடுக்கப்பட்டது. சூடான் அப்போது வறுமையின் பிடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கானவர்களை பலிக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஐ.நா சபையின் மூலம் உணவு பொருட்கள் நாடு முழுவதும் பரவலாக வழங்கப்பட்டது. அப்படியான ஒரு உணவு முகாமை நோக்கி தவழ்ந்துச் சென்ற ஒரு பெண் குழந்தையை தன் உணவாக்கிக் கொள்ள காத்திருக்கும் பருந்தையும் புகைப்படமாக எடுத்தவர் 'கெவின் கார்டர்'(Kevin Carter) என்னும் புகைப்படக்காரர்.

குழந்தை எப்போது இறக்கும், நாம் எப்போது அதை உணவாக்கிக் கொள்ளலாம் என்று பருந்து காத்திருக்கும் இப்படம் வெளியான போது உலகத்தை வெகுவாக பாதித்தது. சூடானின் அப்போதைய நிலைமை இப்படம் முழுமையாக உலகத்தாருக்கு விளக்கியது. அந்தக் குழந்தை என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப் புகைப்படமாக எடுத்த கார்டருக்கும் கூட தெரியவில்லை.

இப்படத்தை இப்போது பார்த்தால் கூட நம் மனம் பதபதைக்கும். இது சொல்லும் செய்தி இன்று கூட நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஈவு இரக்கமற்ற இவ்வாழ்வின் குறுர முகத்தை நாம் கண்டு கொள்ள முடியும். இப்படம் சொல்லும் செய்திகள் பல இருக்கிறது.

இப்படத்தோடு சம்பந்தப்பட்ட இரண்டு செய்திகளை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒன்று இப்படத்தின் களமான சூடானைப்பற்றியது மற்றொன்று இப்படத்தின் புகைப்படக்காரர் கெவின் கார்டரைப் பற்றியது. இரண்டுமே நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டியவைகள்.

..............................................................................................................

தெற்கு சூடான்:
வட ஆப்பிரிக்காவிலிருக்கும் சூடான் பல நூற்றாண்டுகளாகவே அந்நிய தேசத்தவரால் அடிமைப்படுத்தப்பட்டு ஆளப்பட்டிருக்கிறது. உலகின் பெரிய நதியான 'நைல் நதி' இந்த நாட்டின் ஊடாக பாயிகிறது. இதன் பொருட்டே பல தேசங்கள் இந்த நாட்டை வசப்படுத்த முயன்றிருக்கின்றன. அதில் நமக்கு நன்றாக பழக்கப்பட்ட பிரித்தானியர்களும் அடங்குவர். வழக்கம் போல அந்நாட்டையும் பிரித்தானியர்கள் காலனியாக்கி ஆண்டு வந்திருக்கின்றனர். வடக்கு, தெற்கு என இரண்டு பகுதியாக இந்த நாடு பிரிந்துக்கிடக்கிறது. 'சூட்' என்னும் சதுப்பு நிலம் இந்த நாட்டை இரண்டாக பிரிக்கிறது. பல நூற்றாண்டு காலம் எகிப்தியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் வடக்குப் பகுதி சூடான், இஸ்லாம் மற்றும் அரேபிய மதத்தை தழுவிய நாடாக இருக்கிறது. தெற்கு சூடான் கிருத்துவத்தையும் பல உள்ளூர் மதங்களையும் அடிப்படையாகக் கொண்டது.

பதினேழாம் நூற்றாண்டு வரை பெரியதாக எந்த உள்ளூர் பிரச்சனையும் வரவில்லை. அதன் பிறகுதான் அதன் ஆட்சியாளர்கள் தெற்கு சூடான் மற்றும் அதன் உட்புறம் நிலங்களின் வளங்களை சுரண்ட முயன்று இருக்கின்றனர். பிரித்தானியர்கள் எகிப்தியர்களோடு* சேர்ந்து ஆட்சி!செய்தபோது வடக்கு மற்றும் தெற்கு சூடான் பகுதிகளை தனித்தனி நிர்வாகமாகத்தான் நிர்வகித்து இருந்திருக்கின்றனர்.

(*பிரித்தானிய காலனி, எகிப்திய அதிகாரிகள் என்ற ஒரு கூட்டு முறை. காரணம் நைல் நதி மீதான கட்டுப்பாடு - அது ஒரு தனி கதை)

வடக்குப் பகுதியில் அரேபியர்களின் ஆளுமையும் தெற்கு பகுதியில் கத்தோலிக்க கிருத்துவர்களின் ஆளுமையும் இருந்திருக்கின்றது. இரண்டு பகுதிக்கும் எப்போதும் ஒரு பிணக்கம் இருந்திருக்கின்றது. 1946-ஆம் ஆண்டுவாக்கில் வடக்கு சூடானியர்களுக்கு அதிகாரம் கிடைத்தபோது இரண்டு பகுதிகளையும் இணைக்க முயன்றிருக்கிறார்கள். தெற்கு பகுதிகளிலும் அரேபிய மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது. தெற்குப்பகுதியின் அதிகாரமும் வடக்கு சூடானியர்கள் எடுத்துக்கொண்டார்கள். இது தெற்கு சூடான் பகுதியில் கொதிப்பை ஏற்படுத்தியது. அது தொடர்ந்து வளரவும் செய்தது. பிறகு 1953-இல் பிரித்தானியர்கள் சூடானுக்கு விடுதலை தருவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு 1956-இல் சுதந்திர சூடான் அரசு அமைந்தது. அதில் வடக்கு சூடானியர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தது. தெற்கு சூடானியர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டது.

