வியட்நாம் போர்:
நவம்பர் 1,1955 ஆம் ஆண்டு துவங்கிய இப்போர் ஏப்ரல் 30,1975-இல் முடிவுக்கு வந்தது. கம்யூனிஸ்ட் ஆதரவு வடக்கு வியட்நாமுக்கும் தெற்கு வியட்நாமுக்கும் இடையே இப்போர் நடந்தது. தெற்கு வியட்நாமிற்கு வட அமெரிக்க போன்ற கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாடுகள் துணை புரிந்தன என்பதினால் இது ஒருவகையில் பொதுவுடமைக்கு எதிரான போராக பார்க்கப்பட்டது/நடத்தப்பட்டது. அதனால் தெற்கு வியட்நாமில் உருவான 'வியட்காங்'(Viet Cong) என்னும் கொரில்லா படையும்(முறையான படைப்பிரிவும், அரசியல் தலைவர்களும் அதற்கு உண்டு) தெற்கு வியட்நாம் அரசாங்கத்தையும் அதன் ஆதரவு வட அமெரிக்கப் படைகளையும் எதிர்த்தது.
இரண்டு புறமும் பல தேசங்கள் பங்கு பெற்றன. பொதுவுடமை கருத்தாக்கத்திற்கு எதிரான அணியில் 'தெற்கு வியட்நாம், வட அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்த்திரேலியா, பிலிபைன்ஸ், நியூஸ்லாந்து, தாய்லாந்து' போன்ற நாடுகளும் பொதுவுடமை ஆதர பிரிவில் 'வடக்கு வியட்நாம், மக்கள் குடியரசு சீனா, சோவித்யூனியன் மற்றும் வட கொரியா' போன்ற நாடுகளும் ஆதரவு கொண்டிருந்தன.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் நடந்த இப்போர் வட அமெரிக்காவின் போர்கள் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. வடக்கு/தெற்கு வியட்நாமிற்கு இடையேயான போரானாலும் இதில் வட அமெரிக்காவின் பங்கு அதிகம். ஒரு வகையில் இது வட அமெரிக்கா தொடுத்த 'பொதுவுடமை சித்தாந்தத்திற்கு' எதிரானப் போர்களில் ஒன்று. போரில் அடிமேல் அடிப்பட்ட வட அமெரிக்கா, இதை தன் மதிப்பிற்கு வந்த சவாலாக எடுத்துக் கொண்டது. பெரும் ஆயுதபலம் மற்றும் பணப்பலத்தைப் பிரயோகித்தாலும் இறுதியில் இப்போர் வட அமெரிக்கர்களுக்கு தோல்வியைக் கொண்டு வந்தது. 1973-இல் வட அமெரிக்க இப்போரில் இருந்து வெளியேறியது. இன்றுவரை வட அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது என்பது வியட்நாமில் மட்டுமே நடந்த ஒன்று.
பல லட்சம் மக்களை பலி கொண்ட இப்போர் 1975-இல் தெற்கு வியட்நாமின் தலைநகரான 'சாய்கான்'(Saigon) வடக்கு வியட்நாம் படையால் பிடிக்கப்பட்டப் பிறகு முடிவுக்கு வந்தது. இரண்டு வியட்நாமுகளும் இணைக்கப்பட்டன.
இப்போர் அதன் உச்ச கட்டத்தை அடைந்துக்கொண்டிருந்த காலக்கட்டதில் ஜூன் 8, 1972-இல் 'Trang Bang' என்னும் சிறு கிராமத்தின் மீது தெற்கு வியட்நாம் படையால் போடப்பட்ட 'நேபம்'(napalm) குண்டால் துளைக்கப்பட்ட இடிபாடுகளிலிருந்துதான் அந்த ஒன்பது வயதுச் சிறுமி ஓடி வந்தாள்.
அச்சிறுமியின் பெயர் 'Phan Thi Kim Phuc'. அவளோடு அவளுடைய சகோதரர்களும் உறவினர் குழந்தைகளும் ஓடிவருகிறார்கள். குண்டுகளால் உண்டான தீ, அவளின் உடைகளை எரித்து அவளின் தோல்களிலும் பரவி இருந்தது. அவளின் கண்ணங்கள் மற்றும் உதடுகள் கூட தீயினால் கருகி இருந்தது. ஓடி வரும் போது "too hot, too hot" என்று அவள் தாய் மொழியில் கத்திக்கொண்டு வந்தாளாம்.
![]() |
Nick Ut |
அப்போது அங்கே இருந்த புகைப்படக்காரர் 'நிக்'(Nick Ut) அந்தக் காட்சியைப் படம் பிடித்திருக்கிறார். படைவீரர்கள் அவளுக்கு தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். அவளின் தோல்கள் தீயினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. புகைப்படக்காரர் நிக் அவளை தன் காரில் ஏற்றிக் கொண்டு அருகிலிருந்த இராணுவ மருத்துவ முகாமிற்குச் சென்றிருக்கிறார். அங்கே அவளுக்கு முதலுதவி தரப்பட்டு, பதினாலு மாதங்கள் சிகிச்சையில் பதினேழு தையல்கள் போடப்பட்டன.
இதன் இடையே இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வட அமெரிக்காவில் போருக்கு எதிரான பிரச்சாரத்திற்கு இப்படம் பெரிதும் உதவியது. அப்போது வட அமெரிக்காவில் வியட்நாம் போருக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. இது ஒரு தேவையற்றப் போர் என்று வட அமெரிக்க மக்கள் கருதினார்கள். வீனாக தன் இளைஞர்களை வட அமெரிக்கா பலி இடுகிறது என்ற கருத்தோட்டம் பரவி தேசம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அச்சமயத்தில் வெளியான இப்படம் மிகுந்த கவனத்திற்கு உள்ளானது. அப்போதைய அதிபர் நிக்சன் இது ஒரு சித்தரிக்கப்பட்ட போலி புகைப்படம் என்பதாகக் கூட விவாதித்தாராம்.
![]() |
| சிறுமிக்கு உதவும் படையினர் |
ஆனால் இது உண்மையானப் படம் தான். அதை பலர் உறுதி செய்தார்கள். இப்படம் எடுக்கப்பட்ட போது உடனிருந்த மற்றச் செய்தியாளர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கூட இதை உறுதி செய்தார்கள். செய்தியாளர்கள் கண் முன்னால் குண்டு வீசுவதற்கான ஆணை இடப்பட்டு அக்கிராமம் குண்டுகளால் துளைக்கப்பட்டதை அவர்கள் பதிவுசெய்தார்கள்.
தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி, பிழைக்க மாட்டாள் என்றுதான் முதலில் மருத்துவர்கள் சொன்னார்களாம். பதினாங்கு மாத கால மருத்துவதிற்குப் பிறகு பிழைத்து அவள் தன் கிராமத்திற்கு திரும்பினாள். அவள் மருத்துவமனையில் இருந்த போதும் அதன் பின் கிராமத்திலும் அவளை சென்று பார்த்து வந்திருக்கிறார் புகைப்படக்காரர் நிக். மூன்று வருடங்களுக்கு பின் போர் முடிவடைந்த போது நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
![]() |
| மற்றொரு புகைப்படக்காரால் எடுக்கப்பட்டப் படங்கள் |
சில வருடங்களுக்கு பிறகு ஒரு ஜெர்மன் பத்திரிக்கையாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அப்பெண் மீண்டும் செய்தி ஆனாள். அதன் பின் வியட்நாம் அரசாங்கம் அவளை 'போரின் அடையாளச் சின்னமாக' பயன்படுத்த துவங்கியது. அதனால் அவளின் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவிற்கு படிக்கச் சென்றாள். அங்கே தன் சக மாணவனோடு நட்பு ஏற்பட்டு அவனை திருமணம் செய்துக்கொண்டாள். பிறகு கனடா நாட்டு குடியுரிமைப் பெற்று அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.
இடையே பல கூட்டங்களில் கலந்துக்கொண்டு போரின் அவலங்களை உலகத்திற்கு எடுத்துச் சொன்னாள். ஒருமுறை அவளின் இந்த நிலைக்கு காரணமான குண்டு வீச்சை நடத்திய இராணுவ அதிகாரி, அவளை சந்தித்து மன்னிப்புக் கேட்டார். அவளை அவர் பார்த்த நொடியிலிருந்து தொடர்ந்து தன்னை மன்னிக்குப்படி கேட்டுக்கொண்டே இருந்தாராம். அவள் அவரின் கையை பிடித்து நான் உங்களை மன்னித்துவிட்டேன் என்றுச் சொன்னப் பிறகுதான் அவர் நிம்மதி அடைந்ததாக அவரே சொல்லுகிறார்.
1997-இல் 'Kim Phuc Foundation' என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம். பிறகு பல கிளை நிறுவனங்கள் இணைக்கப்பட்டு இப்போது அது 'Kim Phuc Foundation International' என்றப் பெயரில் இயங்கி வருகிறது.
1997-இல் 'UNESCO Goodwill Ambassador' ஆக நியாமிக்கப்பட்ட அவர். பல பட்டங்களை பெற்றுள்ளார்.
அதில்..
'honorary Doctorate of Law from York University'
'Order of Ontario'
'honorary degree in Law from Queen's University in Kingston, Ontario'
'honorary degree of Doctor of Laws from the University of Lethbridge' ஆகியவையும் அடங்கும்.
1999 -இல்
The Girl in the Picture: the Story of the Story of Kim Phuc, the Photograph and the Vietnam War by Denise Chong என்னும் புத்தகம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் விதத்தில் வெளிவந்து புகழ்ப்பெற்றது.
ஏதும் அறிய அந்த ஒன்பது வயதுச் சிறுமியின் மீது படர்ந்த அந்தத் தீ இன்றும் பல இடங்களில் படர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. போரின் கொடுர முகத்திற்கு சாச்சியாக அந்தப் பெண் நம்மோடு வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அதிலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.







No comments:
Post a Comment