இதனால் தெற்கு சூடானில் பல போராட்டங்கள் நடந்தன. 1955-இல் துவங்கிய முதல் சூடானிய உள்நாட்டு போர் 1972-வரை நடந்தது. தெற்குப் பகுதிக்கு சுயாட்சியும் கூடுதல் அதிகாரம் வேண்டி நடந்த இந்தப் போர் சரியான தீர்வை எட்டாமல் சமரசங்களால் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த பதினேழு ஆண்டு காலப்போரில் ஐந்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

பிறகு 1983-இல் இரண்டாம் சூடானிய உள்நாட்டு போர் துவங்கியது. இதில் இருபது லட்சம் மக்கள் வறுமை,பட்டினி மற்றும் நோயால் கொல்லப்பட்டனர். நாடெங்கும் வறுமை தலைவிரித்தாடியது. பட்டினிச் சாவுகளைத் தடுக்க அந்த நாட்டால் முடியவில்லை. நாற்பது லட்சம் தெற்கு சூடானியர்கள் இடம் பெயர்க்கப்பட்டார்கள். இதில் பல தடவை இடம் பெயர்ந்தவர்கள் அதிகம். இரண்டாம் உலகப்போருக்கு பின் அதிக மக்களைக் காவு வாங்கியது இப்போர் தான். பிறகு அமைதி ஒப்பந்தங்கள் மூலம் 2005-இல் இப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

2005 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி 2011-இல் தெற்கு சூடானில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 98.83 விழுக்காடு வாக்குகளைத் தனி நாடாக பிரிவதற்கு பெற்று 9.7.2011 அன்று தெற்கு சூடான் விடுதலைப் பெற்ற தனி நாடாக மலர்ந்தது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் 54 ஆவது நாடாகவும், ஐ.நா மன்றத்தில் 193-ஆவது நாடாகவும் தெற்கு சூடான் இருக்கிறது.

தெற்கு சூடானில், இரண்டாம் சூடானிய உள்நாட்டு போர்(1983–2005) நடந்தக் காலகட்டத்தில் தான் நாம் மேலேப் பார்த்தப்படம் எடுக்கப்பட்டது. விடுதலைக்கானப் போரில் பல இன்னல்களைச் சந்தித்தும், பல லட்சம் மக்களை இழந்தும் அவர்களின் விடுதலைத் தாகம் தொடர்ந்தது. அதன் விளைவாக இன்று அத்தேசம் விடுதலைப் பெற்ற நாடாக உருவாகிருக்கிறது.

கார்டர் எடுத்த மற்றொரு படம்
..............................................................................................

'கெவின் கார்டர்':
தென்னாப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். விளையாட்டுத்துறைப் புகைப்படக்காரனாக தன் வேலையைத் துவங்கியவர். பின்பு 1993-இல் சூடானில் நடந்த உள்நாட்டுப் போரையும் அதன் பட்டினிச்சாவுகளையும் புகைப்படம் எடுக்க சூடானுக்கு போனார். ஐ.நா திட்டத்தின் மூலம் உணவு கொண்டுச்சென்ற ஒரு விமானத்தில் கார்டர் சென்றிருக்கிறார்.

கெவின் கார்டர்
அந்த விமானம் தெற்குச் சூடானியப் பகுதியில் ஒரு கிராமத்தில் உணவுப் பொருட்களைக் கொடுப்பதற்காக தரை இறங்கி இருக்கிறது. உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து முண்டி அடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கின்றார்கள். கார்டர் அதை புகைப்படம் எடுக்கத் துவங்கி இருக்கிறார். பெற்றோர்கள் உணவுப் பெறுவதில் மும்மரமாக இருந்ததால், கவனிப்பாரின்றி தனித்து விடப்பட்ட ஒரு பெண் குழந்தை உணவிற்காக அந்த உணவு முகாமை நோக்கி தவழ்ந்து வந்திருக்கின்றாள். அவளுக்கு உணவு முகாமிற்கும் ஒரு கிலோமீட்டர் தூரம். பட்டினியில் வாடிய அந்தப் பிஞ்சுக் குழந்தை போராடி தவழ்ந்து வருவதைப் பார்த்த கார்டர் புகைப்படம் எடுக்க தயாராகி இருக்கிறார். அந்த நேரம் ஒரு பருந்து அவள் அருகே வந்து அமர்ந்திருக்கிறது.

அதன் நோக்கம். அந்த குழந்தையை உண்பது. இதைப்பார்த்த கார்டர் சிறிது நேரம் காத்திருக்கின்றார். அந்த பருந்து என்னதான் செய்யப்போகிறது என்பது போல. இப்படி அவர் காத்திருந்தது 20 நிமிடத்திற்கும் மேலாக. பின்பு பருந்து பறந்துப் போய் விடாத அளவிற்கு மெதுவாக அந்தக் குழந்தைக்கு அருகில் போய் படமெடுத்திருக்கிறார். அதன் பின் அந்த பருந்தை துரத்திவிட்டு தன் விமானத்திற்கு சென்று விட்டாராம். அந்த குழந்தைப் பற்றி அவர் யோசிக்கவில்லை.

இந்தப்படம் மார்ச் 26, 1993-இல் 'நியூ யார்க்' பத்திரிக்கையில் வெளிவந்தது. அது வெளிவந்த நாளிலிருந்து பல நூறு மக்கள் அந்தக் குழந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்கத்துவங்கினார்கள். ஆனால் பத்திரிக்கைக்கு அந்தக் குழந்தையின் நிலைப் பற்றி தெரியவில்லை. அவள் உணவு முகாமை அடைந்தாளா அல்லது அவள் பெற்றோர்கள் எடுத்துச் சென்றார்களா என்பது இன்று வரை யாரும் அறியாத ஒன்றுதான்.

'அவளுடைய இன்னலை, சரியான ஒரு கோணத்தில் புகைப்படம் எடுக்கத் தன் கேமராவைக் கையாண்டுக்கொண்டிருந்த அந்தப் புகைப்படக்காரரும் ஒரு கொடுர மிருகம் தான், அந்த காட்சியின் மற்றொரு பருந்து அவர்' என்று இப்படத்தைப் பற்றி 'St. Petersburg Times' பத்திரிக்கை எழுதியது.

புலிட்சார் விருதைப் பெற்றாலும், இந்தப் புகைப்படத்தால் புகழடைந்ததுப் போலவே பல கண்டனங்களைப் பெற்றார் கார்டர். இதன் விளைவாக குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். மன உளைச்சல்கள் அதிகரித்தன.

கெவின் கார்டர் 1960-1994
1994, ஜூலை 27ஆம் தேதி கார்டர் தான் சிறுவயதில் விளையாடிய வளர்ந்த ஒரு நதிக்(Braamfontein Spruit river) கரைக்குப் போனார். அங்கே தன் காரை நிறுத்தி விட்டு, ஒரு ரப்பர் குழாயின் ஒரு முனையை காரின் புகை வெளியேற்றியில்(exhaust pipe) இணைத்து, மறுமுனையை தன் காருக்குள் கொண்டுச் சென்றார். பின் காரின் பக்க கண்ணாடிகளை மூடிவிட்டு காரை இயக்கித்தில்(switched on the engine) வைத்துத்தவர், காருக்கு உள்ளாக அமர்ந்து தன் 'Walkman'-ஐ காதில் மாட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார். காரிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைட் வாயு காருக்குள் நிரம்ப துவங்கியது. பிறகு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது 'கார்பன் மோனாக்சைடின்' விஷத்தன்மையால் இறந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

கார்டரால் எடுக்கப்பட்ட மற்றொரு புகழ்ப்பெற்றப் படம் "necklacing" in South Africa

அந்தக் குழந்தைச் சம்பந்தமான கண்டனங்களால் மனச்சாட்சி உலுக்கப்பட்ட அவர், குற்றயுணர்ச்சியின் மிகுதியில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். அவர் தன்னை மாய்த்துக்கொண்ட போது அவருக்கு வயது 33. புலிச்சார் விருது பெற்ற இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. தன் தற்கொலைக் கடிதத்தில் அவர் இப்படி எழுதி வைத்திருந்தார்.

"I am depressed ... without phone ... money for rent ... money for child support ... money for debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings and corpses and anger and pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners ... "


மேலும் அவரின் நாட்குறிப்பேட்டில் இப்படி எழுதி இருந்தாராம்.

"Dear God, I promise I will never waste my food no matter how bad it can taste and how full I may pray that He will protect this little boy, guide and deliver him away from his misery, I pray that we will be more sensitive towards the world around us and not be blinded be our own selfish nature and interests"

இந்த மனிதனின் மரணம் சொல்லும் செய்தியையும் நாம் என்றென்றும் மறந்துவிடக்கூடாத ஒன்று. பிறிதொரு நாளில் இத்தகைய குற்ற உணர்ச்சிக்கு நாம் ஆட்படாமலிருக்க வேண்டுமானால் இன்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுதான் ஒரே வழி.


பின்குறிப்பு:
வரும் பதிவுகளில் இப்படியான சிலப் படங்களைப்பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment